ரேனிகுண்டா என்ற இத்திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவின் இசை ரசிகர்களுக்கு அறிமுகமாகிறார் கணேஷ் ராகவேந்திரா. ஜானி, சனுஷா, நிஷாந்த், சந்தீப் போன்ற முதுமுகங்கள் நடிக்க, மஹேந்திர குமார் ஜெயினின் தயாரிப்பில், பன்னீர் செல்வம் இத்திரைப்படத்தை இயக்குகின்றார்.
ஐந்து சிறுவர்கள் மதுரை சிறையிலிருந்து தப்பித்து மும்பை செல்கிறார்களாம். வழியில் ரேனிகுண்டாவில் நடக்கும் சம்பவங்களின் தொகுப்பே இத்திரைப்படத்தின் கதையாம். ஒரு நிஜ சம்பவத்தின் நிழலென்று சொல்கிறார்கள். அதெல்லாம் இருக்கட்டும்! புது இசையமைப்பாளர் என்றால் தன்னுடைய முழுத் திறமையையும் வெளிப்படுத்தியிருக்க வேண்டுமே!. பாடல்களைக் கேட்போம்.
மழை பெய்யும்
யுகபாரதியின் அழகான வரிகளில் ஹரீஷ் ராகவேந்திரா பாடியிருக்கும் மிக மென்மையான காதல் பாடல். காதலில் விழுந்ததும் ஏற்படும் உணர்வுகளால் நாயகன் பாடுவதை ஏற்கெனவே லட்சத்திற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் கேட்டாகிவிட்டது. இருந்தும், மெலடியின் மூலம் இசையமைப்பாளர் கவர்கின்றார். அழகான பின்னணி இசை, கிடார், பீட்ஸ் – பாடலுக்கு பாஸ் மார்க் தந்து விடலாம். என்ன ஒரே குறை என்றால், வேரியேஷன்ஸ் அதிகம் இல்லாததால் பாடல் முடிவதற்குள் தூங்கிவிட வாய்ப்பு உள்ளது!
தல்லாகுளம்
வழக்கமாக இசைத்தட்டின் முதல் பாடல்தான் இப்படி அதிரடியாக இருக்கும். இதில் ஏனோ முதல் பாடல் மென்மையாகவும், இரண்டாவது பாடல் அதைச் சரிகட்டும் வகையில் இரண்டு மடங்கு அதிரடியாகவும் அமைந்துவிட்டன. மதுரையில் படமாக்கியிருப்பார்கள் போல!. பாடலைப் பாடியிருப்பது சிலம்பரசன் – நல்ல தேர்வு. அவர் உச்சரிப்பில் மதுரை வாசம் மருந்திற்கும் இல்லை. அதனை ஈடுகட்டும் வகையில் நா.முத்துகுமார் மதுரைக்கே உரிய சில ’கெட்ட வார்த்தைகளை’ பயன்படுத்தியிருக்கிறார். இசைத்தட்டுகளுக்கும் சென்ஸார் வைக்கும் நேரம் வந்துவிட்டதா?!
கண்டேன் கண்மணியே
நா.முத்துகுமாரைக் குறை சொன்னது பொறுக்கவில்லை போலும்!. தன்னுடைய வழக்கமான பாணியில் ஒரு அற்புதமான பாடலைத் தருகின்றார். இசையமைப்பாளரிடமிருந்து இன்னும் ஒரு டாப்-க்ளாஸ் மெலடி. வாழ்க்கையில் ஏழைகளுக்கு ஏற்படும் வலியை தன்னுடைய அற்புதமான குரலின் மூலம் எடுத்துக் காட்டுகிறார் ஷ்ரேயா கோஷல். பின்னணியில் வெறும் கார்ட்ஸும் மென்மையான பீட்ஸும் சேர்த்தது, இசையமைப்பாளருக்கு தன்னுடைய மெட்டின் மீதிருக்கும் நம்பிக்கையைக் காட்டுகிறது.
