மேலே ஆகாயம், கீழே பூமி
அல்ல அல்ல, மேலே ஆகாயம்
கீழும் ஆகாயம், மேலும் கீழுமாய்
வெண்மேகங்கள் பஞ்ஜுப் பொதியாய்,
வானவெளி ஊர்தியில் அமர்ந்திருந்தேன்,
வயணமாய் வான வெளியில்
ஒரு பயணமாய் நான் இருந்தேன்.
வான வெளியின் ஊர்தியிலே – அவள்
ஒரு தேவதையாய் வலம் வந்தாள்,
எண்ணக் குவியலினால் ஈர்த்து விடலாமென்று
வண்ணக் கனவுகளால் வதனம் பார்த்திருந்தேன்;
ஒரு கண்ணசைவில் சீண்டிப் போனாள்,
ஒரு புன்னகையால் தாண்டிப் போனாள்;
இனிய நினைவுகள் என்னைச் சூழ்ந்திருக்க,
கையில் இனிப்புடன் என்னைத் தட்டி எழுப்பினாள்;
சுதாரித்து நிமிர்ந்து வேண்டாம் நன்றியென்றேன்;
அடுத்து அவள் செய்த காரியம் –
அடுத்து அடுத்து அவரவர் இருக்கைக்கு
அவசரமாய்ப் பகிர்ந்தளித்தாள்; அத்தனை இனிப்பினையும்
அள்ளிக் கொள்ளும் கைகளை அவள்
தடுக்கும் லாவகமும், நேர்த்தியும்,
என்னை அலைக்கழைக்க வைத்த பார்வையும்
வைத்தபடி அவள் விழியோர அசைவுக்காய்
நான் காத்திருந்தேன், காத்திருந்தேன்;
வானவெளிதான் அவள் விழியோ?
ப்ரபஞ்ஜம்தான் அவள் வழியோ?
என்னை மோனத்தவம் செய்யவிட்டு
தான் மட்டும் எங்கே போனாள்?
"உங்கள் கவனத்திற்கு:
நாம் இப்போது தரை இறங்கப் போகிறோம்,
உங்கள் இடுப்புப் பட்டையை இணைத்துக்
கொள்ளுங்கள், அதுதான் ஆபத்தில்லாத வழி;
இனிய பயணத்துக்கு நன்றி" என்று
அத் தேவதையின் குரல் கேட்டது;
பட்டையைக் கட்டிக் கொண்டேன்;
இறங்கியது வான் வெளி ஊர்தி,
குலுங்கியது என் மனமும் எண்ணமும்
அதிர்ந்தது அடங்கியது, தானாய் எழுந்தது,
நடந்தது, என் முன்னே கை குவித்து
மீண்டுமந்த தேவதை தேன் குரலில்
"மிக்க நன்றி மீண்டும் வருக"
கிசுகிசுப்பாய் முணுமுணுத்தாள்
நன்றி சொல்லி நான் நகர்ந்தேன்,
ஹூம் யார் பெற்ற பெண்ணோ….?