முகத்தை அழகு செய்ய நத்தை!
உங்கள் முகத்தில் உயிருள்ள நத்தைகள் ஊர்ந்து செல்வதை நினைத்துப் பாருங்கள்! எவ்வளவு அருவெறுப்பாக இருக்கும்? ஆனால், இன்னும் கொஞ்ச நாட்களில் நத்தை பெண்களுக்கு அழகு சாதனமாக ஆகப் போகிறது என்கிறது ஜப்பானிய ஆராய்ச்சி!
"இறந்துபோன செல்களைப் புதுப்பிக்கவும், துவாரங்களைச் சரி செய்யவும், இளமையாக விளங்கவும் நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், முகத்தில் உயிருள்ள நத்தைகளை ஐந்து நிமிஷத்துக்கு ஊர விடுங்கள்" என்கிறது இந்த ஆராய்ச்சி! கூடிய சீக்கிரம் பணம் கொடுத்துத் தங்கள் முகத்தில் நத்தையை ஊர விடப் போகிறார்கள் ஜப்பான் பெண்கள்! நத்தையிலிருக்கும் களிம்புப் பசைமண் நம் பழைய செல்களைப் புதுப்பித்து, சூரிய வெப்பத்தால் கருத்துப் போன முகத்தைப் பளபளக்க வைத்து நீர்ப் பசையாகவும் பயன்படுமாம்! இந்தத் தகவலை டோக்கியோவில் அழகு நிலையம் நடத்தும் மனமா டகாமுரா (பேர் என்னவோ கரமுரா என்றிருக்கிறது) என்பவர் சொல்கிறார். இதனால் முகத்தில் 100 சதவிகிதம் நத்தையின் பசைச் சக்தியைப் பெற முடியுமாம். நத்தையிலிருந்து வரும் களிம்புப் பசை வயதான தோற்றத்தைத் தவிர்க்கும் சக்தி கொண்டதாம். ஏற்கெனவே இந்த நத்தைக் களிம்பைக் கொண்டு தயாரிக்கப்பட்ட அழகு சாதனங்கள் விற்பனைக்குக் கூட வந்திருக்கின்றனவாம். என்ன(ந)த்தைச் சொல்ல…!
புற்றுநோயைக் கண்டுபிடிக்கும் புத்திசாலிக் கத்தி!
லண்டனில் விஞ்ஞானிகள் புத்திக் கூர்மையான கத்தி ஒன்றைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். அதன் மூலம் அறுவை சிகிச்சை நிபுணர்கள் அவர்கள் கத்தரிக்கும் திசுக்கள் புற்றுநோய் வகையைச் சார்ந்தவையா என்று மூன்று விநாடிகளுக்குள் அறிய முடியும்!
மின் அறுவை சித்தாந்தத்தை வைத்து இந்த அறிவுக் கத்தியைக் கண்டறிந்திருக்கிறார்கள் பிரிட்டிஷ் அறிவியலாளர்கள். மின் அறுவைத் தொழில் நுணுக்கம் 1920லேயே கண்டுபிடிக்கப்பட்டது. மின் அறுவை சிகிச்சை சாதனங்கள் மின்சாரத்தைக் கொண்டு அந்தக் கத்தியை வேகமாகச் சூடுபடுத்தி, அதிக ரத்த சேதமில்லாமல் அறுவை சிகிச்சை செய்யப் பயன்படுகின்றன. அப்போது திசுக்கள் ஆவியாக மாறி அந்த ஆவி உறிஞ்சப்பட்டு வெளியே தள்ளப்படுகிறது!