விழிகளிலே
சென்ற பாடல் ஒரு எதிர்மறை உணர்ச்சியைக் கொண்டதென்றால், இப்பாடலில் அதற்கு நேர்மாறாக உற்சாகமூட்டும் பாடல். எழுதியவர் கவிஞர் யுகபாரதி. பாடலின் ஆரம்பத்தில் புல்லாங்குழலும் ஸ்ட்ரிங்ஸும் கேட்டாலும், அதன் பிறகு தன்னுடைய கார்ட்ஸ்-பீட்ஸ் பாணிக்கு திரும்புகிறார் கணேஷ். ஒரு முன்னேற்றம் – பாடலின் பின்னணியில் வயலினும் கேட்கிறது. என்னதான் மெட்டு அற்புதமாக இருந்தாலும், இளையராஜா-ரஹ்மான் போன்றவர்களின் இசையைக் கேட்ட பிறகு, நமக்கும் கொஞ்சம் ’ஃபில்லர் மெடீரியல்’ தேவைப்படுகிறது.
கந்தர்வனின் கோட்டை
நம்மூர் சினிமாவின் வெட்கக் கேடு என்னவென்றால், ஒவ்வொரு படத்திலும் ஒரு கானா பாடலோ, ஒரு க்ளப் டான்ஸோ, இல்லை ஒரு குத்துப்பாடலோ இருந்தே ஆகவேண்டும். "அப்போதான் C-க்ளாஸ் திருப்தி அடையும்" என்று கோடம்பாக்கம் சொல்கிறது. இதுபோன்ற பாடல்கள் திரையில் வரும் சமயத்தில் அவர்களே வெளியே எழுந்து சென்றுவிடுகிறார்கள்! இசைத்தட்டிலும் இப்பாடலை (என்னைப்போல விமர்சனம் எழுதுபவர்கள் தவிர்த்து) அனைவரும் ஓட்டி (forward) விடுகிறார்கள். நீங்கள் சொல்லுங்கள் – இது நமக்குத் தேவையா ?
வாழ்க்கை யாரிடம்
ஒரு மெட்டுக்கு இரண்டு விதமான வரிகளை எழுதியிருக்கும் நா.முத்துகுமாரைப் பாராட்டாமல் இருக்க முடியவில்லை. முன்பு ஷ்ரேயா கோஷலின் குரலில் கேட்ட அதே பாடலின் ஆண் வடிவம். விஜய் ஏசுதாஸ் மனதை நெகிழ வைக்கும் குரலில் அற்புதமாக பாடியிருக்கிறார். மனிதர் பாடியிருக்கும் விதமும், காட்டியிருக்கும் பாவமும் அப்பப்பா!!
கணேஷ் ராகவேந்திரா – தமிழ் சினிமா உலகிற்கு நல்ல வரவு. இன்னும் கொஞ்சம் பின்னணி இசையிலும், சரணங்களுக்கு நடுவில் வரும் ’இண்டெர்லூட்ஸிலும்’ கவனம் செலுத்தினால், பாடல்கள் மேலும் நன்றாக வரும். இவருக்கு இன்னும் பல வாய்ப்புகள் அமைந்தால், தமிழ் சினிமா உலகு மகிழ்ச்சி கொள்ள வேண்டும்.
எல்லாருக்கும் ஒண்ணு சொல்லிக்கிறேன்ப்பா.. இந்தப் படத்தோட பெரும்பாலான ஷூட்டிங் விருதுநகர்லதான் நடந்தது. ஆனா ஆந்திராவுல நடக்கற மாதிரி காட்டியிருப்பாங்க. இதில ஒரு சில காட்சிகளும், மழை பெய்யும்” பாடலும் எங்கள் வீட்டு வாசலுக்கருகில் படமாக்கப்பட்டன என்பதை சிறுகுழந்தையின் குதூகலத்துடன் சொல்லிக் கொள்கிறேன் :-)”