"என் முகத்தைப் பார்த்தா உங்களுக்கு அப்படியாத் தெரியுது…?"
– எதிரே பவ்யமாய் எழுந்து நின்றவரை நேருக்கு நேர் தீர்க்கமாய்ப் பார்த்து கேள்வியை அவர் முகம் நோக்கி வீசினான் சத்யன்.
அந்த அம்பு அவர் முகத்தில் கூர்மையாக இறங்கியிருக்க வேண்டும். திடீரென நிலைகுலைந்து போனார் அவர். எழுந்தவர் மீண்டும் உட்காரப் போனார்.
"எதுக்காக எழுந்திருக்கிறீங்க… வந்ததும் உங்களை நான் உட்காரத்தானே சொன்னேன்…"
உட்காரப் போனவர் மீண்டும் எழுந்தார் அவர் காரியத்தில் அவருக்கே நிதானமில்லை.
"செய்யறது தப்பு… தப்புன்னு மனசு சொல்லுது. ஆனா செய்யாம இருக்க முடியலை. அப்படித்தானே? ஏன்னா செய்து செய்தே பழகிட்டீங்க‚"
"அப்படியெல்லாம் இல்ல சார்…" அசட்டுச் சிரிப்பு உதிர்த்தார் அவர்.
இவன் முகமோ கடுமை சிறிதும் மாறாமல் இருந்தது. எதற்காக மாற்றுவது? மாற்றுவது தான் எப்படி? எது இயல்போ அதுதானே உணர்ச்சி வெளிப்பாடாய் வெடிக்கும்? அவசியமிருப்பவன் தானே மாறுபாடாக நெளிய வேண்டும்?
அவர் கையில் வைத்திருந்தது கைக்குள் போனது. விரல்களை மடக்கி மூடியிருந்தார்.
"நீங்க தப்பா நினைக்கப்படாது…"
"எதை? நீங்க கொடுக்கிறதையா? அல்லது நான் வாங்கப் போறதா நீங்க நினைக்கிறதையா?"
"அப்படியில்லை சார்… வழக்கமாச் செய்றது தான்…"
"வழக்கமான்னா? காலங்காலமா செய்திட்டு வர்றீங்களே… அதைச் சொல்றீங்களா?"
"ஆமா சார்… அதே தான்…"
"காலங்காலமா இங்கே உட்கார்ந்திட்டிருந்தவங்களும் வாங்கிட்டு வர்றாங்க… அப்டித்தானே?"
"ஆமா சார்…"
"அதுனால வழக்கம்போல எங்கிட்டயும் எடுத்து நீட்டிட்டீங்க… நானும் வாங்கிக்கணும்ங்கிறீங்க…" அவர் பதில் சொல்லவில்லை.
"இதுவரைக்கும் இருந்த எல்லா மூஞ்சிலயும் பீ அப்பினதுனால, இந்த மூஞ்சிலயும் அப்பிட்ரலாம்னு நினைச்சிட்டீங்க…"
இப்பொழுது முற்றிலுமாக அவர் தலை குனிந்திருந்தார். அந்த ஹாலில் இருந்த எல்லோர் தலையும் குனிந்து தான் கிடந்தது. கோப்புகளில் இத்தனை கவனமாய் அவர்கள் இருந்து இவன் பார்த்ததேயில்லை. கோப்பினைப் பார்க்கிறார்களா அல்லது தூங்குகிறார்களா?
வலது கடைசியில் இருந்த கணக்கர் ராமானுஜம் கைப் பேனா நழுவியது. நினைத்தது போலவே அவர் தூங்கத் தான் செய்தார். பாவம்‚ இரவு முழுவதும் அவருக்கு உறக்கம் இருந்திருக்காது. தினமும் போராட்டம் தான்.
புத்தி பேதலித்த பெண்டாட்டியுடன் தினமும் அல்லல் அவருக்கு. இருக்கவும் முடியாமல், விடவும் முடியாமல், இரண்டு குழந்தைகள் வேறு. அதுகளைப் பள்ளிக்கு அனுப்பிவிட்டு ஓட்டமும் நடையுமாக வியர்க்க விறுவிறுக்க வருவார். நெற்றியில் இட்டிருக்கும் நாமம் மூக்கிலே வழிந்தோடும். மூக்குப்பொடி வாடை வேறு ஆளைத்தூக்கும். இருப்பவர்களைக் கொல்லும். துடைக்கும் உணர்வு கூட இருக்காது.
