பொதுவாக, தட்சிணாமூர்த்தி எல்லா ஆலயங்களிலும் தென் திசை பார்த்து அமர்ந்திருப்பார். வலது கரத்தில் சர்ப்பமும் இடது கரத்தில் அக்னியும் தாங்கியபடிக் காட்சியளிப்பார். இடது கால் கீழே படிந்திருக்கும், வலது கால் மேலே பார்த்தபடி இருக்கும். ஆனால், நான் சமீபத்தில் கண்ட தட்சிணாமூர்த்தி வித்தியாசமானவர்!
ஒரு பெரிய ஆலமரம். அதைப் பார்க்கும்போது, ஒரு பெரிய சர்ப்பம் தன் குடையை விரித்துக்கொண்டு இருப்பது போல் இருக்கிறது. அதன் கீழே தட்சிணாமுர்த்தி வடக்கு திசை பார்த்து அருள் புரிகிறார்! ஞான ஸ்வரூபியான குருமூர்த்தியின் இந்தச் சிலை சுமார் 11அடி உயரமாவது இருக்கும். வழக்கம் போல் நான்கு கரங்கள். ஆனால், அக்னியை வலக்கரத்திலும் பாம்பை இடக்கரத்திலும் ஏந்தியிருக்கிறார். நம் மனதில் எழும் அழுக்குகளைப் பொசுக்க அக்னி. நச்சுப் படிந்த நம் எண்ணங்களை அடக்கக் கூடியவர் என்பதைக் காட்ட இன்னொரு கையில் பாம்பு! குரு என்றாலே சின்முத்திரை இருக்கும். கீழ் வலது கரம் அதைக் காட்டுகிறது. இடது கரமோ ஓலைச்சுவடியை ஏந்தியபடி இருக்கிறது. சாதாரணமாக, தெற்கு நோக்கி இருக்கும் முயலகன் இங்கு மேற்கு நோக்கியிருக்கிறான். வழக்கத்துக்கு மாறாக, குருமூர்த்தியின் வலது கால் கீழே படிந்திருக்க, இடது கால் அதன் மேல் தூக்கியபடி இருக்கிறது!
இந்த வித்தியாசமான தட்சிணாமூர்த்தி அருள் புரியும் இடம் வட சென்னையில் திருவொற்றியூர். புகழ்பெற்ற வடிவுடையம்மன் ஆலயத்தின் அருகிலேயே. மூலவரின் கீழே சனகாதி முனிவர்களைக் காணலாம். ஆலயத்தில் இருக்கும் கணபதியும் வித்தியாசமாகச் சிங்கத்தின் மீது அமர்ந்திருக்கிறார். இவர் பஞ்சமுக ஹேரம்ப கணபதி . பத்துக் கரங்கள் கொண்டு பிரம்மாண்டமாக அருள்பாலிப்பவரின் ஒவ்வொரு கையிலும் ஒவ்வோர் ஆயுதம். ஞானமூர்த்தியான மூலவரின் அருகில் உற்சவரும் நல்ல தீர்க்க முகத்துடன் காட்சியளிக்கிறார். இங்கு ஆதிசங்கரர், வியாசர், கிருஷ்ணர் ஆகியோரையும் காண முடிகிறது.
இந்த இடத்தில், பல நூற்றாண்டுகளுக்கு முன் யோகேஸ்வரர் என்ற சித்தர் ஒருவர் இருந்தார். அவர்தான், இந்தத் தட்சிணாமூர்த்தி இப்படி வடக்கு நோக்கி, அம்பாள் வடிவுடையாளைப் பார்த்து அமர்ந்திருக்கும் காரணத்தைத் தன் ஞானத்தினால் உணர்ந்தார். அதாவது, அம்பாளுக்கு ஞான உபதேசம் செய்யவே இப்படி அவர் வடதிசை பார்த்து அமர்ந்திருக்கிறாராம்!
இதைப் புரிந்து கொண்டபின், அவர் இந்த இடத்தில் வேதபாடசாலைபோல் ஒன்று அமைக்க விரும்பினார். பின், வேதப்பயிற்சிகள் இங்கு தொடங்கின. சித்தர் யோகேஸ்வரருக்குப் பின் வேதப்பயிற்சிகள் நடத்தும் பொறுப்பை அவர் சந்ததியார் ஏற்றுக்கொண்டனர். இங்கு ஒலிக்கும் வேத ஒலிகள் நம் காதுக்கு மிகவும் ரஞ்சகமாக இருக்கின்றன. போனவுடன் நமக்குள் நேர்மறை அலைகள் ஊடுருவி நுழைவதை நம்மால் உணரமுடிகிறது! இந்தக் கோயில், பார்க்கக் கோயில் போலவே இல்லை; கோபுரம் ஒன்றுமில்லாமல், கேரளப் பாணியில் கூரை வேயப்பட்டு ஒரு மடம் போல் தோற்றமளிக்கிறது. ஆனால் அந்த மடத்திற்குள் நுழைய ஏதோ ஒரு சக்தி நம்மை ஈர்க்கிறது! இங்கிருக்கும் தட்சிணாமூர்த்தியின் அழகைச் சொல்லிமுடியாது. அவர் கம்பீரமாக, ஞானமூர்த்தியாக நம் மனதில் அப்படியே பதிந்து விடுகிறார்!
இந்த ஸ்தலம், வட குரு ஸ்தலமாகப் புகழ்பெற்று விளங்குகிறது! தெற்கில் இருக்கும் ஆலங்குடி குரு ஸ்தலம்தான் நம் எல்லோருக்கும் தெரிந்திருக்கும். அதுபோல இந்தக் கோயிலிலும், குரு தோஷம் இருப்பவர்கள் வந்து பிரார்த்தித்தால் திருமணத்தடை விலகும் என்ற நம்பிக்கை நிலவுகிறது. அதே போல், குழந்தை பாக்கியம் இல்லாதவர்களும் இங்கு வந்து பிரார்த்திக்கின்றனர். ஒவ்வொரு குரு பெயர்ச்சியின் போதும் மிகவும் விமரிசையாகப் பூஜைகள் நடத்துகின்றனர்.
ஆலங்குடி வரை போக இயலாதவர்கள் திருவொற்றியூரிலிருக்கும் இந்த வடகுருவைத் தரிசிக்கலாமே!
நல்ல செய்தி . மகிழ்ச்சி சென்னை விருகம்பாக்கம் ஏவிஎம் கோலோனி கற்பக விநாயகர் கோயிலில் [ஆவிச்சி ஸ்கூல் பின்புறம்] சமார் 7 ஆண்டுகளாக தினமும் திருமுறை படித்து வருகிறோம் சிவன் சிலை பிரதிஷ்டை செய்து தமிழ் ஆகம முறைப்படி குடமுழுக்கு செய்து அனைவரும் அபிஷேகம்/போற்றி பூஜை செய்ய [காசி போல்] வசதி உண்டு பெயர் ஆருயிர் ஈசன் பார்த்தசாரதி. இதுவரை பிரதி மாதம் 3 வது சனிக்கிழமை திருவாசகம் முற்றோதல் 48 முறை நடந்திருக்கிறது. நமசிவாய