(சயின்ஸ் டெய்லி 2,ஆகஸ்ட்,2009 இதழில் வந்துள்ள செய்தி)
வயிற்று வியாதி உள்ள குழந்தைகளுக்கு ஓஹையோவில் (கொலம்பஸ், அமெரிக்கா) உள்ள நேஷன்வைட் சில்ட்ரன்ஸ் ஹாஸ்பிடல் ஒரு நல்ல செய்தியை அறிவித்துள்ளது.
ஒரு 16 வயது நோயாளிக்கு இந்த ஆண்டு (2009) ஜூன் மாதம் பேஸ்மேக்கரை சர்ஜன்கள் பொருத்தினர். இந்த நோயாளி Gastroparesis என்ற வயிற்று வியாதியால் அவதிப்பட்டுக் கொண்டிருந்தார், உணவை ஜீரணமாக்குவதில் கோளாறுகள் கொண்ட ஒரு கஷ்டமான வியாதி இது.
இந்த மருத்துவமனையில் இப்படி ஒரு புதுக் கருவியை பொருத்துவது இதுவே முதல் தடவை!.Gastroparesis என்ற வியாதி நிலையில் வயிறு மிக குறைந்த அளவே சுருங்குவதோடு அதிக சக்தியின்றி சுருங்குகிறது. இதனால் வயிறில் உணவு நெடு நேரம் இருக்கிறது. 60 சதவிகித குழந்தைகளுக்கு ஏன் இந்த வியாதி வந்தது என்பதன் காரணம் தெரிவதில்லை.
வாந்தி எடுக்கும் உணர்வு, வயிறு உப்பிய நிலை ஆகியவற்றால் குழந்தைகள் இந்த நிலையில அவஸ்தைப் படுகின்றனர். இதனால் ஊட்டச்சத்துக் குறைவும் எடை இழப்பும் ஏற்படும். இந்த வியாதி தீவிரமான நிலையில் இருந்தால் குழந்தைகள் பள்ளிக்குச் செல்ல முடியாமல் போகும்; அத்தோடு தினசரி செயல்பாடுகளிலும் தொய்வு ஏற்படும்.
வயிறின் கீழ்ப்பகுதியில் செருகி பொருத்தப்படும் பேஸ்மேக்கரின் மின் வயர்கள் வயிறைத் தொடும். இது சாப்பிட்ட பிறகு வயிறை ஊக்குவிப்பதற்காக மின் துடிப்புகளை அனுப்பும். வயிற்றில் தோலின் கீழே அறுவை சிகிச்சை மூலம் பேஸ்மேக்கர் பொருத்தப்பட்டு இரண்டு எலக்ட்ரோடுகள் வயிற்றின் சுவரில் பொருத்தப்பட்டிருக்கும். இது ஒரு குறிப்பிட்ட நேரத்தில் வயிறை காலி செய்யச் சொல்லும்.
குழந்தை நல மருத்துவரான ஸ்டீவன் டெய்க் இதை விவரித்துக் கூறுகையில்,”இது குழந்தையின் வயிறை சீக்கிரம் காலி செய்கிறது. வாந்தி, உப்பிய உணர்வு ஆகியவற்றை நீக்குகிறது” என்றார்.
பேஸ்மேக்கர் பல வருடங்களாக வயது வந்த நோயாளிகளுக்கு சீக்கிரம் வயிறை காலி செய்வதற்காக பொருத்தப்பட்டு வருகிறது. ஆனால் குழந்தைகளுக்கு இப்படி பேஸ்மேக்கர் பொருத்தப்படுவது இதுவே முதல் தடவை.
“இதன் விளைவுகள் மிக நன்றாக இருக்கும். இரண்டு வாரங்களுக்குள்ளேயே எல்லா நோய் அறிகுறிகளையும் கண்டுபிடித்து தீர்வு காண முடியும்” என்கிறார் மொடிலிடி சென்டர் டைரக்டரான ஹயாத் மௌஸா.
இதற்கு முந்தைய சிகிச்சை முறைகள் போதுமான அளவு பலனளிக்காதவை என்ற செய்தியை வைத்துப் பார்க்கும் போது மருத்துவ உலகின் இந்தப் புதிய கண்டுபிடிப்பு மிகவும் வரவேற்கத் தக்கது!