வாசல் வரை வந்தவன்

பெண் வீட்டார் முகத்தில் திருப்தி தெரிந்தது. வந்தவர்களை நல்லபடியாக உபசரித்து அனுப்பியாகி விட்டது. அதிலும் குறிப்பாக, பிள்ளையின் அம்மா கிளம்பும்போது… பானுவை அருகில் அழைத்து "போய் வருகிறேன்" என்று சொல்லி விட்டுப் போனாள்.

சந்தானம் அப்பாடாவென்று நாற்காலியில் சாய்ந்தார். ஜானகி அருகில் வந்து நின்றாள். "என்னங்க, நல்ல பதிலா வருமா?" என்றாள்.

"என்ன சந்தேகம், உனக்கு? நம்ம பானுவைப் பிடிக்காம போயிருமா?"

பானு முகத்தில் எந்த உணர்ச்சியுமில்லை.

"என்னம்மா…பேசாம நிக்கறே?"

"இந்தளவு தழைஞ்சு போகணுமாப்பா?" என்றாள் தீவிரமான குரலில்.

சந்தானம் முகம் சுருங்கியது. சமாளித்துக் கொண்டு சிரித்தார். "இதுல என்னம்மா… தழையறது, நிமிர்றது…?"

"பின்னே, நாம செய்யிறதா இருந்த சீர் என்ன… இப்ப அவங்க டிமாண்டுக்காக ஒப்புக்கிட்டது என்ன?"… என்றாள் பானு.

வாஸ்தவம்தான், கையில் பத்தாயிரம்… இன்னும் ஐந்து பவுன், ஸ்கூட்டர் இதெல்லாம் அதிகப்படிதான். ஆனால்… இதற்காகத் திருமணத்தைத் தள்ளிப் போட முடியுமா… சிறு பெண்ணிற்கு இதெல்லாம் புரியுமா?

"உனக்கு ஏம்மா இந்தக் கவலை?"

"தப்புப்பா… அவங்க எனக்காக… என்னை மருமகளா ஏத்துக்கலே… நீங்க செய்யப் போகிற அதிகப்படியான சீருக்காகத்தான்! இதுல எனக்கென்ன பெருமை?.."

ஜானகி, பானுவின் கையைப் பற்றி அழுத்தினாள். சந்தானத்திற்கு முன்கோபம் அதிகம். சட்டென்று உணர்ச்சி வசப்படுவார். இவள் ஏதாவது வாதம் செய்யப் போக… வீண் சண்டையாக முடிந்து விட்டால்?….

"உள்ளே போம்மா பாலை அடுப்பில வச்சுட்டு வந்தேன். பொங்கிறப் போகுது…" என்றாள்.

பானு முனகிக் கொண்டே உள்ளே போனாள்.

"என்னங்க.. நானே கேட்கணும்னு நினைச்சேன். நம்மால இந்த அதிகப்படிச் சுமையைத் தாங்க முடியுமா?.." என்றாள் ஜானகி.

"ப்ச்.. எப்படியாவது சமாளிக்கணும். பார்க்கலாம்…" என்றார் சந்தானம், கண்களை மூடியபடி.

அப்போது! "ஸார்…சார்…" என்று வாசலில் ஒரு குரல் கேட்டது.

"யாரது?" ஜானகி வெளியில் வந்தாள்..

"வணக்கம்" கை கூப்பியவனைப் பார்த்ததும் திடுக்கிட்டாள். ஓ… மனோகரா! மறுபடி வந்துவிட்டானா?

"அவர் வீட்டுல இல்லையே?…

"என்ன முடிவு எடுத்திருக்கீங்கன்னு தெரிஞ்சுக்கலாம்னு வந்தேன். சரி … பிறகு வரேன்." என்றான் மனோகரன் சிரிப்பு மாறாமல்.

நல்ல பையன். நல்ல படிப்பு. ஆனால், பாவம்! வேலைதான் கிடைக்கவில்லை. திடீரென ஒரு நாள் சந்தானத்தைத் தேடி வந்து விட்டான் மனோகரன். அவரது நண்பரின் மகன்தான் அவன்.

"ஸார்… உங்க மகள் பானுவை எனக்குப் பிடித்திருக்கிறது. முறைப்படி பெண் கேட்டு வரட்டுமா?" என்றான்.

சந்தானம் ஒரு கணம் திகைத்து விட்டார். "என் பெண்ணும் உன்னைக் காதலிக்கிறாளா?"

"இல்லை ஸார். இது காதல் இல்லை. எனக்கு உங்கள் வீட்டுச் சம்பந்தம் வேண்டும் என்ற ஆசை. அதனால் வந்தேன்."

"உனக்கு வேலையே இல்லையே…! என்றார் சந்தானம், என்ன சொல்லி மறுப்பது என்ற நினைப்பில்.

"ஸார், உங்களுக்கு ஆட்சேபணை இல்லை என்றால்… எங்களின் திருமணத்தை எளிமையாக நடத்துங்கள். எனக்கு வரதட்சணையோ, பெண்ணுக்குச் சீரோ…. எதுவும் அவசியமில்லை. எனக்குக் கடனாகக் கொஞ்சம் பணம் கொடுங்கள். ரப்பர் சம்பந்தமான படிப்பு படித்திருக்கிறேன். சொந்தமாய் ஒரு தொழிற்சாலை ஆரம்பிக்க நினைக்கிறேன். மூன்று நான்கு வருடங்களில் வட்டியுடன் உங்கள் கடனைத் திரும்ப தந்து விடுகிறேன். கடன் பத்திரமும் எழுதித் தருகிறேன்!" தெளிவான குரலில் பேசினான் மனோகரன்.

