உலக நாடுகளில் கோடானுகோடி மக்கள் பல்வேறு மொழிகள், பல்வேறு கலாச்சாரங்கள் என்று வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். ஆனால், இவர்கள் ஒவ்வொருவருக்கும் தனித் தனிக் கைரேகை இருப்பது, இறைவன் படைப்பின் அற்புதம்!
இதேபோலக் காட்டுவிலங்குகளின் படைப்பிலும் இறைவன் தனது முத்திரையைக் காண்பிக்கத் தவறவில்லை. இவற்றின் அழகும், தனித்துவமான குணங்களும் ஒருபுறம் இருக்க, மனிதக் கைரேகைகளைப் போல, மிருகங்களும் உடலில் தனித்துவமான அடையாளங்களைக் கொண்டிருப்பது நம்மை மலைக்க வைக்கின்ற விடயம்!
குறிப்பாக, வரிக்குதிரைகளின் உடம்பு கறுப்பு நிறந்தான். ஆனால், இவற்றின் உடலில் உள்ள வெள்ளை வரிகள், இவற்றிற்கு அழகூட்டுவது மாத்திரமல்ல, இவற்றைத் தனித்துவம் வாய்ந்தவை ஆக்கியுள்ளன. எந்த வரிக்குதிரைக்குமே இன்னொன்றுக்கு இருப்பது போல் கோடுகள் இல்லை.
காரணம் இல்லாமல் இறைவன் படைப்பில் எதுவும் இல்லை என்பது நாம் அறிந்தது. அப்படியானால் வரிக்குதிரைகளின் உடம்பில் ஏனிந்த வெள்ளைக் கோடுகள்?
ஒரு வரிக்குதிரை இன்னொரு வரிக்குதிரையை இனங்கண்டுகொள்ள இந்த வரிகள் பெரிதும் உதவி வருகின்றன என்கிறார்கள் அறிவியலாளர்கள். கூட்டமாக இவை ஓடும்போது, ஒரு தனி வரிக்குதிரையைக் குறிவைப்பது என்பது அதைத் துரத்தும் மிருகத்திற்கு இயலாத காரியம் என்றும் வரிகளின் மகிமை சொல்லி வியக்கின்றார்கள்! குறிப்பாக, வைகறைப் பொழுதிலும், இருள் கவிய ஆரம்பிக்கும் அந்தி மாலைப்பொழுதிலும் ஒன்றையொன்று பிரித்து இனங்காணுவது என்பது, ஆழ்சமுத்திரத்தில் ஊசியைத் தேடுவது போல்தான்! சற்றே தூரத்தில் நின்று பார்க்கும்போது, வரிகள் எல்லாம் இணைந்து சாம்பர் நிற மிருகம் ஒன்றைப் பார்ப்பது போலவே தோற்றும் என்கிறார்கள் இந்த ஆய்வாளர்கள்.
விலங்குகளின் இரத்தத்தை உறிஞ்சும் ஒரு வகைப் பூச்சிகள், வரிக்குதிரைகள் மீது அதிக நாட்டம் கொள்வதில்லை. அதற்குக் காரணம், கவர்ச்சியைத் தராத இந்தக் கறுப்பு – வெள்ளைக் கோடுகள். இதனால் பல பூச்சிக் கடிகளில் இருந்து வரிக்குதிரைகளால் விடுபட முடிகின்றது.
இந்த வரிகள் இவற்றின் இனத்திற்கேற்பவும் வேறுபடும் என்பது இன்னொரு சிறப்பம்சம். அதாவது, ஒவ்வொரு வரிக்குதிரை இனத்திற்கும் உடலிலுள்ள வரிகளுக்கிடையிலான இடைவெளிகள் வேறுபடும். ஆப்பிரிக்கப் புல்வெளிகளில் தெற்கு நோக்கிப் பயணித்தால், நெடுந்தூரம் கடக்கக் கடக்க, இவற்றின் உடல் வரிகளுக்கிடையிலான இடைவெளிகளும் அதிகரிப்பதை அவதானித்துள்ளார்கள்.
இவை தனித்து வாழும் மிருகங்கள் அல்ல. சிறு சிறு கூட்டமாக வாழும் இவை, ஒன்றாகவே புல் மேய்கின்றன. ஒரு கூட்டத்தில் ஓர் ஆணும், சில பெண்களும், குட்டிகளும் காணப்படுவதுண்டு. தன் கூட்டத்திற்குப் பாதுகாப்பாக, எப்பொழுதும் ஆண் பின்னால் நின்று கொள்ளும்.
