வளைக்காதே, ஒடிஞ்சி போகும் (2)

அந்தக் கடையையொட்டி ஸ்கூட்டரை நிறுத்திவிட்டு, ஹெல்மெட்டைக் கழட்டி ஸ்கூட்டரிலேயே வைத்து விட்டு, ஹெல்மெட்டோடு என்னுடைய சுய கௌரவம், மமதை, ஈகோ எல்லாவற்றையும் கழட்டி வைத்து விட்டுக் கடைக்குள்ளே பிரவேசித்து, அந்த முதலாளிக்கு சலாம் சொன்னால், என் சலாமுக்கு பதில் சலாம் சொல்லக் கூட மனசிறங்கவில்லை அந்த ஆள்.

டாக்டர் மச்சானிடம் இதைச் சொன்ன போது, “அப்ப அந்த எடம் வேண்டாம்” என்று மங்களூர் மெய்லில் ஏறிவிட்டார்.

மச்சான் கிளம்பிப்போன மறுநாள் பஷீர் மெல்ல நெருங்கி வந்து, “அண்ணே” என்று ஆரம்பித்தான்.

“இது….. வந்து…. நா ஒண்ணு சொன்னாக் கோச்சுக்கக் மாட்டீங்களே….”

“சொல்லுப்பா.”

“திருநெல்வேலியிருந்து லெட்டர் வந்திருக்கு. வாப்பா எழுதியிருக்காக.”

“ஊருக்குப் போய்ட்டு வரேங்கியா, போய்ட்டு வா. அம்மாக்கு இன்ஸுலின் போடறது தான் ப்ராப்ளம். போய்ட்டு ரெண்டு நாள்ல வந்துருவியா?”

“அதில்லண்ணே, வாப்பா துபாய்ல ஒரு ஆள்ட்ட எனக்காகச் சொல்லி வச்சிருந்தாகளாம். அந்த ஆள் விஸா அனுப்பியிருக்காராம். இன்னும் ஒரு வாரம், பத்து நாள்ல கௌம்பணுமாம்.”

திடுக்கென்றது. இந்தப் பையன் போய்விட்டால் ஒரு கை ஒடிந்தது போல ஆகிவிடுமே. இன்னும் ரெண்டு மாசம் அவகாசமிருந்தால் ஒரு மாற்று ஏற்பாட்டுக்கு முயற்சிக்கலாம். கொஞ்சம் தாமதித்துப் போக முடியுமா என்று கேட்டுப் பார்க்கலாமா?

“விஸா சரி, பாஸ்போர்ட்?” அவனிடமே கேட்டேன்.

“பாஸ்போட்டெல்லாம் ரெடியா எடுத்து வச்சிருக்கேண்ணே” என்று தலையைச் சொறிந்தான்.

“எனக்குத் தெரியாம எப்ப எடுத்தப்பா?”

“நம்ம கட இருக்கும்போதே எடுத்துட்டேண்ணே.”

புத்திசாலித்தனமாய்த்தான் செயல்பட்டிருக்கிறான். அட, நான் தான் மடையன்.

பஷீர் போய்விட்டான்.

அவன் போவதற்கு முன்னால், அம்மாவுக்கு இன்ஸுலின் போடுவதற்கு அவனிடமே பயிற்சி எடுத்துக் கொண்டேன். அம்மாவின் புஜத்தில் ஊசியைச் செலுத்துவதற்கு ஆரம்பத்திலிருந்த மறுப்பு சில நாட்களில் சரியாய்ப் போனது.

வாப்பாவின் உடல் நலம் முன்னிலும் மோசமாகி, நடமாட சங்கடமாய்ப் போனதால், பள்ளிவாசல் போக வேண்டிய நிர்பந்தம் இல்லை இப்போது. மாற்று ஏற்பாட்டுக்கு அவசியமில்லாமற் போனது.

வாப்பாவின் பென்ஷனில் ஒரு ரெண்டாயிரம் மிச்சம். பஷீர் போய் ஒரு மூணு மாசத்தில் அம்மாவுக்கு இன்ஸுலின் போடுகிற வேலையும் நின்று விட்டது. இந்த அவஸ்தையிலிருந்தெல்லாம் விடுதலை பெற்று அம்மா அல்லாவிடம் போய்ச் சேர்ந்து விட்டார்கள்.