உள்ளிருந்த பானு, அவன் பேசுவதைக் கவனித்துக் கொண்டிருந்தாள். அவனுடைய தன்னம்பிக்கை, அவளைக் கவர்ந்து விட்டது.

"மன்னிச்சுக்க தம்பி… ஏதோ நண்பனோட பையன்னு… இவ்வளவு நேரம் பொறுமையாப் பேசினேன். இனி… இந்தப் பேச்சு வேணாம்!"

"ஸார், சட்டுனு அந்த மாதிரி முடிவு எடுக்காதீங்க. யோசிச்சுப் பாருங்க. நான் ஒரு வாரம் கழிச்சு வரேன். அப்புறமா உங்க முடிவைச் சொல்லலாம்."

மனோகரன் திடமாக அடி பதித்துத் திரும்பிப் போனான். இன்று மறுபடி வந்திருக்கிறான். அதே நேரம், வெளியே போயிருந்த சந்தானமும் திரும்பி விட்டார். இவனைப் பார்த்ததும் முகம் சுளித்தார்.

"வணக்கம் ஸார்."
" அதான் அன்னைக்கே என் முடிவைச் சொல்லிவிட்டேனே?" என்றார் எரிச்சலாக.
"அதுல மாற்றம் எதுவும் இல்லையா?…"
"இல்லை, என் பெண்ணுக்கு வேறு இடமும் பார்த்தாகி விட்டது!"
" நன்றி…ஸார்…" முகம் சிணுங்காமல் திரும்பிப் போனான் மனோகரன்.

"ராஸ்கல் … என்ன நினைச்சுகிட்டு… அடிக்கடி வரான்?… " என்ற முனகலுடன் படியேறினார்.

"என்னங்க, பிள்ளை வீட்டிலேருந்து ஒருத்தர் உங்களைத் தேடிக்கிட்டு வந்தார். நீங்க இல்லைன்னு சொன்னதும் … மறுபடி வாரேன்னு சொல்லிட்டுப் போனார்." என்றாள் ஜானகி.

"என்னவாம்?.. பத்திரிக்கை அச்சடித்துக் கொடுக்கணும் … அது விஷயமாவா?…"

சந்தானம் உணவருந்திக் கொண்டிருந்த போது … அவர் வந்து விட்டார்.

"வாங்க … சாப்பிடறீங்களா?.."

"இல்லைங்க.. நீங்க சாப்பிட்டுவிட்டு வாங்க.."

கை கழுவி விட்டு வந்ததும் சந்தானத்துக்கு மனசுக்குள் படபடப்பாக இருந்தது. எதற்காக வந்திருக்கிறார்? பையனுடைய சித்தப்பாவோ. மாமாவோ, பெண் பார்க்க வந்தபோது பார்த்தது!

"வந்து… பத்திரிக்கை அடிக்கக் கொடுத்துட்டீங்களா?…"

"இல்லையே… ஏன்?.." என்றார் சந்தானம்.

"வேணாம்.. கொடுக்க வேணாம்!…"

"ஏன், உங்க பக்கம் யாரும் நல்லா அடிச்சுத் தருவாங்களா?…"

"இல்லே? … இந்தக் கல்யாணம் நின்னுருச்சின்னு சொல்லிட்டு வரச் சொன்னாங்க!… பையன், இப்ப கல்யாணம் வேணாம்னு பிடிவாதமா… சொல்றானாம்…"

"என்னங்க… இப்ப வந்து இந்த மாதிரி பேசிகிட்டு…"

"இன்னும் பத்திரிக்கையே அடிக்கலையே?’

"பேச்சே சரியில்லைங்க!…"

"அவங்க சொல்லிவிட்டு வரச் சொன்னதைச் சொல்லிவிட்டேன்… இனி… உங்க இஷ்டம்… உங்க பெண்ணுக்கு வேறே இடம் பாருங்க!…"

வந்தவர், பட்டென்று எழுந்து வேளியே போய் விட்டார்.

அங்கே..

அடுத்த சில மணி நேரங்கள் எல்லோருமே மிகவும் படபடப்பாக இருந்தார்கள். என்ன குமுறி என்ன பயன்?… நின்று போன சம்பந்தம் நின்றது தான்.

"ச்சே … மனுஷங்களா இவங்க?… என்றார் சந்தானம் பொருமலுடன்.

பானு எதிரில் வந்து நின்றாள். " ஏம்பா! இந்த மாதிரி நேர்மையற்ற மனிதர்களுக்காக… உங்க தன்மனத்தையும் விட்டுக்கொடுத்து, கடன் பட்டு, தேவைக்கு மேல் சீர் செய்யத் தயாரா இருந்தீங்க!… ஆனா… நேர்மையா, வீட்டு வாசப்படி ஏறி பெண் கேட்டு வந்த நல்லவரை.. விரட்டி விட்டீங்களேப்பா…"

மகளின் வார்த்தைகள் சுருக்கென்று தைத்தன.

"நீங்க பார்த்த முதுகெலும்பில்லாத வரனைக் காட்டிலும், என்னை, எனக்காகவே தேடி வந்த மனோகர் நல்ல கணவராத் தெரியறார் அப்பா!… " என்றாள் பானு. அழுத்தமான குரலில்.

" நீ சொல்றது சரிம்மா."

கண்கலங்கிட எழுந்து நின்ற சந்தானத்தின் பார்வையில் தெளிவும், முடிவும் தெரிந்தன.

About The Author