வருத்தப்படாத வாலிபர் சங்கம் – இசை விமர்சனம்

சிவகார்த்திகேயன் தனி நாயகனாக நடிக்கும் மூன்றாவது படம். முந்தைய படம் இவர் மீதான எதிர்பார்ப்பைக் கூடச் செய்திருக்கிறது. அதை ‘வருத்தப்படாத வாலிபர் சங்க’த்தின் பாடல்கள் பூர்த்தி செய்திருக்கின்றனவா எனப் பார்ப்போம்!

ஊதா கலரு ரிப்பன்

மீட்டல் ஒலியுடன் ஆரம்பிக்கும் இந்தப் பாடலை ஹரிஹரசுதன் பாடியிருக்கிறார். இயல்பான நையாண்டித்தனத்துடன் இதை உருவாக்கியிருக்கிறார்கள். சிவகார்த்திகேயனுக்கு நடனமாட நிறைய வாய்ப்பிருக்கும் எனத் தெரிகிறது.

பாடலிலிருந்து ஒரு துளி:

மத்தவங்க நடந்துபோனா வீதி வெறும் வீதி
நீ தெருவில் நடந்து போனா எனக்கு சேதி தலைப்புச் சேதி!
மத்தவங்க சிரிப்பப் பாத்தா ஓகே வெறும் ஓகே
நீ சிரிச்சுப் பேசும்போது எனக்கு வந்திடுதே சீக்கே!

இந்தப் பொண்ணுங்களே…

அண்மைய மரபை மீறாத வகையில் இதோ காதலும் காதல் தூற்றலுமான இன்னொரு பாடல். இதை ஜெயமூர்த்தி பாடியிருக்கிறார். எவ்வளவு பேர் இதே கருத்தில் எழுதினாலும் காதலைப் போலக் காதல் தூற்றலும் இரசிக்கவே வைக்கிறது. அதில் உண்மை இருக்கிறது என்பதாலோ என்னவோ! கூத்து சாயலில் ஒரு பாடல்.

பாடலிலிருந்து ஒரு துளி:

செல்லு வாங்கிக் கொடுக்குறோம், ரீ-சார்ஜும் பண்ணிக் கொடுக்குறோம்,
அன்பைக் கூட வாரி வாரிக் கொடுக்குறோம்,
அவங்க வீட்டுக்கும்தான் ரேஷன் வாங்கிக் கொடுக்குறோம்,
நாம் கொடுத்ததெல்லாம வாங்கிகிட்ட அவங்கதான்,
நமக்கு வேதனையைக் கொடுக்குறாங்க என்னடா!
இதிலே நீதி நேர்மை இருக்குதான்னு சொல்லுடா!

வருத்தப்படாத வாலிபர் சங்கம்

வில்லுப்பாட்டு போலவே தொடங்கும் இதை அந்தோணிதாசன், அமலியுடன் இணைந்து பாடியிருக்கிறார் நம்ம சிவகார்த்திகேயன்! என்ன ஆச்சரியம், குரல் பாடலுக்கு நன்றாகவே பொருந்திப் போகிறது! உருப்படாத சங்கத்தின் கொள்கை விளக்கம்தான் பாடல். பாடலின் சுவை குறையாமல் அழகாக வடிவமைத்திருக்கிறார்கள்!

பாடலிலிருந்து ஒரு துளி:

அடுக்கு மொழியில் வசனம் பேசுவோம்,
அழகுப் பொண்ணுன்னா கவிதை சொல்லுவோம்,
இணைஞ்ச காதலை பிரிக்க எண்ணுவோம்,
எங்கள நாங்களே புகழ்ந்து தள்ளுவோம்!
நாங்க செம வாலு – செய்யும்
சேட்டைக்குக் கிடையாது ரூலு
சொந்த வீட்டுக்கே அடங்காத ஆளு!

என்னடா என்னடா

ஸ்வேதாவின் விசில் ஒலியுடன், மென்மையாக ஆரம்பித்துப் பின்னர் ஸ்ரேயா கோஷலின் ஆல்கஹால் குரலுக்கு மாறுகிறது பாட்டு. இசை வரிகளுக்கு இடைஞ்சல் இல்லாமல் அளவாக ஒலிக்கிறது. காதலின் மனக்குரல்தான் பாடல்.

பாடலிலிருந்து ஒரு துளி:

விடிஞ்சாலும் தூங்குற ஆளு உறங்காம ஏங்குறேனே!
உன்னோட பேசிடவே உள்ளூர ஆசை கூடி போச்சு
கண்ணாடி பாத்திடவா என்னோட தேகம் மாறியே போச்சு போச்சு!

பாக்காதே பாக்காதே

விஜய் ஏசுதாஸ், பூஜா இணைந்து பாடியிருக்கிறார்கள். “பாக்காதே பாக்காதே” என இருவரும் போட்டி போட்டுக் கொண்டு கேட்க வைக்கிறார்கள்! இயல்பான உச்சரிப்புடன் வரிகள், துள்ளல் இசை எனப் பாடல் கவனிக்க வைக்கிறது. நல்ல டூயட் பாடல்!

பாடலிலிருந்து ஒரு துளி:

செக்கச் செவந்து நான் போகும்படிதான்
தன்னை மறந்து ஏன் பாக்குற!

இசையமைப்பாளர் டி.இமானுக்கு மீண்டும் ஒரு வெற்றிப் படம். சிற்சில இடங்களில் முந்தைய படங்களை நினைவுபடுத்தினாலும், மற்றபடி தரத்தில் குறைவில்லாமல் பாடல்களைக் கொடுத்துள்ளார்.

வருத்தப்படாத வாலிபர் சங்கம் – தொண்டர்களின் ஆதரவு உறுதி!

About The Author

2 Comments

  1. Banumathi

    அங்குசம் படத்தை பற்றி சொல்ல கூடாதா?

Comments are closed.