அது வாயிலிருந்து வெள்ளையாய் கக்கியது. கக்கும் பொழுது மிக சிரமப்பட்டு முகத்தை சுழித்தது. உடம்பை வளைக்க முயன்று முடியாமல் மெலிதாய் அசைந்தது. அதன் இயலாமை அவளை வெகுவாக பாதித்தது.
அதைப் பார்க்க முடியாமல் தலை கவிழ்ந்தாள். என்ன செய்தும் அவளால் கட்டுப்படுத்த இயலவில்லை. அப்படியே சலீமின் தோளில் விழுந்து அழுதாள். "என்னாலதானே இதெல்லாம்..?"
கிட்டதட்ட அவனும் அழுது விடும் நிலையில்தான் இருந்தான்.இருந்தும் காட்டிக் கொள்ளாமல் அவளைத் தேற்றினான்.
"அதான் ஒன்னும் இல்லைன்னு டாக்டர் சொல்லிட்டா§ர.. அப்புறமும் ஏன் அழற..?"
அவனுடைய பேச்சு சற்று ஆறுதலாய் இருந்தாலும் அவளால் அழுகையை நிறுத்த முடியவில்லை. அங்கு படுத்திருப்பது அவளுடைய இரண்டாவது குழந்தை. நேற்று வரை சிரித்து, அழகாய், சின்னதாய் கொட்டாவி விட்டு உறங்கிய குழந்தை.. இன்று இப்படி, இந்த இருப்பை அவளால் ஜீரணம் செய்யவே முடியவில்லை.
திடீரென வாந்தியும் பேதியுமாய் போகவும், அவளுக்கு ஒன்றும் புரியவில்லை. மாலை வரை பார்த்துவிட்டு, இங்கு கொண்டு வந்தாள்.
"அட்மிட் பண்ணிதாம்மா பார்க்கணும்.. இப்போதைக்கு ஒன்னும் சொல்ல முடியாது."
அவளால் விலை மதிக்க முடியாத ஒன்று, சிறு கருணை கூட அற்று மிக சாதாரணமாக அலட்சியப் படுத்தப்படவும் அவளுக்கு உள்ளே என்னவோ செய்தது. புரியாமல் ஏதேதோ உளறினாள்.
"நேத்து வரைக்கும் நல்லாத்தான் இருந்துச்சு டாக்டர், இப்போ திடீர்னு என்னவோ ஆய்டுச்சு.. கொஞ்சம் என்னன்னு பாருங்க.." அவள் கையெடுத்து கும்பிடவும்,
"மொதல்ல பதட்டப்படாதீங்க. நான் என்னன்னு பார்க்கிறேன்.."
அவள் கூப்பிய கையை கீழே இறக்காமல் இருந்தாள். தடுப்பாரற்று கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது. டாக்டர் மெல்ல ஸ்டெதஸ்கோப்பை குழந்தையின் மார்பு, வயிறு, முதுகில் வைத்துப் பார்த்துக்கொண்டே,
"குழந்தைக்கு இது எத்தனாவது மாசம்..? தாய்ப்பால்தானே குடுக்கறீங்க..?"
"பத்தாவது மாசம் டாக்டர்.. தூங்கும் போது மட்டும் புட்டி பால் குடுக்குறோம்.."
"ஓ, ஏதாவது மண்ல படுக்க வெச்சிருந்தீங்களா..?"
"இல்ல, எப்பவுமே என் கையிலதான் இருக்கும், அல்லாஹ் தந்த பரிசு..!" அவள் சொல்லும் போது வற்றி இருந்த அவள் கன்னம் மீண்டும் வெள்ளமானது..
"ம்ம், பாட்டில் நிப்பிள் அடிக்கடி மாத்திடறீங்களா..?" டாக்டர் கேள்வி புரியாமல் அவரைப் பார்க்கவும்.. அவர் மீண்டும் கேட்டார். அவளுக்கு சுளீரென்று அடித்தது,
"அல்லாஹ் என்னால, என் கவனக்குறைவாலதானே இந்த குழந்தைக்கு இவ்வளவும் நடந்தது..??"
"என்னம்மா உங்களத்தான்.. அடிக்கடி மாத்தறீங்களா என்ன..?.."அவள் தயங்கி, மெல்லிய விசும்பலுடன், "இல்ல, அது மாத்த மறந்திட்டேன்.." சொல்லிவிட்டு சேலைத் தலைப்பில் முகம் பொத்தி அழ ஆரம்பித்தாள்.