இவனுக்கு அவர் பேரில் எப்போதும் பரிதாபம் தான்.
"என்னை மாதிரி நீங்களெல்லாம் இருந்தீங்கன்னா, என்னைக்கோ சொல்லாமக் கொள்ளாம வீட்டை விட்டு ஓடிப் போயிருப்பீங்க…" என்பார் எல்லாரிடமும்.
வழக்கமாய் மதியச் சாப்பாட்டிற்கு மேல் ரூம் சாவியைக் கேட்பார். அவர் மேல் இரக்கப்பட்டு ஒரு சாவியை நிரந்தரமாக அவரிடமே கொடுத்து வைத்திருந்தான் இவன். போய் நன்றாக ஒரு தூக்கம் போட்டுவிட்டுத் தான் வருவார். அப்பொழுது தான் முடியும் அவரால். இல்லையென்றால் மூளைக்கு ஓய்வில்லாமல் என்றைக்கோ அவருக்குப் பைத்தியம் பிடித்திருக்கும்.
"என் சகதர்மிணியோட சேர்ந்து நானும் கைகோர்த்திட்டு அலைய வேண்டிதான்…" என்பார் வேதனையாக.
"சார், உங்க ரூம் இருக்கே… சொர்க்கம் சார் அது… அதென்ன சார் இப்படி ஆளைப் போட்டு அமுக்குது…" என்று உருகி உருகிச் சொல்வார். பாவமாய் இருக்கும். அவர் உடம்பின் அயற்சியும் அவரின் பாடுமல்லவா அவரை அப்படிச் சுருட்டி அடிக்கிறது?
ராமானுஜம் தட்டச்சராய் இருந்த காலத்திலிருந்து அவரை அறிவான் இவன். உட்கார்ந்திருக்கும் அந்தப் பெரிய ஆகிருதியின் முன்னே அந்த டைப் மிஷின் மிகச் சின்னதாய்த் தோன்றும். இவர் விரல்கள் விளையாடும் வேகம், சூப்பர்ஃபாஸ்ட் ரயிலை மிஞ்சும். சடசடவெனப் பிளந்தெடுக்கும் பேய் மழையின் உக்ரம் அது‚
"சார், தயவு செஞ்சு டைப்பிஸ்டை தனி ரூமுக்குள்ள போட்ருங்க சார். சத்தம் தாங்க முடியலை. இங்க எங்க வேலை கெடுது…"
வாயு வேகம், மனோ வேகம் எல்லாவற்றையும் விட அதிவேகம் ராமானுஜம் டைப்படிப்பது.
அது அவர் தனியாய்த் திரிந்த காலம். கல்யாணம் என்பது தான் அவரை இப்படி மாற்றிப் போட்டு விட்டது. அத்தைப் பெண், அத்தைப் பெண், என்று உறவிலேயே கட்டி வைத்து விட்டார்கள் அந்தக் குடும்பத்தில் ஏற்கனவே சில குறைபாடுகள்…
"எங்கதான் சார் இல்ல. வீட்டுக்கு வீடு வாசப்படி தான். எங்க அத்தை, கால்ல விழாத குறை சார்… கதறி அழறாங்க… என்னை என்ன பண்ணச் சொல்றீங்க? சின்ன வயசிலேயிருந்து எங்க குடும்பத்துக்கு நிறைய உபகாரம் செய்தவங்க… அவங்க உதவியினால தான் எங்க குடும்பமே ஏதோ ஓரளவுக்கு இன்னிக்கு ஜீவிச்சிட்டிருக்கு. கோவில் உண்டக்கட்டிய நம்பி இருந்த எங்க குடும்பத்தைக் கடைத்தேற்றினவங்க அவுங்க தான்…"
"எனக்கெதுக்கு இவ்வளவு துட்டு? ஏற்கெனவே இரண்டு விளங்காமப் போயிடுத்து. அதுகள் ஆயுசுக்கும் கொஞ்சம் ஒதுக்கிட்டேன்… இவ ஒருத்தி தான்… வெளில கொடுத்துத்தான் ரெண்டு சப்பட்டையாப் போச்சு… கண்ணெதிரிலே ராமானுஜம் இருக்கான்… அந்த பெருமாளுக்கே என் பொண்ணை தாரை வார்த்துடறேனே… ஏத்துக்கப்படாதா…?"
