சுப்ரமணியபுரம் திரைப்படத்தில் முகத்தில் தாடி வைத்துக் கொண்டு கிராமத்து இளைஞனாக வந்த ஜெய், அடுத்ததாக ஒரு அதிரடி ஆக்ஷன் திரைப்படத்தில் குதித்துவிட்டார். திரைப்படத்தின் பெயர் வாமனன். ப்ரியா ஆனந்த், லக்ஷ்மி ராய், ரகுமான், தலைவாசல் விஜய் ஆகியவர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கின்றார். படத்தின் இயக்குனர் புதுமுகம் ஐ.அஹ்மத். இவர் இயக்குனர் கதிரிடம் வேலை செய்தவராம். இதயம், காதல் தேசம், காதலர் தினம் என்று வரிசையாக மென்மையான படங்களைத் தந்த கதிரின் உதவியாளரிடமிருந்து அதிரடி ஆக்ஷன் படமா! படத்தைப் பார்த்துவிட்டு தீர்ப்பைச் சொல்லலாம்! அதற்கு முன், நா.முத்துகுமாரின் வரிகளில் அமைந்த பாடல்களைக் கேட்டுவிடலாம்.
ஏதோ சிறகை
இத்தனை அழகாய் பியானோவையும் கிடாரையும் கேட்கும் பொழுதே, இந்தப் பாடல் ஒரு அற்புதமான மெலடி என்று புரிந்துவிடுகிறது. கூடிய சீக்கிரத்தில், தன் இசையால் தாளம் போடவும் வைத்து விடுகிறார் யுவன். எதைப் பற்றிய பாடல்? காதல் டூயட்தான். ஜாவேத் அலியும் சௌம்யா ராவும் பாடியிருக்கின்றார்கள். ஜாவேத் அலியின் குரலுக்கு நாம் பழகிவிட்டோம். சௌம்யா ராவும் கேட்ட குரலே. "வேட்டையாடு விளையாடு" திரைப்படத்தில் "சிக்கி முக்கி நெருப்பே" பாடலைப் பாடியவர் இவர்தான். பாடலின் மெட்டு, இசையெல்லாம் நன்றாகவே இருக்கின்றது. ஆனால், ஜாவேத் அலி, உதித் நாராயணனுக்குத் தம்பி போலப் பாடுகின்றார். "மனதில் உள்ள ஆசை சொல்லா மௌனம் போல மோழி இல்லை" என்று பாடும்பொழுது தலையில் அடித்துக் கொள்ளாமல் இருக்க முடியவில்லை.
லக்கி லக்கி ஸ்டார்
நாம் எப்பொழுதுதான் "ஹீரோ வொர்ஷிப்"பை நிறுத்தப் போகின்றோம் என்று தெரியவில்லை. நிறுத்தாவிட்டாலும் பரவாயில்லை, ஒரு அளவோடு வைத்துக் கொள்ளலாம். எந்த அளவுகோலையும் மீறிவிடும் இந்தப் பாடல். பாடல்களுக்கு நடுவில் ராப் வேறு. சுவியும், மொஹமத் அஸ்லாமும் ப்லாசுடன் சேர்ந்து கலக்கியிருக்கின்றார்கள். பாட்டும் இசையும் நன்றாகவே உள்ளன. ஆனால் வரிகள்தான் – ஹப்பா, தாள முடியவில்லை! "இளம் பெண்கள் இதயம் இவன் உருவம் டாடூவாய் மாறுதே! சிக்ஸ் பேக் பாடியைப் பார்த்தால், சிக்ஸ்டீன் எல்லாம் பொலம்புதே! லண்டன் வாக்ஸ் ம்யூஸியம் கூட இவன் சிலை செய்யத் தேடுதே! அடடா அந்த ஹாலிவுட் கூட கால்ஷீட் கேட்டு தேடுதே!" அட அட அட அட, என்ன கொடுமை!