25 வருடங்கள்தான் ஒரு வரிக்குதிரை சராசரியாக வாழும் அதிகபட்ச ஆயுட்காலம். நன்கு வளர்ந்த ஒரு வரிக்குதிரை அதன் தோள் வரைக்கும் அதிக பட்சம் 1.5 மீற்றர் (5 அடி) வரை உயரம் கொண்டதாக இருக்கும். அதிகபட்ச எடை 450 கிலோ.
குதிரைக் குடும்பத்தைச் சேர்ந்த இந்த உயிரினத்தின் செவிப்புலன் அபாரமானது! அதே போல, சிறந்த பார்வைத்திறனும் இந்த மிருகங்களுக்கு உண்டு. மணிக்கு 35 மைல் தூரம் இவற்றால் வேகமாக ஓடவும் முடியும்.
வரிக்குதிரைகள் தாம் எழுப்பும் ஒலிக்குறிப்புகளின் மூலமும், முகபாவங்களின் மூலமும் ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொள்கின்றன. குரைப்பது போன்று பலத்த சப்தங்களை இவை எழுப்புவதுண்டு. காதுகள், கண்கள் திறந்த நிலையில், பற்கள் முழுவதையும் வெளிக்காட்டி, சொல்ல வேண்டிய சங்கதியைச் சொல்லிவிடுகின்றன. எடுத்துக்காட்டாக, இதனுடைய செவி மடிந்த நிலையில் இருந்தால், ஆபத்து என்று பொருள். அல்லது, என் கட்டளைப்படி செய் என்ற அதிகார தொனியை வெளிப்படுத்துவதாக இருக்கும்.
குதிரைகள், கழுதைகள் ஆகியவை இவற்றின் நெருங்கிய சொந்தக்காரர்களாக இருந்தாலும், குதிரைகளைப் போலவோ கழுதைகளைப் போலவோ வரிக்குதிரைகளைப் பழக்கி வீட்டில் வளர்த்து வேலை செய்விப்பதில் மனிதன் தோற்றுவிட்டான் என்றே சொல்ல வேண்டும். எந்த நேரத்தில் எப்படிக் குணம் மாறும் என்று தெரியாத, அழுத்தம் கொடுத்தால் மிரண்டு விடும் தன்மை கொண்ட இந்த மிருகத்தை, மனிதனால் வீட்டு மிருகமாக்க முடியவில்லை.
என்றாலும், வரலாற்றுத் தகவல்களின்படி, நைரோபியின் (கென்யா) முதல் மருத்துவர், 1907ஆம் ஆண்டளவில் வீடுகளுக்குச் சென்று மருத்துவம் செய்ய, வரிக்குதிரை பூட்டிய வண்டி ஒன்றைப் பயன்படுத்தியிருப்பது தெரிய வருகிறது. அதேபோல இங்கிலாந்திலும், மிருகவியல் ஆர்வலர் ஒருவர் தன் வண்டியை இழுத்துச் செல்ல வரிக்குதிரையைத்தான் நாடியுள்ளார். நியுசிலாந்து ஆளுநர் ஒருவரும் தனக்குச் சொந்தமான தனிப்பட்ட தீவொன்றிலிருந்த வண்டிகளை இழுக்க, தென் ஆப்பிரிக்காவிலிருந்து வரிக்குதிரைகளை இறக்குமதி செய்துள்ளார்.
வரிக்குதிரைகளில் மூன்று இனங்கள் இருக்கின்றன. இவற்றில், சமவெளிப் பிராந்திய வரிக்குதிரைகளும், மலைப்பிரதேச வரிக்குதிரைகளும் குதிரைக் குடும்பத்தைச் சார்ந்தவையாகக் காணப்படுகின்றன. ஆனால் கிரெவிஸ் என்ற இனம் கழுதைக் குடும்பத்தைச் சார்ந்ததாக இருக்கின்றது.
இந்த மூன்று இனங்களில், சமவெளிப் பிரதேச வரிக்குதிரைகள் பல்கிப் பெருகினாலும், மற்றைய இரண்டு இனங்களும் அழிவின் விளிம்பில் இருப்பது சோகமான விடயம்! கிரெவிஸ் இனந்தான் இவற்றுள் மிகப் பெரியது. எத்தியோப்பியாவிலும் கென்யாவின் வடக்குப் பகுதியிலும் காணப்படும் இவை, ஏறத்தாழக் கழுதைகளைப் போன்ற உருவத்தைக் கொண்டுள்ளன. மிக வேகமாக அழிந்து வருவதும் இந்த இனந்தான். ஏற்கெனவே, 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வரிக்குதிரை இனம் ஒன்று அழிந்துவிட்டது. இப்பொழுது இந்த இனத்தை உருவாக்கி மீண்டும் நடமாட விடுவதற்கான திட்டம் ஒன்று நடைமுறையில் இருந்து வருகின்றது.
