ஒருவர் எத்தனை ஆண்டுகள் வாழ்ந்தார் என்பதை விட எப்படி வாழ்ந்தார் என்பதுதான் முக்கியம். ஒவ்வொருவருடைய வாழ்க்கையும் அவருக்கு முக்கியமானது. ஆனால், மற்றவர்களுக்கு அவர் வாழ்ந்த வாழ்க்கையின் தரம்தான் முக்கியமானது.
இறந்துவிட்ட ஒருவரின் வீட்டுக்குச் செல்கிறோம். அவரைச் சுற்றி அவர் உறவினர்கள், நண்பர்கள் இருக்கிறார்கள். அவர் வாழ்க்கை முடிந்துவிட்டது. அவர் எப்போதும் மகிழ்ச்சியாக இருந்தாரா? நிம்மதியாக இருந்தாரா? இல்லை, அவர் வாழ்க்கையே துயரமயமானதா? பல தரப்பட்ட குரல்கள் இறந்தவரைப் பற்றி ஒலிக்கும்.
"அவருக்கென்ன மூன்று வீடு, இரண்டு கார், ஏகப்பட்ட சொத்து.."
"பெரிய பதவி! எத்தனை செல்வாக்கு! அடேயப்பா!"
"மூணு பசங்க. நல்லா செட்டிலாகி ஃபாரின்லே கொழிக்கிறாங்க" என்றெல்லாம். அது சரி, இப்படிப் பேசப்பட்டவர்கள் எல்லாரும் மகிழ்ச்சியாகத்தான் இறந்து போகிறார்களா?
"பாவம்! அவருக்குக் கொள்ளிபோடக்கூட ஆள் இல்லை."
"அவர் எந்த வேலையிலும் நிலையாகவே இருந்ததில்லை. எதையும் ஒழுங்காகவே செய்ய மாட்டார்!"
"அவர் பிள்ளைகள் ஒருவரும் உருப்படியில்லை!"
இப்படி வர்ணிக்கப்பட்டவர்கள் எல்லாரும் வருத்தத்துடனும் துன்பத்துடனும்தான் வாழ்க்கையை நடத்தினார்களா?
டென்னிஸ் வெயிலி என்பவர் சொன்னது போல வாழ்க்கை என்பது ஒவ்வொருவரும் தங்களுடைய தனிப்பட்ட மனக் கண்ணால் காணுகின்ற ஒரு திரைப்படம். அங்கே என்ன நடைபெறுகிறது என்பதில் எந்த வேறுபாடும் கிடையாது. நாம் அதை எப்படி எடுத்துக் கொள்கிறோம் என்பதுதான் முக்கியம். நல்ல வாழ்க்கைத் துணை, பணம், பதவி, அதிகாரம், நல்ல குழந்தைகள் இருந்து, வாழ்க்கை முழுவதும் மூக்கால் அழுதவர்களும் உண்டு. இவை எதுவும் இல்லாமலேயெ சீட்டி அடித்துக்கொண்டு சந்தோஷமாக வாழ்ந்தவர்களும் உண்டு.
ஒரு செயல் எப்படி நடைபெறுகிறது என்பதை விட அதை நம் மனம் எப்படிப் பார்க்கிறது என்பதில்தான் மகிழ்ச்சியும் துயரமும் அடங்கியிருக்கின்றன. அதனால்தான் மனதை மந்திரச்சாவி என்கிறோம். கைநிறைய வாங்கிக்கொண்டே போதவில்லை என்றும் சொல்லலாம், வெறும் கையுடன் சிரித்துக்கொண்டே வேண்டாம் என்றும் சொல்லலாம்.
ஆக, இந்த வார ஊருக்கு உபதேசம், சிரிச்சுக்கிட்டே இருங்க!
(நன்றி: சோம.வள்ளியப்பனின் ‘உஷார்! உள்ளே பார்’ நூல்).
எச்சரிக்கை! ‘வாரம் ஒரு பக்கம்‘ தொடரும்!