அம்மாவுக்கு முந்தி வாப்பா போயிருந்தால் பென்ஷன் கட் ஆகி, பிழைப்பே நாறிப் போயிருக்குமே, நல்ல வேளை அம்மா முந்திக் கொண்டார்கள் என்று குரூரமாய் ஒரு நினைப்பு வருவதைத் தவிர்க்க இயலவில்லை.

ஆனால், வாப்பாவாலும் எத்தனை நாள் நோயாளியாய்ப் படுத்துக் கிடக்க முடியும்! அம்மாவின் மறைவும் அவர்மேல் ஒரு பெருந்துயரமாய் இறங்க, சோகத்தின் பாரத்தைத் தாங்க முடியாமல் துவண்டு போய்க் கிடந்தார்.

அதுவும், ரொம்ப நாள் கிடக்கவில்லை. ரெண்டே மாசத்தில் அவரும் போய்ச் சேர்ந்து விட்டார், அல்லாவிடம் அம்மாவிடமும்.

பொன்முட்டை போட்டுக் கொண்டிருந்த வாத்து.

வயசான காலத்தில் தகப்பனாரை வைத்துப் பராமரித்திருக்க வேண்டிய மகனை, தகப்பனார் தன்னுடைய பென்ஷன் மூலம் பராமரித்துக் கொண்டிருந்தார் என்கிற மோசமான உண்மையை அசைபோட்டுப் பார்க்கக்கூட அவகாசந்தராமல் எதிர்காலம் கோரமானதொரு கேள்விக்குறியாய்த் தலைக்கு மேலே தொங்கிக் கொண்டிருந்தது. எந்த நேரமும் மண்டையில் விழுந்து என்னை சின்னா பின்னமாக்கி விடலாம்.

சமையல்க்கார அம்மாவை ஸெட்டில் பண்ணி அனுப்பிவிட்டுத் தன்னந்தனி ஆளானேன். கையேந்தி பவன்களில் ரெண்டு வேளை அல்லது ஒரு வேளை உணவில் உடம்பில் உயிரைப் பிடித்து வைத்திருக்க வேண்டிய நிலை.

டெலிஃபோனை ஸரண்டர் பண்ண வேண்டும். ஆடம்பர வஸ்துக்களையெல்லாம் ஒவ்வொன்றாய்க் கழட்டிவிட்டு சுமைகளைக் குறைத்துக் கொள்ள வேண்டும். டெலிஃபோன் இலாகாவுக்குக் கடிதம் எழுதி வைத்துக் கொண்டு வெளியே கிளம்ப ரெடியாயிருந்த போது டெலிஃபோன் ரீங்கரித்தது.

அணையப்போகிற மெழுகுவர்த்தி.

“அண்ணே, துபாய்லயிருந்து பேசறேன்” என்றது டெலிஃபோன் ரிஸீவர்.

பஷீர்.

“அண்ணே, பெரியம்மா பெரியப்பா ரெண்டு பேருமே மவுத்தாய்ட்டாங்களாமே?”

“ஆமாம்ப்பா.”

“போன வாரந்தாண்ணே எனக்கு தகவல் தெரிஞ்சது. ரெண்டு பேருக்காகவும் அல்லாட்ட துஆக் கேட்டேண்ணே.”

“ரொம்பத் தாங்க்ஸ்ப்பா.”

“சமையல்க்கார அம்மா இருக்காங்களாண்ணே?”

“இல்ல, போய்ட்டாங்க.”

“அப்ப ஒங்க சாப்பாட்டுக்கு?”

“சமையல்க்கார அம்மா இருந்தா மட்டும் என்ன, சாப்பாடு வானத்துலயிருந்தா கொட்டும்!”

“இது…. வந்து…. அண்ணே…. நா ஒண்ணு சொன்னாக் கோச்சுக்க மாட்டீங்களே….”

“சொல்லுப்பா.”

“இங்க துபாய்ல நா இப்ப வேல பாக்கற டிபார்ட்மென்ட் ஸ்டோர், நம்ம மெட்ராஸ் கடையப் போல நாலு பங்கு பெரிசுண்ணே.”

“ரொம்ப சந்தோஷம்.”

“ஓனர் ரொம்ப நல்லவர்ண்ணே.”

“சரி.”

“இங்க, கடையில வேலக்கி ஆள் தேவப்படுது… வந்து… ஓனர்ட்ட ஒங்களப்பத்தி சொல்லிக் கேட்டுப் பாக்கவாண்ணே?”

(யுகமாயினி, செப்டம்பர் 2008)

About The Author