வழித்தடம்(1)

அந்தச் செய்தியைப் பார்த்ததும் எனக்கும் சுசிக்கும் சண்முகம்தான் நினைவுக்கு வந்தான்.

"ஏங்க, சண்முகம் நிக்கிறானா பாருங்க" என்று சொல்லிவிட்டு டி.வி-யில் தெரியும் முகங்களில் சண்முகத்தைத் தேட ஆரம்பித்துவிட்டாள் சுசி. ஆனால், நொடியில் அந்தச் செய்தி மாறிப்போனது.

"சண்முகம் சாதாரண டிரைவர், வேலையாள். அவனத்தான் நிப்பாட்டி பேட்டி கேக்கப்போறாங்களா? சரியான ஆள்டி நீ!"

சுசிக்கு ஏமாற்றமாக இருந்தது. சுசி, சண்முகத்தின் மேல் சகோதரியைப் போலப் பாசங்கொண்டவளாகிவிட்டாள். சுசிக்கு மட்டுமல்ல, மகன் பிரணவுக்கும் அவன் மேல் பிரியம். அங்கிள், அங்கிள் என்று ஒட்டிக்கொள்வான். இத்தனைக்கும் அந்த ஒரு நாளில்தான் அவனைப் பார்த்ததும் பேசியதும் பழகியதும். அதன் பின், ஓரிரு முறை சுசி அவனோடு செல்போனில் பேசியிருக்கிறாள். அப்போழுதெல்லாம் அவள் "சீக்கிரம் கனியோடு போய்ச் சேர்ந்துவிடு" என்று மட்டும் சொல்லுவாள். அவனுக்கு சுசி தன்னை மறக்காமல் போனில் பேசுவது ரொம்பவே மகிழ்ச்சி.

"அக்கா! அக்கா" என்றுதான் அழைப்பான்.

சண்முகத்தைக் கடந்த விடுமுறையில் சுற்றுலா சென்றபோதுதான் பார்த்தோம். நாங்கள் தங்கியிருந்த விடுதியில் டிரைவராகவும், வேலையாளாகவும் இருந்தான். சண்முகம் இளைஞன். இறுக்கமான ஒரு டி-சர்ட்டும், முக்கால் பேண்ட் ஒன்றும் அணிந்திருந்தான். அவன் உடையின் இறுக்கத்தை மீறி அவன் உடல் முறுக்கு வெளியே தெரிந்தது. முகத்தில் எப்போதும் ஒரு சிரிப்பை நிரந்தரமாக வைத்திருந்தான். யாராவது அவன் பேர் சொல்லி அழைத்தபடியே இருந்தனர். அவன் முகம் சுளிக்காமல் ஓடிக்கொண்டிருந்தான். நாங்கள் சென்று சில மணிநேரங்களிலேயே அவன் எங்களைக் கவர்ந்துவிட்டான். மலைப்பாதையில் பயணித்த களைப்பு கொஞ்சம் அதிகமாக இருந்தது. கொஞ்சம் ஓய்வெடுக்கலாம் என்றால் பிரணவ் அவ்வளவு நேரம் காரில் தூங்கிவிட்டு ரொம்பவே சுறுசுறுப்பாக மாறியிருந்தான். அவன் என்னை வெளியிலேயிருந்த தோட்டத்தில் விளையாட அழைத்தான். நான் மறுத்துக்கொண்டிருந்தபோதுதான் சண்முகம் அங்கு வந்தான்.

"நீங்க ரெஸ்ட் எடுத்துக்குங்கோ சார்! நான் சும்மாத்தான இருக்கிறேன், நான் பாத்துகிறேனுங்க" என்றான். புதியவனை நம்பி எப்படி அனுப்புவது என்று நான் எண்ணிக்கொண்டிருக்கையில் சுசி, "நான் பார்த்துகிடுறேன்" என்றாள். சுசி, அறையின் வாசலிலேயே அமர்ந்து பிரணவ் தோட்டத்தில் விளையாடுவதைப் பார்த்துக்கொண்டிருந்தாள். சண்முகம் அவனோடு ஆனந்தமாக விளையாடிக்கொண்டிருந்தான். நான் நல்ல தூக்கம் போட்டு எழுந்தேன்.

இருள் மெல்ல மெல்ல அந்தக் குடியிருப்பைக் கௌவிக்கொள்ளத் தொடங்கியிருந்தது. இப்போழுது பிரணவ் அடுத்த தூக்கத்துக்குத் தயாராகிக்கொண்டிருந்தான். "பிரணவ், தூங்காதே! நமக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கு."

"என்னப்பா, எங்கையாவது போறோமா?"

"ஆமா!"

"எங்கப்பா?"

"ஜங்கிள் சபாரி!"

"என்னது ஜங்கிள் சபாரியா? சொல்லவேயில்லையே? இப்பவாப்பா? ஹை ஜாலி! ஜாலி" என்று குதிக்கத்தொடங்கினான். சுசிக்கும் இதைப்பற்றி நான் சொல்லியிருக்கவேயில்லை.