"ஒன்னும் பிரச்சினை இல்ல, அழாதீங்க.. உடனே குழந்தைய அட்மிட் பண்ணிருங்க.."அவர் சொல்லிவிட்டு வேகமாய் குழந்தைக்குத் தர வேண்டிய மருந்துகளை எழுதவும், அவள் குழந்தையை நெஞ்சில் புதைத்து, அதன் தலை மேல் தன் தலையை வைத்து அழுதாள்.
"அந்த டெஃப்லான கொஞ்சம் எடுத்துட்டு வாங்க.." அந்த நர்ஸ் யாரிடமோ கூறிவிட்டு, தன் கையில் வைத்திருந்த காட்டன் துணியை ஒன்றின் மேல் ஒன்று சுற்றி, பிளாஸ்த்திரியால் ஒரு பேஃட் போல் செய்து குழந்தையின் கையில் கட்டினாள். கிட்டத்தட்ட கை உடைந்து கட்டு போட்டாற்போல் ஆயிற்று. குழந்தையின் கையில் ஒரு நரம்பை தேர்வு செய்தாள்.
நர்ஸ் குளுக்கோஸ் ஏற்ற மிக நீண்ட ஊசியை எடுத்து குழந்தையின் கைகளை அழுத்தும் போது, தலை கவிழ்ந்து கொண்டாள்.
"அல்லாஹ் என் குழந்தைய காப்பாத்து.."
அவள் இடைவிடாமல் பிரார்த்திக்கவும், குழந்தை வீறிட்டு அழுதது.
"இது கடைசிக்கு வந்ததும் என்னைக் கூப்பிடுங்க" அந்த பாட்டிலின் அளவைக் காட்டி விட்டு அவள் நகரவும்..
"அத கரெக்ட்டா பார்த்துகுங்க, தீந்து போச்சுன்னா கையில இருக்கிற ரத்தமெல்லாம் அதுல போய்டும்".. கேட்காமலே புது பயத்தை தந்தாள் அருகில் இருந்த ஒருத்தி. பயத்தைப் பரிமாறிக் கொள்வதும் மனித இயல்புதான் போலும்!
அவளுடைய குழந்தையும் கிட்டதட்ட அதே போல் படுத்திருந்தது. என்னவென்று விசாரித்தாள். ஏனோ சற்று ஆறுதலாய் இருந்தது. வருத்தத்தை இன்னோர் வருத்தம் சமப்படுத்துவது எப்படி என்றே புரியவில்லை. ஒரு வேளை தனக்கு மட்டும்தான் பிரச்சினை என்று ஒரு பிரமை தோன்றி, அருகில் இருப்போர்க்கும் பார்த்து, பொது என்று உணரும்போது அமைதி கொள்ளுதோ..?..இல்லை பிறர் வருத்தம் அடைகையில் தேற்ற வேண்டிய பொறுப்பை மனம் உணர்வதால், சுய வருத்தம் மறைந்து கொள்கிறதோ..??
சலீமைப் பார்த்த உடனே அவள் அழுதாள். இரவு முழுக்க அவள் உறங்க வில்லை.நிமிடத்திற்கு ஒரு முறை அது தீர்ந்து விட்டதா என பார்த்தாள். அறிவு அது தீர வாய்ப்பில்லை என்று சொன்னாலும் மனம் அதைக் கேட்க மறுத்தது. ஏற்கெனவே தன் பிள்ளைக்குத் தன்னால்தான் இப்படி ஆனது என்ற குற்ற உணர்வு அவளை பாடாய் படுத்தியது.
"வாப்பா எனக்கு பசிக்குது", அதிகாலை தொழுகை முடித்து விரைவாக உனவருந்த பழக்கப்படுத்தி இருந்ததாலும், இன்னும் உள்ளிருந்து தோன்றும் உணர்வுகளை மறைத்து இடத்திற்கு தகுந்தாற்போல் பேசும் வயது வராததாலும், அவன் மறைக்காமல் கேட்டான். சலீம் தலையசைத்து இருவருக்கும் உணவு வாங்கி வரச் சென்றான்.
அவன் நடந்தானே தவிர, சிந்தை எல்லாம் வேறு எங்கோ இருந்தது.
"நேத்து அவசரப்பட்டு கையில் இருந்த எல்லா காசுக்கும் சரக்கு வாங்கிட்டமோ..?..இப்படி ஆகும்னு யாருக்குத் தெரியும்.. இப்போ கையில இருக்கிற காசு நிச்சயம் பத்தாது.. சரக்க திருப்பிக் குடுத்திட்டு காச குடுன்னா குடுப்பானா..? கேட்டுப் பார்க்கணும்.."
