பிரம்ம தத்தர் என்ற மன்னன்,பிறரை ஒரு சொல்லும் பேச விடாமல், ஓயாமல் பேசும் பழக்கமுடையவராக இருந்தார்.அவர் அவையில் ஆலோசகராக இருந்த ‘போதி சத்வர்’ அவரைச் சந்தர்ப்பம் கிடைக்கும்பொழுது திருத்த வேண்டும் எனும் முனைப்போடு காத்திருந்தார்.
அந்தக் காலத்தில் இமயமலையின் ஒரு குளத்தில் ஆமை ஒன்று வசித்து வந்தது. இரண்டு அன்னப்பறவைகளும், இரண்டு காட்டு வாத்துக்களும் அந்தக் குளத்துக்கு இரை தேடி வந்த பொழுது அந்த ஆமையுடன் நட்பாகின. ஒருநாள் அவை அந்த ஆமையிடம், "அருமை நண்பா! இமயமலையைச் சேர்ந்த அழகிய மலைக்குன்றில் தங்கக் குகை என்னும் இடத்தில் நாங்கள் வாழ்கிறோம். அந்த அழகிய இடத்தை உனக்குக் காட்ட விரும்புகிறோம். எங்களுடன் வருவாயா?" என்று கேட்டன.
அதற்கு ஆமை, "நான் எவ்வாறு அங்கு வர இயலும்?" என்று வினவியது.
சற்றுச் சிந்தித்த அன்னங்களும் வாத்துக்களும் கடைசியில், "ஒன்று செய்யலாம்! நீ ஒரு கோலை வாயில் இறுகப் பிடித்துக் கொள்! நாங்கள் அதன் இரு முனைகளையும் எங்கள் அலகுகளால் பற்றித் தூக்கிக் கொண்டு பறந்து செல்கிறோம். சரியா?" என்று கேட்டன. ஆமையும் மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டது.
அன்னப்பறவைகளும், காட்டு வாத்துக்களும் சேர்ந்து ஆமையைத் தூக்கிச் செல்வதைக் கண்ட மக்கள் "ஆஹா! இந்த அதிசயத்தைப் பாருங்கள்" என்று வியந்து கூவினர். அதைக் கேட்ட ஆமை, "என் நண்பர்கள் என்னை அழைத்துச் சென்றால் உங்களுக்கு என்ன வந்தது?" என்று கேட்க வாய் திறந்தது. அவ்வளவுதான், வாரணாசி நகரின் அரண்மனை முற்றத்தில் விழுந்து பரிதாபமாக மடிந்தது.
அரண்மனை முற்றத்தில் திடீரென ஓர் ஆமை வானிலிருந்து வீழ்ந்து இறந்த அதிசயத்தைக் கேள்விப்பட்ட மன்னன், போதி சத்வரும் தன் சபையோர் பிறரும் புடைசூழச் சென்று பார்த்து, "குருவே! இந்த நிகழ்விற்கு என்ன காரணம்?" என்று வினவினான்.
இப்படியொரு வாய்ப்புக்காகவே காத்திருந்த போதி சத்வர், நடந்ததை ஊகித்தறிந்து மன்னனிடம் விளக்கினார். கூடவே, "ஓயாமல் அரட்டையடித்துக் கொண்டும், முடிவில்லாமல் வாயாடிக் கொண்டும் இருப்பவர்கள் இது போன்ற துயரமான முடிவைச் சந்திக்காமல் தப்ப முடியாது" என்றும் எடுத்துரைத்தார்.
"என்னை மறைமுகமாகக் குறிப்பிடுகிறீர்களா?" என்று மன்னன் வினவ, போதி சத்வர் "ஓ மன்னனே! நீங்கள் ஆனாலும், பிறர் ஆனாலும் எல்லோருக்கும் ஒன்றே சொல்வேன். அளவிற்கு அதிகமாகப் பேசுபவர்கள் துயரைச் சந்திக்க நேரும்" என்றார்.
அன்றிலிருந்து மன்னன் அளவாக, பொருள் பொதிந்த சொற்களை மாத்திரமே பேசுபவனாகத் தன்னை மாற்றிக் கொண்டான்.
மூலம்: ஜோசஃப் ஜாகப்ஸ்
மொழிபெயர்ப்பு: பிரேமா சுரேந்திரநாத்