இதைச் சொல்லிய போது அவர் நின்று கண்கலங்கிய காட்சி இவன் மனத்திரையில் ஓடியது. நல்ல மனதுள்ளவர்களையும், நல்லதையே நினைத்துச் செய்பவர்களையும் கூட வாழ்க்கை எப்படியெல்லாம் நிலைகுலையச் செய்து விடுகிறது.
"எல்லாம் கர்மவினை சார்… எங்க அப்பா அப்படித்தான் சொல்லுவார். என்னை என்ன செய்யச் சொல்றீங்க…?"
அடிக்கடி ராமானுஜத்திடம் வெளிப்படும் அந்த வார்த்தைகள்…‚ "என்னை என்ன செய்யச் சொல்றீங்க…?" எத்தனை இடங்களில் எத்தனை மனிதர்கள் இதே வார்த்தைகளைச் சுமந்து கொண்டு இந்த வாழ்க்கையின் அவலங்களையும் சுமந்து சகித்துக் கொண்டு கழிக்கிறார்கள்.
இருக்கையிலேயே தூங்கும் அவரை இவன் ஒன்றும் சொல்வதில்லை. சொல்லிப் பயனில்லை. "கர்ர்ர்ர்ர்…" என்ற ஒரு நீளக் குறட்டையோடு தனக்குத தானே விதிர்த்து விழித்துக் கொள்வார். பிறகு வேலை தொடரும். இரவு எத்தனை நேரமானாலும் அன்றைய வேலையை அன்றே முடித்துவிட்டுத்தான் எழுவார். பிறகென்ன? டைப்பிஸ்டாய் இருந்த காலத்திலும் சரி, இன்று பதவி உயர்வில் இருக்கிறபோதும் சரி, வேலையில் அதே வேகம் இம்மியும் குறையவில்லை.
எதிரே இருந்தவர், "சார், அப்புறம்…?" என்றார்.
அந்த… அப்புறம்… என்ற சகஜமான வார்த்தையே இவனுக்குப் பிடிக்கவில்லை.
உன்னோடு தோளில் கைபோட்டவனுக்கல்லவா நீ இந்த வார்த்தையைச் சொல்ல வேண்டும்.
"போயிட்டு வாங்க… ரெண்டு நாள் ஆகும்."
"சார்… ர்ர்ர்…"
"ஆமாங்க… இத்தனையையும் வெரிஃபை பண்ண வேணாமா…? இருபத்தஞ்சு பர்ஸன்ட் செக்கிங் என் சார்ந்த வேலை… பார்த்துத்தான் போட முடியும்…"
"எல்லாமே இன்ஜினியர் பார்த்துட்டார் சார். நீங்க வெறுமே இன்ஷியல் மட்டும் பண்ணினாப் போதும்…"
"மொட்டை இன்ஷியல் போடுன்றீங்க… உங்களுக்குச் செக்குத் தர்றது நானா? இன்ஜினியரா…?"
"நீங்க தான் சார்… இன்னைக்குச் செக்கை வாங்கி கேஷ் பண்ணினாத்தான் சார் நாளைக்கு அடுத்த வேலையை ஆரம்பிக்க முடியும்…"
"அதுக்காக நான் கண்ணை மூடிட்டுப் போட முடியுமா? என்ன சொல்றீங்க நீங்க?"
"சார்… கொஞ்சம் தயவு பண்ணுங்க சார்… பார்மாலிட்டீஸை வழக்கம் போல செய்துடுவோம்… அதைப் பற்றி நீங்க எதுவும் நினைக்க வேணாம்…"
"இப்டி எதிர்க்க உட்கார்ந்திட்டு என்னை டார்ச்சர் பண்ணாதீங்க… ஆபீஸ் ப்ரொசீஜர் எப்படியோ அப்படித்தான் என்னால செய்ய முடியும்… உங்க ஃபார்மாலிட்டீஸையெல்லாம் அங்கயோட நிறுத்திக்குங்க… நீங்க போயிட்டு ரெண்டு நாள் கழிச்சு வரலாம்…" சொல்லிவிட்டு இருக்கையை விட்டு எழுந்தான்.