மனி மனி
ஏதோ டிஸ்கோதேவில் இடம்பெற வேண்டிய பாடல். தவறிப் போய் இந்த இசைத்தட்டில் வந்துவிட்டது. டி.ஜே.ஏர்ள் ராப் பகுதியை பார்த்துக் கொள்ள, ப்ரீத்தி பாடலை நன்றாகவே பாடியுள்ளார். ஹிப்-ஹாப் ஸ்டைலில் வரிகள். "நேரம் கிடைத்தால், எவனும் யோக்கியனும் இல்லை" என்றும் "உலகில் எல்லாமே காசுதான்!" என்றும் சொல்கிறார் கவிஞர். பாடலைப் பற்றி வேறேதும் பெரிதாக சொல்வதற்கில்லை.
ஒரு தேவதை
தேவதைகளின் கோரஸில் ஆரம்பிக்கின்றது "ஒரு தேவதை பார்க்கும் நேரமிது" என்ற பாடல். கொட்டாங்கச்சி வயலின் சேர்ந்து கொள்ள, அதை பின்னே தபலா தாலாட்ட, இசைத்தட்டின் சிறந்த பாடலுக்கு ஆயத்தமாகலாம். வயலினில் ராகத்தை மாற்றி, ரூப் குமார் ரதோட் பாட ஆரம்பிக்கும் இடம்… பாராட்ட சொற்கள் தேட வேண்டும். காதலியைப் பிரிந்து ஏக்கத்தில் நாயகன் பாடும் பாடல். நா.முத்துகுமாருக்கு சொல்லித்தர வேண்டுமா! அற்புதமாக வரிகளை எழுதியுள்ளார். சரணங்களுக்கு நடுவில் வரும் வயலின் மனதை வருடுகின்றது. யுவன் கலக்கியிருக்கிறார். ரூப் குமார் ரதோடின் குரலை "வெண்மதி வெண்மதியே நில்லு" பாடலுக்குப் பிறகு தமிழில் கேட்கிறோம். அவரும் அற்புதமாகவே பாடியுள்ளார். ஒரே ஒரு குறைதான். அவரின் தமிழ் உச்சரிப்பை சகித்துக் கொள்ள முடியவில்லை. ஜாவேத் அலி தேவலாம் என்று நினைக்க வைத்துவிடுகிறார்!
எங்கே போவது
விஜய் ஏசுதாசின் ஹம்மிங்கில் ஆரம்பிக்கின்றது இந்தப் பாடல். இசைக் கருவிகளின் ஆதிக்கம் இல்லாமல், விஜய்யின் குரலை மட்டும் நம்பியே யுவன் இசையமைத்துள்ளார். லேசான பீட்ஸ், கார்ட்ஸ், அவ்வளவுதான். விளைவு, பாடல் நல்ல மெலடியாக அமைந்துள்ளது. குறிப்பாக, விஜய் ஏசுதாசின் உச்சரிப்பு கச்சிதமாக இருக்கிறது. கொஞ்சம் வேதாந்தம் பேசும் பாடல். நாயகன் சோகத்தில் பாடுகிறார் போல! "இன்பம் மட்டுமே வாழ்க்கை இல்லை, கொஞ்சம் துன்பமும் வேண்டும். மழைத்துளியிலே வெயில் சேர்ந்தபின்தானே வானவில் தோன்றும்"
மொத்தத்தில் பார்த்தால், பாடல்கள் எல்லாம் நன்றாகவே உள்ளன. படத்திற்குப் படம், யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் நல்ல முன்னேற்றம் தெரிகின்றது. எல்லா விதமான பாடல்களையும் தருகின்றார். எடுத்துக்காட்டிற்கு, இந்தப் படத்தில் மூன்று நல்ல மெலடிகள், இரண்டு அதிவேகமான பாடல்கள். எல்லாம் சரி, மனிதருக்கு தமிழ் தெரியாதவர்களைப் பாட வைப்பதில் அப்படி என்னதான் மோகமோ!?
“
best