வம்புப் பேச்சு வாழ்க!

ஒருவர் நம் எதிரில் இல்லாத போது அவரைப் பற்றிப் பேசத்தான் எவ்வளவு ஆர்வம் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது! இதுவே முதல் வேலையாக வைத்துக் கொண்டு பார்க்கின்ற வேலையைத் துணை வேலையாக ஆக்கிக் கொண்டவர்கள்தான் நம்மில் எத்தனை பேர்!

இது தவறு என்று நெறிமுறைகளை வலியுறுத்துவோர் சொல்வது ஒரு பக்கம் இருக்கட்டும்; எதையும் ஆய்ந்தே தீருவது என்று கங்கணம் கட்டிக் கொண்ட அறிவியல் இந்த வம்புப் பேச்சைப் பற்றி என்ன சொல்கிறது என்று தெரிந்து கொள்ள வேண்டாமா?

எதிரில் இல்லாதவர்கள் பற்றி மிகுந்த ஆர்வத்துடன் வம்பு அளக்க ஒவ்வொருவரும் துடிப்பது ஏன் என விஞ்ஞானிகள் பல வருடங்களாக ஆராய்ந்து வருகின்றனர்!

ஒரு குழுவில் இருக்கும் பல்வேறு மனிதர்களை மிகவும் நெருக்கமாக ஆக்குவது இந்த வம்புப் பேச்சுதான் என்பது அவர்களின் ஆய்வின் முடிவு!

மிகப் பழைய காலத்தில் மனிதர்கள் சிறு சிறு குழுக்களாக வாழ்ந்து வந்த போது அன்னியர்களைச் சந்திக்கும் வாய்ப்பு மிகக் குறைவு. ஆனால் இப்படி மற்றவரைப் பற்றி வம்பு பேசி வந்ததால்தான், அது நம்மைக் குழுவாக தொடர்ந்து இருக்க வைத்து சந்ததியினரை வளர்த்து இன்றும் மனித குலம் வாழும்படி செய்த காரணங்களில் ஒன்றாக இருக்கிறது!

சினிமா நடிகர்களைப் பற்றியும் நடிகைகளைப் பற்றியும் நாம் வம்புச் செய்திகளை அறிய ஆர்வமாக இருப்பது அவர்களின் சமூக அந்தஸ்துதான்! நம் வாழ்க்கையில் அவர்கள் ஒரு முக்கிய அங்கம் வகிக்கிறார்கள் – அவர்களைப் பற்றிய அனைத்தையும் அறிந்து கொள்வது இயல்புதானே!

ஆனால் இந்த வம்புப் பேச்சே ஒருவரின் எதிர்மறை குணங்களையும் குற்றங்களையும் தன்னுடைய சுயநலத்திற்காகப் பயன்படுத்தும் போதுதான் அது விரும்பத் தகாத விளைவை ஏற்படுத்துகிறது!

ஆனால் ஒருவருடன் வம்புப் பேச்சை அந்தரங்கமாகப் பகிர்ந்து கொள்ளும்போது அவரை நாம் மிகவும் நம்புகிறோம் என்று ஆகி விடுகிறது. இதை யாரிடமும் சொல்லி விடாதே என்று நம்பிக்கையுடன் சொல்லி அவரை நமது நண்பர்கள் பட்டியலில் முன்னணியில் வைத்திருப்பதை மறைமுகமாகச் சொல்கிறோம்!

டல்ஹவுஸி பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஜெரோம் பார்கோ என்ற விஞ்ஞானி எந்த மாதிரி வம்புப் பேச்சு அனைவரையும் கவர்கிறது என்று விலாவாரியாகச் சொல்லி விட்டார்!

எதிரிகள், நமது வாழ்க்கைத் துணைவர் அல்லது துணைவி, உறவினர்கள், சமூக அந்தஸ்தில் பங்காளியாக இருப்பவர்கள் ஆகியோர் பற்றிய செய்திகளும் நம்மைப் பாதிக்கும் மிக உயர்ந்த ஸ்தானத்தில் இருப்பவர்களின் நடத்தையும் நாம் விரும்பிக் கேட்கும் வம்புச் செய்திகள்!

அதிகம் அதிகமாக மற்றவர்களைப் பற்றிய செய்திகள் நம்மிடம் சேரும் போது நமது முக்கியத்துவமும் உயர்கிறது! அதுவும் பிறரைப் பற்றிய எதிர்மறைச் செய்திகள் அதிகமாகச் சேர்ந்தால் நம்முடைய சமூக அந்தஸ்தே தனி – அதைப் பரிமாற்றம் செய்து கொள்ளும் போது!

ஆண்கள் ஆண் பற்றியும் பெண்கள் பெண் பற்றியுமே வம்பளக்க ஆசைப்படுகிறார்கள் என்பது விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பு. அதுவும் ஒரு பதினெட்டு வயதுப் பெண் அதே வயதில் இருக்கும் இன்னொரு பெண்ணைப் பற்றி வம்பளக்க மிகவும் ஆசைப்படுகிறாள்! அவள் 50 வயது பிஸினஸ் மாக்னெட்டைப் பற்றி வம்பளக்க அவ்வளவாக ஆசைப்படுவதில்லை. ஆனால் நாம் நேசிக்கும் ஒருவர் எதிர் இனமாக இருந்தால் அதாவது ஆண் பெண்ணையும் பெண் ஆணையும் நேசிக்கும் போது அவர்கள் பற்றிய செய்தி எதுவாக இருந்தாலும் அது மிக முக்கியமாக ஆகி விடுகிறது!

பிரபலங்களைப் பற்றிக் கிசுகிசுக்க இன்னொரு முக்கிய காரணம், அது பேச்சுக்கு ஒரு நல்ல ஆரம்பமாக இருக்கிறது. பிரபலமாக இருக்கும் நடிகையோ அல்லது விளையாட்டு வீரரோ அனைவராலும் விரும்பப்படுவதால் அவர்களைப் பற்றிய செய்திகளைப் பரிமாறிக் கொள்ளும் போது உறவு பலப்படுகிறது.

2007ம் ஆண்டு இணைய தள ஆய்வை நடத்திய சார்லட் ஜே எஸ் டீ பாக்கர் என்ற பெல்ஜிய உளவியலாளர் பிரபலமானவர்களைப் பற்றி கிசுகிசுக்கும் போது அவர்களின் வாழ்க்கை ஸ்டைலை பின்பற்ற இளைஞர்கள் பெரிதும் விரும்புவதாகத் தெரிவித்துள்ளார். அவர்களையே ரோல் மாடலாக வைத்துக் கொள்கிறார்கள் இளைஞர்கள்!

ஆகவே வாரீர் வம்பளப்போம்! அறிவியலே ஆமோதித்து விட்ட பின்னர் வம்பளப்பதில் என்ன தவறு! வம்புப் பேச்சு வாழ்க!

About The Author

2 Comments

  1. நந்திதா

    அன்புடையீர்.
    வணக்கம்
    நிலா சாரலைத் திறந்தால் வைரஸ் உள்ளது என்ற எச்சரிக்கை வருகிறது. தயை செய்து கவனிக்கவும்
    அன்புடன்
    நந்திதா

Comments are closed.