சமவெளிப் பிரதேச வரிக்குதிரைகளில் மேலும் 6 துணை இனங்கள் இருக்கின்றன. இவை ஆப்பிரிக்கக் கண்டத்தின் தெற்கிலும், கிழக்கிலுமே காணப்படுபவை. மலைப் பிராந்திய வரிக்குதிரைகளில் மேலும் இரு துணை இனங்கள் உள்ளன. இவற்றின் அடிவயிறு வெள்ளையாக இருக்கும். வெள்ளை வரிகளுக்கிடையிலான இடைவெளியும் குறைவாக இருக்கும். அதேசமயம் சமவெளிப் பிராந்திய வரிக்குதிரைகள் அதிக இடைவெளி கொண்ட வெள்ளைக் கோடுகளைக் கொண்டிருக்கும்.
இவ்வளவு பிரிவுகள் இவற்றுள் இருந்தபோதும், இவற்றுக்குக் கலப்புத் திருமணத்தில் ஆர்வம் இல்லை! இனம் இனத்தையே நாடும் என்கிறார்கள் அவதானிகள். எனினும், பிடித்து வைக்கப்பட்ட நிலையில், இருவேறு இன வரிக்குதிரைகள் ஒன்றுடன் ஒன்று புணர்ந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கிரெவிஸ் இன ஆண் வரிக்குதிரையை, மலைப் பிராந்திய இனத்துடன் புணர வைத்தும், குட்டி ஈனும் விடயத்தில் வெற்றி காண முடியவில்லை.
ஓர் இன வரிக்குதிரையின் அடிவயிறு வெண்மையாக இருந்தமையால், வரிக்குதிரைகள் வெள்ளை உடம்பில் கறுப்புக் கோடுகள் கொண்டவை என்றே பலர் கருதி வந்தார்கள். ஆனால், இது தவறு என்றும் கறுத்த உடலில்தான் வெண்மையான வரிகள் இருக்கின்றன என்றும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. வரிகள் இவற்றின் தலை, கழுத்து, முன்புறம், பிரதான உடற்பகுதிகள் ஆகியவற்றில் கிடையாகவும், பின்புறம், காற்பகுதிகள் ஆகியவற்றில் செங்குத்தாகவும் அமைந்திருப்பதை நாம் காணலாம்.
குதிரைகளைப் போல இவற்றால் வேகமாக ஓட முடியாது என்பது உண்மைதான். என்றாலும், இவற்றின் அதீத உடற்சக்தி, எதிராளிகளிடம் இருந்து தப்பிக்க உதவுகின்றது. சிங்கம் தன்னைத் துரத்தும்போது, நெளிந்து வளைந்து, பக்கத்திற்கு பக்கம் ஓடி, இது அதனைக் களைப்படைய வைத்து விடும். தன்னை ஒரு மிருகம் மடக்கிவிட்டால், பலமான கால்களால் முகத்தில் உதைத்தோ, கடித்தோ தன்னை விடுவித்துக் கொள்ள முயலும்.
குதிரைகளை விட வரிக்குதிரைகளின் செவிகள் பெரியவையாகவும் வட்டமானவையாகவும் அமைந்திருப்பது இவற்றின் செவிப்புலனை மிகக் கூர்மையாக்கியுள்ளது. மோப்ப சக்தியும் இவற்றுக்கு அதிகம்!
குதிரைகளைப் போல நின்றபடிதான் வரிக்குதிரைகளும் தூங்கும். எனினும், விதிவிலக்காக, தம்மைச் சுற்றி எதிரிகள் இருந்தால், ஒரு பாதுகாப்பு வளையத்தை அமைத்துக் கொண்டு, தரையில் கிடந்து உறங்கும்.