சலீம் இருக்கும் தெரு வண்ணத்துப் பூச்சியின் உடலைப் போன்றது. அதன் இரு பக்க இறக்கைகள் போல் சுற்றிலும் வீடுகள் அமைந்து இருக்கும். அதன் இரு முனைகளிலும் இரு கடைகள் அமைந்திருக்கும். நடுவில் இருப்பது அவனுடையது. பெரும்பாலும் இரு முனைகளிலும் உள்ள கடைகளில்தான் கூட்டம் ஆக்கிரமிக்கும். இடைபட்ட மக்கள்தான் இவன் கடையை நாடுவர்… "இந்த லட்சணத்துல இருந்த காசுக்கெல்லாம் சரக்கு வாங்கிப் போட்டாச்சு.." சலீம் நொந்து கொண்டே இருவருக்கும் சாப்பிட வாங்கி வந்தான்.
"சரி.. நான் கடை வரைக்கும் போய்ட்டு வரேன்.." சலீம் சொல்லவும், இப்போது அவனைத் தடுப்பது உசிதமற்றது என்பதை உணர்ந்ததால் அமைதியாக இருந்தாள். அவன் குழந்தையை ஒரு முறை பார்த்துவிட்டு அங்கிருந்து நகர்ந்தான்.
கிட்டதட்ட அந்த ஊரே நிரம்பி வழிந்தது, அவன் தெருவிற்கு அருகில் உள்ள மாரியம்மன் கோவில் திருவிழா.
"நிச்சயம் பஸ்ல கூட்டம் நிரம்பி வழியும், பேசாம நடந்தே போயிடலாம்.." அவனுக்குக் கொஞ்சம் நடக்க வேண்டும் போல் இருந்தது.
"சரக்க வாங்கிட்டு காசு தரமாட்டேன்னா, யார் கிட்டயாவது கேட்டு பார்க்கனும், யார்கிட்ட..? அல்லாஹ் நீதான் ஒரு வழியக் காட்டனும்.."அவன் யோசித்துக்கொண்டே நடக்க..
அவன் கடை எதிரே யாருக்கோ காத்திருந்தது போல் ஒரு கூட்டம் நின்றது..
"என்ன பாய்,, எவ்ளவு நேரமா உங்களுக்காகக் காத்திருக்கிறது, இன்னிக்கு அம்மன் விஷேசம், உங்க கடையத் தவிர மத்ததெல்லாம் மூடிடுவாங்கன்னு தெரியாதா..? சீக்கிரம் கடையத் தொறங்க. அம்மனுக்கு பொங்க சாமான் வாங்கணும்.." வாடிக்கையாய் கடைக்கு வருபவன் சொல்லவும்தான் சென்ற முறையும் இப்படி ஆனது நினைவுக்கு வந்தது.
அவசர அவசரமாக கடையைத் திறந்தான். "பாய் எனக்கு மொதல்ல சாமானெல்லாம் கட்டுங்க.." வாடிக்கையாய் வருபவன் மற்றவர்கள் முன்னிலையில் தனக்கும் அந்த கடைக்கும் உள்ள உறவை பறைசாற்றவும்.. சலீம் தலை அசைத்தான்.
ஒவ்வொரு முறை கையில் பணம் வரும்போதும் நெஞ்சு "அல்லாஹ்..அல்லாஹ்.." என்றது. "பாய் பிரசிடெண்ட் வாங்கியார சொன்னாரு.." ஒரு பெரிய தாளை நீட்டவும், தேவைக்கு சரியான நேரத்தில் பெறும் உதவி அனைத்தையும் கரைய வைத்துவிடும். நன்றிப் பெருக்கில் சலீமின் கண்களில் நீர் நிறைந்தது. பொருள் எடுப்பதாய்த் திரும்பி அதைத் துடைத்துக் கொண்டான்.
கிட்டதட்ட அரை மணி நேரத்திற்குள் தேவைக்கு அதிகமாகவே சலீமின் கையில் பணம் சேர்ந்தது. இனி போதும்.. என்றெண்ணி கடையை மூடிய போது மாரியம்மன் அந்த வழியே ஊர்வலமாய் வந்துகொண்டிருந்தாள்.
சலீம் வானத்தை ஒரு முறை பார்த்து.. "அல்லாஹ் இவர்கள் திருவிழா நன்றாக நடக்கட்டும்..!!" என்று பிரார்த்தித்துக் கொண்டான்.
very good story!
நன்றி..
ஈ நேட் அ லொவெ ஸ்டொர்ய்…….
நல்ல கதை, நன்றி