வானம் தன் ஒற்றைக் கண்ணை மெல்லத் திறந்து, இருளில் மூழ்கியிருந்த உலகை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்து கொண்டிருந்த நேரம். ய்ஆ..ஆ… என்று கொட்டாவி விட்டவாறே படுக்கையை விட்டு எழுந்தான் அய்யாசாமி.
அவனுக்கு இரவெல்லாம் சரியான தூக்கமேயில்லை. அவன் வாழ்ந்த நகரத்தைப் போல இந்த கிராமம் இல்லை. நேரங்கள் வேகமாக ஓட மறுத்தன. முகத்தைக் கழுவிக் கொண்டு, டீக்கடை வரை போய்விட்டு வரலாமென கிளம்பினான்.
தனுஷ் டீ கடை பெரிய பெரிய ஸ்பீக்கர்களுடன், பெரும் பாட்டு சத்தத்துடன் அவனை வரவேற்றது.
"ஒரு டீ போடுப்பா.. " என்று தோரணையாய் சொல்லி விட்டு, மெல்ல நாளிதழைப் புரட்டினான். கண்களால் முதல் பக்கத்தைமேய்ந்தான். அவன் கண்கள் ‘நேபாள் முதல் பரிசு 1 கோடி’ என்ற பெட்டிச் செய்தியில் நிலைத்தன. அய்யாசாமி வேகமாக நாழிதளின் பக்கங்களைப் புரட்டினான். ஏழாவது பக்கத்தில் குலுக்கல் முடிவுகள் அறிவிக்கப்பட்டிருந்தன. தன் சட்டைப் பையில் இருந்த, அந்த கசங்கிப்போன லாட்டரிச் சீட்டை எடுத்துப் பார்க்கலானான்.
‘ 9.. 8.. 1.. 6.. 3 .. 3.. 2… 7 ‘
"ஓ… யெஸ்ஸ்.. அதே நம்பர்!" அய்யாசாமியின் சந்தோஷத்திற்கு அளவே இல்லாமல் போயிற்று. எப்படியாவது 1 கோடி ரூபாயை வாங்கி வந்துவிட வேண்டும் என்ற எண்ணத்துடன் பேருந்து நிலையம் வந்தான் அய்யாசாமி.
கூட்டமான பேருந்தில் முண்டியடித்து ஏறி நகரத்தில் வந்து இறங்கினான். கண்டக்டர், "டிக்கட்… டிக்கட்" என்று கத்தியது அசரீரி போலக் கேட்டது அவனது கனவுலகத்தில்.
லாட்டரி ஏஜென்ஸியில் போய் விஷயத்தைச் சொன்னதும், "கொஞ்ச நேரம் இப்படி உட்காருங்க, மேனேஜர் இப்போ வந்திருவார்" என்று சாவகாசமாய்ச் சொன்னார்கள். கொஞ்ச நேரத்திற்குப் பதிலாக, வெகுநேரம் காத்திருப்புக்கு பின்பு மேனேஜர் வந்தார்.
"இவர்தான் லாட்டரியில் 1 கோடி ரூபாய் விழுந்திருப்பதாகச் சொன்னார்" என்று அறிமுகம் செய்து வைத்தார் அவரின் உதவியாளர்.
"பரிசு விழுந்த அந்த லாட்டரி சீட்டைக் காமிங்க" என்றார் மேனேஜர்.
அய்யாசாமி பரவசத்துடன் பாக்கெட்டில் தேடலானான். எங்கு தேடியும், பஸ் டிக்கெட்டைத் தவிர வேறெதுவும் இல்லை. பஸ் கண்டக்டர், ‘சார் டிக்கெட், டிக்கெட்’ என்று பலமாகக் கூவியது கீழே விழுந்த தன் லாட்டரி டிக்கெட்டைப் பற்றித்தான் என்று தாமதமாய் உறைத்தது அய்யாசாமிக்கு.
அடப்பாவமே! கைக்கெட்டியது வாய்க்குக் கிடைக்கவில்லையே!