"ஏங்க, இருட்டிடுச்சி இப்போ எங்க போகணுங்கிறீங்க? அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம்!"

"ஏற்கனவே ஹோட்டல்ல சொல்லி வண்டி அனுப்பச் சொல்லியாச்சு. இப்போ வந்துரும்" என்று சொல்லிமுடிக்கவும் சண்முகம் வாசலில் வந்து நின்றான்.

"சார், ஜீப் ரெடி" என்றான்.

சுசிக்குக் கோபம் வந்தது. அவள் சண்முகத்திடம் சென்றாள்.

"ஏன் சண்முகம், எங்க கூட்டிட்டுப் போவாங்க?"

"ரொம்ப தூரம் இல்லைங்க, இங்க இருந்து ஒரு ரெண்டு கிலோமீட்டரு மைசூரு ரோட்டுல போயிட்டு திரும்பி வந்துர்ரதுதானுங்க."

"அவ்ளோதானா?"

"ஏங்க, இதப் பகல்ல பாக்கலாம்ல? பாக்கப் பச்சை பசேல்ன்னாவது இருக்கும். இப்போ போனா என்ன தெரியும்? காசுக்குப் புடிச்ச தெண்டம்" என்றாள்.

"இல்லைங்கம்மா! பகல்ல எதுவும் வெளில வராதும்மா" என்றான் சண்முகம்

"எதுவுமின்னா என்ன அங்கிள்?" பிரணவ் கண்ணில் ஆர்வம் கூடியிருந்தது.

"ஆனை, காட்டெருமை,கரடி, மான், அதிருஷ்டம் இருந்தா சிறுத்த கூடப் பாக்கலாம்."

"வாவ்! நெஜமாவா அங்கிள்?"

"நிஜமாவா சண்முகம்? யானையெல்லாம் வருமா?"

"நிசந்தானுங்க! ரோட்டோரத்துல கூட்டமா நின்னு மேய்ஞ்சுக்கிட்டு இருக்குமுங்க."

"பயமில்லையா?"

"பயப்பட என்னங்க இருக்கு? அதுங்க பாட்டுக்கு அதுங்க, நாம பாட்டுக்கு நாம. அதுங்கள நாம தொந்தரவு செய்யாத வரயில அதுங்க ஒண்ணும் செய்யாதுங்க."

சுசி இப்போது ஆர்வமும் பயமும் கலந்தவளாகிவிட்டாள். அவள் விழிகளில் அது தெரிந்தது. நாங்கள் புறப்பட்டு ஜீப்பை நெருங்கியதும் சுசி மீண்டும் தகராறு செய்தாள்.

"ஏங்க, என்னங்க இது ஓபன் ஜீப்பா இருக்கு? இது சேப்டியா, சொல்லுங்க!"

இப்போதும் சண்முகம் குறுக்கே வந்தான்.

"அக்கா! கூண்டு வச்ச வண்டில்லாம் சரணாலயத்துக்குள்ளதானக்கா. இங்க மலக்காடெல்லாம் இது மாதிரிதான் வண்டிங்க, எரநூறு முந்நூறு ஓடுதுங்க. பயப்படாதீங்கக்கா நா இருக்கேன்" என்று சொல்லி ஜீப்பை ஸ்டார்ட் செய்தான் சண்முகம்.

உண்மையில், சுசியின் கருத்தில் எந்தத் தவறும் இல்லை. போனவாரம் கூட, இப்படி ஒரு வண்டியில் போன ஒரு வெளிநாட்டுக்காரன் தனது புகைப்படம் எடுக்கும் ஆர்வத்தில் யானை ஒன்று அருகில் வருவது கூடத் தெரியாமல் நின்றிருக்கிறான். அவ்வளவுதான், யானை அவனைத் தூக்கி வீசி எறிந்துவிட்டது. இதெல்லாம் சுசி அறிந்தால் இந்தக் கணம் வண்டியை நிறுத்தச் சொல்லி ஓடிவிடுவாள்.