இவற்றின் காதுகளின் நிலையை வைத்து, இவற்றின் உணர்வைக் கண்டறிந்து விட முடியும் என்கிறார்கள் ஆய்வாளர்கள். வரிக்குதிரை மிக அமைதியாக, சினேகபூர்வமான நிலையில் இருந்தால் காது மடல்கள் நிமிர்ந்து நிற்கும். அச்சத்தில் இருந்தால், காது மடல்கள் முன்னோக்கி நீண்டிருக்கும். கடுங் கோபத்தில் இருக்கும்போது, காது மடல்கள் பின்னோக்கி நீண்டிருக்கும். ஓர் இடத்தை அவதானமாக அது நோக்க முற்படும்போது, விறைப்புடன் அது நிற்பதோடு, காது மடல்களும் விறைத்து நிற்கும். எவராவது தன்னைத் தாக்க வருவதை அறிந்து விட்டால் குரைப்பது போன்ற சப்தத்தை எழுப்பி, மிகப் பலமாக அபாயக் குரல் கொடுக்கும்.
புற்கள்தான் இவற்றின் பிரதான உணவு. பற்றைகளில் (புதர்களில்) உள்ளவற்றையும், மரப் பட்டைகளையும் இடையிடேயே சாப்பிடுவதுண்டு. மற்றைய தாவர உண்ணி விலங்கினங்களைப் போல இவற்றிற்குச் சத்து அதிகமான உணவு அதிகம் தேவைப்படுவதில்லை.
பெண் வரிக்குதிரைகள் மூன்றாவது வயதில் தாயாகி விடுகின்றன. ஆண் வரிக்குதிரைகளோ ஐந்து அல்லது ஆறு வயதை எட்டிப் பிடிக்கும்போதுதான், உடல் உறவு வைத்துக்கொள்ளும் உடல் முதிர்ச்சியை அடைகின்றன. ஆண்டுக்கு ஒரு தடவை ஒரு குட்டியை இவை ஈனுகின்றன. பிறந்த சொற்ப நேரத்தில், குதிரைக் குட்டிகளைப் போல இவை எழுந்து நின்று தாயிடம் பால் குடிக்கத் தொடங்கி விடுகின்றன. பிறக்கும் குட்டி மர நிறமும் வெள்ளை நிறமும் கொண்டதாக இருக்கும்.
மலைப் பிராந்திய வரிக்குதிரை இனங்களுக்கும், சமவெளிப் பிராந்திய இனங்களுக்கும் அம்மாவின் முழுமையான பாதுகாப்பும், கூட்டத்திற்குத் தலைமை வகிக்கும் அப்பாவின் பாதுகாப்பும் கிடைக்கும். ஆனால், கிரெவிஸ் இனத்துக் குட்டிகளுக்கோ அம்மாவின் பாதுகாப்பு மட்டுந்தான். காரணம், சில மாதங்களில் இவற்றின் கூட்டம் பிரிந்து ஆண் வரிக்குதிரை கூட்டத்தை விட்டு வெளியெறி விடுவதுண்டு.
வழக்கம்போல, வரிக்குதிரைகளின் பெரிய எதிரி மனிதனாகவே இருக்கின்றான். இவற்றின் தோலுக்காகவும், இறைச்சிக்காகவும் இவை பெரிய அளவில் கொல்லப்பட்டு வருகின்றன!
இந்த வரிகள் இவற்றுக்கு எப்படி வந்தன என்பதை விளக்க, ஆப்பிரிக்காவில் நாட்டுப்புறக் கதையொன்று உண்டு. இது நமீபியா நாட்டுக்குரிய கதை.
அப்பொழுதெல்லாம் வரிக்குதிரைகளின் நிறம் தனி வெள்ளையாகத்தான் இருந்ததாம். ஒரு நாள் ஒரு நீர்ச் சுனையில் பபூன் ஒன்றுடன் சண்டை போட்ட சமயம் கால் இடறி, எரியும் நெருப்புக் கொள்ளிகளுக்கு மத்தியில் விழுந்துவிட்டதாம் வரிக்குதிரை. உடலை நெருப்புத் தணலாக இருந்த கம்புகள் எரித்தமையால் கோடு போட்டதுபோல உடம்பில் வரிகள் பதிந்து விட்டனவாம்! அந்த நாளில் இருந்து வரிக்குதிரைகள் கறுப்புக் கோடுகள் கொண்டவையாக மாறிவிட்டன என்கிறது இந்த நாட்டுப்புறக் கதை.
அழகான மிருகங்களைச் சுற்றி அழகான கதைகள், அவற்றைப் பற்றிய விசித்திரமான குணாதிசயங்கள் என நிறைய இருக்கின்றன. ஆனால், நாம் இவற்றை அழிக்காத வரைதான் இந்தக் கதைகளைக் கேட்டு, அவற்றை நேரிலும் பார்த்து ரசிக்க முடியும்! இல்லையென்றால் இவை எல்லாமே வெறும் சித்திரங்கள்தான்!