கட்டியாக வளர்ந்திருக்கும் புற்றுநோயை அறுவை சிகிச்சை மூலம் அகற்றுவதுதான் வழக்கம். எந்தத் திசு வளரும் தன்மை உடையது என்று அறுதியிட்டுச் சொல்ல முடியாது என்பதால் சிறிது நல்ல திசுவும் அறுவை சிகிச்சையின்போது சென்றுவிடுகிறது. மார்பகப் புற்றுநோய் உள்ளவர்களில் ஐந்தில் ஒருவருக்குப் புற்றை முழுதுமாக அகற்ற இரண்டாவது முறை அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருக்கிறது. இந்த அறிவுக் கத்தி அப்படி இரண்டாவது முறை அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய அவசியத்தைப் போக்குகிறது. இந்தக் கத்தியை முதலில் 91 நோயாளிகளிடம் பயன்படுத்தியபோது புற்றைப் பரப்பும் திசுக்களைச் சரியாக அடையாளம் கண்டு 100 சதவிகித வெற்றியடைந்தது. சாதாரணமாக, பரிசோதனைச் சாலையில் செய்வதென்றால் அரைமணி நேரமாவது ஆகும் இந்தச் சோதனையை இக்கத்தி மூன்று நொடிகளுக்குள் கண்டறிந்தது! இம்பீரியல் கல்லூரியைச் சேர்ந்த லண்டன் ஆராய்ச்சியாளர்களின் இந்தக் கண்டுபிடிப்பு ஒரு மருத்துவப் பத்திரிகையில் வெளியிடப்பட்டது.
இந்தக் கத்தியைக் கண்டுபிடித்த டாக்டர் ஜோலிடான் டாகஸ் என்ற ஆராய்ச்சியாளர் முதலில் லைன் அறுவை சாதனத்தை ஒரு திணிவு நிறமாலைமானியோடு (மாஸ் ஸ்பெக்ட்ரோமீட்டர்) இணைத்தார். இதன் மூலம் திசுக்களில் என்ன வேதிப் பொருட்கள் இருக்கின்றன என்று அறிய முடியும். வெவ்வேறு வகையான திசுக்கள் வெவ்வேறு வகையான உடற்கூறுகளைக் காட்டும். அதனால் இதன் மூலம் கொடுக்கப்பட்ட திசு பற்றிய விவரங்களை அறிய முடியும்.
ஆராய்ச்சியாளர்கள் முதலில் இந்த அறிவுக்கத்தியை அறுவைசிகிச்சை தேவையான 302 நோயாளிகளிடம் பயன்படுத்தினார்கள். இதன் மூலம் புற்றுநோய் அபாயமுள்ள ஆயிரக்கணக்கான பரவும் திசுக்களையும் அபாயமில்லாத திசுக்களையும் வேறுபடுத்தி அதனைப் பற்றிய தகவல் களஞ்சியத்தை ஏற்படுத்தியிருக்கிறார்கள். இந்த அறிவுக்கத்தி கொடுக்கும் அளவைகளைக் குறிப்பீட்டுத் (Reference) திசுக்களோடு ஒப்பிட்டு அவை என்ன வகையான திசுக்கள் என்பதை மூன்று நொடிகளுக்குள் அறிகிறார்கள்.
எதிர்காலத்தில் நீங்கள் எங்கே இருப்பீர்கள்?