"ராமானுஜம்… வர்றீங்களா… ஒரு டீ சாப்டிட்டு வரலாம்…"
"நா வாங்கிட்டு வரச் சொல்றேன் சார்…" அந்த ஆளின் குரலை இவன் சட்டையே செய்யவில்லை.
உட்கார்ந்த மேனிக்கே உறக்கத்திலிருந்து திடீரென விழித்ததால், வாயிலிருந்து எச்சில் வழிய, அதைக் கையால் பிடித்துத் துடைத்துக் கொண்டே எழுந்தார் ராமானுஜம்.
எப்பொழுதுமே ரப்பர் செருப்பு தான் அணிவார் அவர். படக் படக்கென்று சத்தம் எழுப்பும் அது. தனது வருகைக்கான அடையாளமாய் தாமதமாய் வரும் பொழுதுகளில் உதவியாய் உணர்ந்தார் அதை.
வெளியில் நடக்கையில், "சார்… ஒண்ணு சொல்லணும் உங்ககிட்டே, சொல்லலாமா?" என்று ஆரம்பித்தார் ராமானுஜம். வெகு நேரமாக அதற்காகக் காத்துக்கொண்டிருந்தது போல் இருந்தது அவர் ஆரம்பித்தது.
"சொல்லுங்க…" என்றான் இவன்.
"உங்க பேரு சத்தியமூர்த்தியா இருக்கலாம் சார்… ஆனா இங்க நீங்க சத்யமா இருக்க முடியாது சார்…"
லேசாய்ப் புன்னகைத்தவாறே இவன் அவரைப் பார்த்தான்.
"ஆமா சார்… சத்தியமான உண்மை இது… விளையாட்டுக்குச் சொல்லலை…" மீண்டும் அழுத்தம் கொடுத்தார் ராமானுஜம்.
பதில் பேசாமல் யோசனையோடு நடந்தான் சத்யன்.
"என் சர்வீசிலே நான் எவ்வளவோ பார்த்துட்டேன் சார்… திருச்சில நான் இருந்த போது இப்படிச் சொல்லிட்டிருந்த ஒரு மானேஜரை, அவர் வயலூருக்கு டூ வீலர்லே போகறச்சே இடைமறிச்சு அடிபின்னி எடுத்துட்டாங்க. பிறகு அவர் ஆபீசுக்கே வரலை. அப்படியே லீவைப் போட்டுட்டுப் போனவர் தான். மெட்ராஸ் போயிட்டார் ஒரேயடியா…‚ இவுங்களெல்லாம் ரொம்ப வருஷமா தொடாந்து நம்ம ப்ராஜக்ட் ஒர்க் பார்த்திட்டிருக்கிறவங்க சார்… ஆளுகளைக் கூட மாத்த முடியாது… யாரையும் எதுக்கவும் முடியாது. அவுங்களால எந்தப் பிரச்சனையும் வராது. ஏன்னா எந்தச் சிக்கல்னாலும் அவுங்களே சமாளிச்சிக்குவாங்க… நாளைக்கு ஆடிட்ல பிரச்சனை வந்தாலும் கையைக் காண்பிச்சி விட்டாப் போதும்… வேணுங்கிறதைக் கவனிச்சு அனுப்பிடுவாங்க… சொல்லப் போனா அவங்களுக்காகத் தான் ஆபீஸே நடக்குதுன்னு வச்சிக்கிங்களேன… வெறுமே சீலைப் போட்டு சைன் பண்ணச் சொன்னாத் தப்பு… அதுவும் செய்வாங்க… ஆனா அது வேறே மாதிரி ஆளுகளுக்கு… உங்களுக்கில்லே… இது நீங்கங்குறதுனால தான் இந்த மரியாதை… ஆகையினால எதுக்கு சார் பிரச்சனை…? உங்க நல்லதுக்காகச் சொல்றேன். நன்மைக்காகச் சொல்றேன்…"
(மீதி அடுத்த இதழில்)
(‘திரை விலகல்’ மின்னூலிலிருந்து)
To buy the EBook, Please click here
“