ரோபோ

ரோபோக்களை தமிழர்களுக்கு அறிமுகப்படுத்தியது மறைந்த எழுத்தாளர் சுஜாதா என்று சொன்னால் அது மிகையாகாது. தன்னுடைய ‘ஜீனோ’ மூலம் தமிழ்நாட்டின் ஒவ்வொரு வீட்டிலும் ரோபோ என்கிற வார்த்தையை பிரபலமாக்கினார்.

“ரோபோ” என்கிற வார்த்தை பிறந்தது 1920ல். பெயர் சூட்டியவர் பிரபல செக் கலைஞர் ஜோசெஃப் சாபெக். அவருடைய தமையன் கேரல் சாபெக் நாடகத்தில் முதன் முறையாக இந்த வார்த்தையை உபயோகித்தார்.

கவனிக்கத்தக்க விஷயம் என்னவென்றால், காலம் காலமாக மனிதர்கள் ரோபோக்களை உருவாக்கிக்கொண்டுதான் இருந்திருக்கிறார்கள். உதாரணத்திற்கு, அல் சசாரி என்றவர் நிறைய “ஆட்டோமேட்டான்”களை வடிவமைத்திருக்கிறார். தானாகவே இயங்கக்கூடிய எந்தக் கருவியையும் ஆட்டொமேட்டான் என்ன்று கூறலாம்.

சரி.. ரோபோட்டுகளுக்கும் இவைகளுக்கும் என்ன வித்தியாசம்?

ஆட்டொமேட்டான்களுக்கு பேட்டரி தேவையில்லை, அவைகள் சின்னச் சின்ன மெக்கானிகல் கருவிகளைக் கொண்டு உருவாக்கப்பட்டவை. அலிபாபாவின் குகையை (அடியில் அடிமைகள் இல்லையென்று வைத்துக்கொள்வோம்!) யாரேனும் தொட்டவுடன் அது திறந்துகொண்டால் எப்படியிருக்கும்? அதுதான் ஆட்டொமேட்டான். மின்சார்ந்த ஆட்டொமேட்டான்களை இன்று ரோபோ என்று சொல்ல ஆரம்பித்துவிட்டோம்.

ரோபோ என்றால் என்னவென்ன்று கேட்டதற்கு ஜோசஃப் எங்கெல்பர்கர் சொல்கிறார், “ரோபோ என்றால் என்னவென்ற கேள்விக்கு எனக்கு பதில் தெரியாது. ஆனால், ஒரு ரோபோவை நான் பார்த்தால், இது ஒரு ரோபோ என்று அடையாளம் கண்டுகொள்ளத் தெரியும்!”

அவர் சொல்வது சரியே. விதவிதமான வேலைகளைச் செய்வதற்காக ரோபோக்களைப் பிரயோகிப்பதால், அவையனைத்தையும் ஒரு சொல்லில் விளக்குவது சிரமமாகிறது.

மனிதனை ஒத்த உருவத்துடன்ன் இருந்தால்தான் அதற்குப் பெயர் ரோபோ என்பது தவறு. தொழிற்சாலைகளில் நிறைய ரோபோக்களைக் காண முடியும். கார் தயாரிக்கும் இடங்களில் பெரிய பெரிய கைகள் (கைகள் மட்டுமே!) உடைய ரோபோக்களைப் பார்க்கலாம் (“மைனாரிடி ரிபோர்ட்” திரைப்படம் பார்க்க!).

ஐரோபோ என்றொரு கம்பெனி வீடுகளை சுத்தம் செய்வதற்கு “ரூம்பா” என்றொரு ரோபோவைத் தயாரித்து விற்று வருகிறது. அதன் விலை, கிட்டத்தட்ட பதினாறாயிரம் ரூபாய். யுத்தங்களில் வேவு பார்ப்பதற்கும், சுடுவதற்கும்கூட ரோபோக்களை உபயோகிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.

சினிமாவிலும் கதைகளிலும் ரோபோக்களுக்கென்று ஒரு தனி இடம் கூட வந்துவிட்டது. ஐஸாக் அசிமோவ் என்றொரு பிரபல எழுத்தாளர் (சுஜாதாவின் முன்னோடி என்று கூட சொல்லிக் கொள்ளலாம்) ரோபோக்களுக்கென்று விதிமுறைகள்கூட வகுத்து வைத்துவிட்டார்.

குழந்தைகளுக்கான “ரோபோஸ்” போன்ற கார்ட்டூன் படங்கள் ஒரு பக்கம் வெளிவர, “ஐ,ரோபோ” போன்ற அடிதடி ஆக்ஷன் படங்களும் வெளிவந்தவண்ணம் உள்ளன.

நூறு ரோபோக்களில் நாற்பது ஜப்பானில் தான் தயாராகின்றன. மனிதர்களை உரித்து வைத்தாற்போல ரோபோக்களைத் தயாரிக்கிறார்கள். மிட்சுபிஷி என்றொரு பிரபல கம்பெனி, “இனி மனிதர்களும் ரோபோக்களும் ஒருவரோடு ஒருவர் ஒன்று வாழும் காலம் பக்கம்தான்!” என்று சொல்கிறது.

About The Author