வள்ளுவருடன் 60 வினாடி பேட்டி

(கேள்விகள் – கற்பனை, பதில்கள் – உண்மை)

வணக்கம், வள்ளுவா. ராமனையும் கண்ணனையும் கடவுளாகக் கும்பிடுகிறார்களே. இது நியாயமா?

வள்ளுவன்: வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன்
வான் உறையும் தெய்வத்துள் வைக்கப் படும்.

அட, உமக்கும் இந்த கடவுள் நம்பிக்கை உண்டா?

வள்ளுவன்: அகர முதல எழுத்து எல்லாம்
ஆதி பகவன் முதற்றே உலகு

அது போகட்டும், இன்றைய இளைஞர்களுக்கு நீவீர் கூறும் அறிவுரை?

வள்ளுவன்: "உள்ளுவது எல்லாம் உயர்வு உள்ளல்"
"முயற்சி திருவினை ஆக்கும்"

என்னப்பா! எத்தனை மனு போட்டாச்சு, பிள்ளையாருக்கு எத்தனை தேங்காய் உடைச்சாச்சு. ஒன்றும் நடப்பதில்லையே?

வள்ளுவன்: "தெய்வத்தால் ஆகாது எனினும் முயற்சி தன்
மெய் வருத்தக் கூலி தரும்"

சரியாப் போச்சு, துன்பமில்லாமல் வாழ வழியே கிடையாதா?

வள்ளுவன்: யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன் (குறள் 341)

"அவா இல்லார்க்கு இல்லாகும் துன்பம்" (குறள் 368)

"இடுக்கண் வருங் கால் நகுக"

வள்ளுவா, கொஞ்சமாவது பிராக்டிகலாக பதில் சொல்லேன். ஆசையை விட நாங்கள் என்ன ஆதி சங்கரரா? புத்தரா? ஏசுவா? ஏற்கெனவே ஊருக்கு ஊர் சாமியார் வழிபாடு! இது என்ன பகுத்தறிவா?

வள்ளுவன்: தன்னுயிர் தான் அறப் பெற்றானை ஏனைய
மன்னுயிர் எல்லாம் தொழும் (268)

யாரையப்பா நம்புவது? நீ இருந்த காலம் வேறு, எங்கள் காலம் வேறு.
1008 டெலிவிசன், பத்திரிகைகள் இருக்கின்றனவே?

வள்ளுவன்: எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும்
அப்பொருள் மெய்ப் பொருள் காண்பது அறிவு (423)

நீவிர் சுத்த சைவமோ?

வள்ளுவன்: கொல்லான் புலாலை மறுத்தானை கை கூப்பி
எல்லா உயிரும் தொழும் (260)

இவ்வளவு பேசற நீங்க அஹிம்சாவாதி இல்லையாமே! மரண தண்டனை வேண்டும் என்று சொல்றீராமே?

வள்ளுவன்: கொலையில் கொடியாரை வேந்து ஒறுத்தல் பைங்கூழ்
களை கட்டதனோடு நேர் (550)

சரி, சரி! 60 நொடி முடியப்போகுது. திருவிளையாடல் சினிமா பாணியில் டக் டக் என்று பதில் சொல்லு பார்ப்போம்.

பணம் தேவையா?

இல்லாரை எல்லாரும் எள்ளுவர் (752)

எது நல்ல செல்வம்?

அருட் செல்வம் செல்வத்துள் செல்வம் (241)

எது நல்ல குணம்?

நன்றி மறப்பது நன்றன்று (108)

யார் நல்ல நண்பன்?

நெஞ்சத்து அக நக நட்பது நட்பு (786)

வள்ளுவா, நன்றி. கொஞ்சம் பக்கத்துல வா, காதுக்குள்ள ஒரு கிசு கிசு சொல்றேன். தமிழ்ல இப்ப 10,000 ‘பிளாக்’குகள் இருக்கு. கணினி தெரிஞ்ச எல்லாரும் உன் குறளுக்கு, புதுசு புதுசா பொருள் எழுதறாங்க. ஜாக்கிரதை!

About The Author

3 Comments

  1. Dr. S. Subramanian

    Nice! Very imaginative construction of an imaginary interview. I like the crispness of the questions and answers too.

  2. chithra

    மிக அருமை.னான் டமில் ஆச்ரியை உஙல் கர்பனை மகில்சி அலிக்கிரது.

  3. Janani

    மிகவும் ரசித்தேன். வல்லுவரிடம் நீங்கல் விடுத்த WARNING மிகவும் உன்மை.

Comments are closed.