வல்வரவு (2)

ஜிலு ஜிலுவென்று ஜொலிக்கும் மோட்டார் பைக்கை அவன் கொண்டுவந்து வீட்டு வாசலில் நிறுத்தியபோது அவள் பேசவில்லை. உள்ளே திட்டுவதற்கான வார்த்தைகளைக் கோர்த்து ஒத்திகை பார்த்துக் கொண்டிருக்கலாம். பெட்டியை எடுத்துக்கொண்டு படியிறங்கிச் சென்றுவிட்டாள். பட்டியிலிருந்து அறுத்துச் செல்லும் மாடு.

அப்பாடா என்றிருந்தது அவனுக்கு. எங்க போகப்போறா? பிறந்த வீடாகத்தான் இருக்கும். உள்ளூர்தான். என்றாலும் அலுவலகத்துக்குச் சற்றுத் தொலைவு. ஸ்கூட்டி இருக்கிறது. மறக்காமல் அதை ஓட்டிக்கொண்டுதான் போனாள்… தொலையட்டும்!

ரண்டு நாட்கள். அடுத்த ஞாயிற்றுக்கிழமை. ஆட்களைக் கூட்டி வந்தான். மினி வேன் வந்து வாசலில் நின்றது. அநேகமாக வீடு நிறைய அவள் சாமான்களே இருந்தன. சீராக வந்தவை. அவளாகச் சேர்த்தவை. அவன் சாமான்கள், அவனாகச் சேர்த்தவை என்று பெரிதாய் இல்லை. பாத்திரங்கள், பீரோ, கட்டில்கள், மெத்தைகள்… கட்டப்பட்டு வேனில் ஏறின. அடுத்த அரைமணியில் வேன் மாமனார் வீட்டு வாசலில் நின்றது.

உள்ளேயிருந்து மாமனார் பதறிக்கொண்டு வந்தார். ”என்ன மாப்ளே?” என்றார்.

அவன் கண்காணிக்க, சாமான் எல்லாம் வீட்டுக்குள் சென்றன. ஏதும் பேசாமல் காலி வேனில் ஏறி முன் இருக்கையில் அமர்ந்து சென்றுவிடடான்.

வீடு இவனுடையது. இவன் அப்பா கட்டியது. அப்பா அம்மா இருவருமே இல்லை இப்போது. இருந்திருந்தால் இப்படியோர் நிலை வந்திருக்காதோ? சொல்ல முடியாது. இவள் மட்டுமரியாதையில்லாமல் அவர்களை எப்படிச் சீரழித்திருப்பாளோ! தப்பினார்கள்… ஒரு சமயம் அவர்கள் இருந்து அவன் தனிக்குடித்தனம் போக வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கலாம். கொடுமை. ஒரே ஊரில் அப்பாவும் பிள்ளையும் தனித்தனியாக வாழ்வதாவது? பிறக்குமோ பிறக்காதோ என்று புண்ணிய ஸ்தலங்களுக்குப் போய்த் தவங் கிடந்து பிறந்த பிள்ளை அவன்.

ரு நல்ல நாளில் ராகுகாலத்துக்குப் பிறகு மாமனார் அவன் வீட்டுக்கு வந்தார். வாங்க என அவன் கூப்பிடவில்லை. அலுப்பாய் இருந்தது.

”மாப்ளே, சடங்கு பண்ணணும், வந்திட்டுப் போங்க” என்றார்.
”சடங்கா? என்ன சடங்கு?”
”என்ன மாப்ளே தெரியாத மாறி கேக்கறீங்க? மகளுக்கு வளைகாப்பு.”
”அப்டியா?” என்றான் சிறு அதிர்ச்சியுடன். மனம் எதையோ கணக்குப் போட்டது. அவள் கிளம்பிப் போய் ஆறு மாதமாகிறது.
”இல்லீங்க மன்னிக்கணும்…” என்றான்.
”என்ன மாப்ளே?”
”உங்க மகளைப் பத்தி உங்களுக்குத் தெரிஞ்சிருக்கணும்…”
”நல்லாத் தெரியும். அவளைப்போல என் பெண்டாட்டியும் என்னைவிட்டுப் போயிருந்தால், இப்ப உங்களுக்குப் பிரச்னையே இருந்திருக்காது.”
வியப்புடன் பெரியவரை அவன் பார்த்தான்.
”யோசிங்க மாப்ளே” என்றார்.
அவனிடம் புதிதாய் யோசிக்க எதுவும் இல்லை.

நாட்கள் போய், மாதங்கள் உருண்டன. இரண்டு ஆண்டுகள் மாதங்களைத் தள்ளிச் சென்றன. சரக்கு ரயில் வண்டிதான் காலம்.

வீட்டின் முன் கார் வந்து நின்றது. பின்னே லாரி. லாரியில் வீட்டுக்கு சாமான்கள்.

மகளுடன் ஷண்முகப்ரியா காரில் இருந்து இறங்கினாள். திடுக்கிட்டாள். காம்பவுண்டுக் கதவில் பூட்டு தொங்கியது. இரண்டு ஆட்களும் டிரைவரும் இறங்கி அவள் அருகே வந்து நின்றார்கள்.

வலது வீடு ஆத்மநாதனுடையது. பார்த்தாள். வாசல் திறந்திருந்தது. குழந்தையுடன் நடந்தாள். கதவின் கிரீச். மேல்துண்டை இழுத்துப் போர்த்தியபடி ஆத்மநாதன் வந்தார். அடையாளம் புரிந்து கொண்டிருக்க வேண்டும். ”என்னம்மா?” என்றார்.

”வீடு பூட்டிருக்கே.”
”ஆமா. உனக்குத் தெரியாதா?”
”என்ன?”
”செண்பகராமன் வேலைய ராஜினாமா பண்ணிட்டு எங்கயோ வடக்க ஆஸ்ரமத்துக்குப் போயிட்டான்.”
திடுக்கிட்டாள். கால்களில் திடீரென்று சக்தி வற்றிவிட்டாப் போலிருந்தது. ”ஆஸ்ரமமா?” என்றாள். ”எந்த ஆஸ்ரமம்?”

”தெரியல. நானே கடிதம் போடறேன்னு சொல்லிட்டுப் போனான். நானும் கேட்டுக்கல்ல. அவனாச் சொல்லாதப்ப தூண்டித் துருவிக் கேட்பானேன்னு விட்டுட்டேன். கதவைப் பூட்டி சாவியத் தந்தான். வாடகைக்கு யாராச்சும் வந்தால் குடுங்கோன்னான்.”

அவள் சுற்றுமுற்றும் பார்த்தாள். தெருவில் அநேக வாசல்கள் நிறைந்திருந்தன. ”சாவியத் தரேளா?” என்று கேட்டாள் ஷண்முகப்ரியா.

”பேஷா!” என்றபடி ஆத்மநாதன் உள்ளே போனார்.

(நன்றி : கல்கி வார இதழ் 21.09.2008)

About The Author