சர்ச்சைகள் ஓய்ந்து நாங்கள் கிளம்பியிருந்தபோது இருள் அந்தப் பகுதியை மொத்தமாகக் கௌவியிருந்தது. ஓடும் ஜீப்பின் முன்னால் விழும் விளக்கின் வெளிச்சம் அன்றி வேறதுவும் வெளிச்சம் இருக்கவில்லை. நாங்கள் ஒவ்வொருவரும் கூட இருளால் ஆன ஆடைகளை அணிந்து கொண்டதைப்போல இருளுருவமாகவே தெரிந்தோம். அந்தப் பகுதியில் வேறு சத்தங்கள் ஏதுமில்லாமல் இருந்தது. சுசி பயத்தையும், பிரணவ் ஆர்வத்தையும் முகத்தில் பூசிக்கொண்டிருந்தனர். நான் பயப்படவில்லை என்று சொல்லிவிட முடியாது. ஆனாலும் ஆர்வம் என்னைக் கொண்டுசெலுத்தியது. சண்முகம் மிகவும் குறைவான வேகத்திலேயே ஜீப்பைச் செலுத்திக் கொண்டிருந்தான். அவனுக்கு அந்தப் பகுதி மிகவும் பழக்கப்பட்டது என்பது அவன் அலட்சியமான முகபாவத்திலேயே தெரிந்தது. அவன் பார்வை சாலையில் நிலைகொள்ளாமல் இருபுறமுமான புதர்களின் மேல் ஊர்ந்துகொண்டு வந்தது. இருளில் அவன் அப்படி என்ன பார்க்கிறான் என்று தோன்றியது. ஓரிடத்தில் அவன் வாகனத்தை நிறுத்தினான்.

"சார்! அங்க பாருங்க ரெண்டு மானுங்க நிக்குது" என்றான்.

அவன் கைகாட்டிய திசையில் எதுவும் தெரியவில்லை. ஒரே இருளாய் இருந்தது.

"எதாவது சொல்லாதப்பா! ஒண்ணும் தெரியலையே" என்றேன்.

அவன் ஜீப்பைக் கொஞ்சம் கோணலாகச் சாலையில் நிறுத்தி, ஹெட்லைட் வெளிச்சம் அங்கு படுமாறு செய்தான். அங்கு மேட்டில் இரண்டு மான்கள் மேய்ந்துகொண்டிருந்தன. அதைப் பார்த்ததும்,

"அங்கிள் சூப்பர்! எப்படி அங்கிள் பாத்தீங்க"பிரணவ் உற்சாகமாகிவிட்டான். சுசியும்தான்.

"சத்தம் போடாத தம்பி! ஓடிடும்" சண்முகம் எச்சரித்தான்.

கொஞ்ச நேரம் எங்களை மதிக்காமல் மேய்ந்துகொண்டிருந்த மான்கள், சில நிமிடங்களில் அங்கிருந்து பாய்ந்து ஓடி மறைந்தன. சண்முகம் ஜீப்பை மெல்ல அங்கிருந்து நகர்த்தினான். இருளில் சண்முகம் எதையாவது தேடிக் கண்டடைந்து அதைக் காட்டிக்கொண்டு வந்தான். ஒரு முறை காட்டெருமை, ஒரு முறை காட்டுப்பூனை, ஒரு முறை குரங்குக்கூட்டம் என எங்களுக்குக் காட்டிக்கொண்டே வந்தான். ஒவ்வொரு முறையும் இருளில் அவன் விலங்குகளைக் கண்டு சொல்லும் திறம், அவனுக்கும் அந்தக் காட்டுக்குமான உறவினை எடுத்துச் சொல்லியது. கொஞ்ச தூரம் போனதும் மீண்டும் ஜீப்பை நிறுத்தினான்.

"சார்! சத்தம் போடாம இடது பக்கம் பாருங்க" என்றான்.

பார்த்தோம். கரிய பாறைகள் நான்கைந்து கிடந்தன. சில நொடிகளில் அவை அசைந்தன! அவை பாறைகள் அல்ல. அவை யானைகள்! மொத்தம் ஐந்து ஆறு யானைகள் இருக்கும். மரங்களில் இருந்து இலைகளை ஒடித்துத் தின்று கொண்டிருந்தன. எங்களின் கிராமங்களில் ஆடுகள் இப்படி மேய்ந்துகொண்டிருப்பதைப் பார்த்திருக்கிறேன். ஆனால், இங்கு யானைகள். பத்தடி வேகமாக நடந்தால் சில நொடிகளில் யானைகள் நம்மைத் தொட்டுவிட முடியும். ஒரு யானை படுத்தும் பாடு எவ்வளவு என்பதை டி.வி-யில் பார்த்திருக்கிறோமே, இவை அத்தனையும் சேர்ந்தால் என்ன ஆகும் எங்கள் கதி! ஒரு கணம் மனத்துள் அச்சம் எழும்பி அடங்கியது. பிரணவ் கண் சிமிட்டவேயில்லை. சுசி இப்போழுது முழுதும் பயம் தெளிந்து தனது பெரிய கண்கள் விரிய அவற்றைப் பார்த்துக் கொண்டிருந்தாள். நான் இப்பொழுது நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து,

"சண்முகம் புறப்படுங்க!" என்றேன்.

பிரணவ், "அப்பா! இன்னும் டூ மினிட்ஸ்" என்று கெஞ்சினான்.

வண்டியை நகர்த்திக்கொண்டே சண்முகம்,

"அதுக்கென்ன தம்பி, இன்னும் போகப்போக வழியெல்லாம் ஆனைதானுங்க" என்றான். எனக்குள்ளாக அமிலம் சுரக்கத் தொடங்கியது.

(மீதி அடுத்த இதழில்)

About The Author