விளை நிலமே உடலாகும் உறுப்புக்கள் ஒவ்வொன்றும்
வெவ்வேறு வினை புரிந்திடும்
விருப்பென்றும் வெறுப்பென்றும் மண்பொன்பெண் ஆசையுடன்
விபரீத எண்ணம் வளரும்!
களையாகும் காம குரோத பேதமெலாம்
கல்லியெறிந்திடுதல் வேண்டும்
காட்டாற்று வெள்ளமெனப் பத்தி நெறி யுட்புகவே
காணாமல் போகு மிவையே!
முளைவிட்டுச் செடியாகி மரமாகி மலர்பூத்து
முக்கனிகள் தருதல் வேண்டும்
முழுமனிதனாகமும் மலமறுக்க நல்லெண்ணம்
முகிழ்த்திடும் சிந்தை வயலில்!
வளைதொட்டு வள்ளியின் உளங்கொண்ட குமரனே
வளமான நெஞ்சமருள்வாய்
வடிவேலினொளியாகத் தடியோடு புகழ்மேவு
வடபழனி முருகேசனே!
உங்கள் கவிதைகள் அனைத்தையும் இன்று தான் படித்து முடித்தேன். அதிலும் தமிழே மருந்து” கவிதை மிக அருமை. சங்கப் பாடல்களின் சொல்லாக்கம் போன்றே உங்கள் கவிதைகளின் சொல்லாக்கம் நன்றாக உள்ளது. வாழ்த்துக்கள்.”
உங்களது பாராட்டுக்கு மிகவும் நன்றி. கவிதைகளை வாசிக்கப் பழகினால் சிந்தனையோட்டம் சிறப்பாகும்.-அரிமா இளங்கண்ணன்