கொடியிடை அன்னையாய்க் கொஞ்சும் எழிற்காவில்
குலதெய்வ மான திருவே
கொங்குதேர் வாழ்க்கை இறையனார் பொருளெனக்
கொண்டபெரு மாட்டி நீயே
அடியவர்கள் குறைதீர அம்மையப்பன் காட்சி
அருளமுது வழங்கு முதலே
ஆகாயம் பூமி பிற அண்டங்கள் அத்துணையும்
ஆள்கின்ற சக்தி நீயே
துடியிடை மங்கையரின் நெற்றித் திலகமெனத்
துலங்கிடும் தெய்வம் நீயே
தூய முகத்தழகு முப்போது மேதிகழத்
தோற்றிடும் பேரழகியே
வடிவுடை அம்மனாய் ஒற்றியூரில் திரு
வழங்கிடும் அன்னை நீயே
வருபவர்கள் அனைவர்க்கும் வரமருள் தேவியே
வார்குழல் அம்மை நீயே!
[நன்றி : "நம் உரத்தசிந்தனை" மாத இதழ்-சென்னை-நவம்பர் 2008]