உங்களால் இன்னும் 285 நாட்கள் கழித்து பிற்பகல் இரண்டு மணிக்கு நீங்கள் எங்கே இருப்பீர்கள் என்று சொல்ல முடியுமா? முடியும் என்கிறது ஓர் ஆராய்ச்சி! இதற்காக ஒரு மென்பொருளை உருவாக்கியிருக்கிறார்கள். முன்பு மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் பணி செய்த ஆடம் சாட்லிக், மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் ஆராய்ச்சியாளராக இருக்கும் ஜான் க்ரும் ஆகிய இருவரின் கண்டுபிடிப்புதான் இது. இதற்காக சியாட்டில் நகரில் 300 தன்னார்வத் தொண்டர்களைச் சேர்த்தார்கள். இந்த 300 பேர்களும் தினமும் எங்கெங்கே செல்கிறார்கள், எப்போது வேலைக்குச் செல்கிறார்கள், எப்போது கடைகளுக்குச் செல்கிறார்கள், எந்தப் பேருந்துகளில் அல்லது வாகனங்களில் எப்போதெல்லாம் செல்கிறார்கள் என்பதையெல்லாம் ஜி.பி.எஸ் மூலம் கண்காணித்தார்கள். கையில் செல்போனை எடுத்துச் செல்வதைப்போலத் தொண்டர்கள் இந்த ஜி.பி.எஸ்-ஐயும் எப்போதும் கையோடு வைத்திருப்பார்கள். இவர்கள் வழக்கமாகச் செல்லும் பேருந்துகள், வான்கள் போன்ற வாகனங்களிலும் இவை பொருத்தப்பட்டன; தவறு ஏதும் ஏற்படாது என்பதை உறுதி செய்து கொள்ள. கிட்டத்தட்ட அவர்கள் செல்லும் 150 மில்லியன் இடங்களைப் பற்றிய தகவல்களைச் சேகரித்த பின்னர் அவர்கள் வழக்கமாக என்னென்ன இடங்களுக்கு ஒரே மாதிரி தினமும் செல்கிறார்கள் என்கிற விவரம் கிடைத்தது. இந்தத் தகவல்கள் மூலம் ஒருவரது பழக்க வழக்கங்களைப் பற்றிய தகவல்களைச் சேகரிக்க முடிந்தது. உதாரணமாக, ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையிலும் ஒரே இடத்துக்குச் சென்று ஒரே மாதிரியான காரியங்களை ஒருவர் செய்கிறார் என்றால், குறிப்பிட்ட நபர் வருங்காலத்தில் அந்தக் கிழமையில் என்ன செய்வார் என்பதை அவரது வாடிக்கையான பழக்க வழக்கங்கள் மூலம் ஆரூடமாகச் சொல்கிறது இந்த மென்பொருள்.
வியர்வையிலிருந்து குடிநீர்!
கடல் நீரிலிருந்து குடிநீர் என்று கேள்விப்பட்டிருக்கிறோம். வியர்வையிலிருந்து குடிநீரா? இதுவும் ஓர் ஆராய்ச்சிதான்.
ஸ்வீடனில், நீங்கள் ஜிம் சென்ற பிறகு, அணிந்து வந்த ஆடையில் இருக்கும் வியர்வையைக் குடிநீராக மாற்றும் வி(த்தை)தத்தைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். இந்த வியர்வை இயந்திரம் ஸ்டாக்ஹோம் ராயல் இன்ஸ்டிட்யூட்டில் உள்ள ஆன்ட்ரியாஸ் ஹாம்மர் என்ற பொறியாளரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வடிகட்டி இயந்திரம்தான் வியர்வையை மாற்றுவதற்கான முக்கிய பங்கு வகிக்கிறது. தேவையான மற்றவையெல்லாம் துணி உலர வைப்பதற்கான மெஷின் போன்று சாதாரணமாகக் கிடைப்பவைதான். முதலில் வியர்வையிலிருந்து தண்ணீரைப் பிழிந்தெடுக்க உலர வைக்கும் இயந்திரம். அது வியர்வையைச் சுழற்றிப் பிழிந்தெடுக்கிறது. அந்த வியர்வை நீர் வெப்பப்படுத்தப்பட்டு, புற ஊதாக் கதிர்களுக்கு உட்படுத்தப்படுகின்றன. அதற்குப் பிறகு, பொறியாளரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ள உயர் தொழில்நுட்ப வடிகட்டிகளால் நீரிலுள்ள உப்புக்களும் நுண்ணுயிர்களும் நீக்கப்படுகின்றன. அதற்குப் பிறகு, ஒரு காபி பில்டர் வழியாக அது செலுத்தப்பட்டு துணியிலுள்ள நூலிழைகள் நீக்கப்பட்டு சுத்தமான நீராக ஆக்கப்படுகிறது. வியப்பாக இல்லை?
“