இயக்குனர் சிகரத்தையும், இயக்குனர் இமயத்தையும் வெள்ளித்திரையில் ஒன்றாகப் பார்க்க முடியும் என்று நம்மில் யாராவது கனவிலாவது நினைத்திருப்போமா! ஆம், இப்படத்தின் மூலம் இவ்விருவரையும் இணைந்து காணப் போகிறோம். கே.பாலசந்தர், பாரதிராஜா இருவருமே அவ்வப்பொழுது சின்னத்திரையிலும். வெள்ளித்திரையிலும் வந்து சென்றிருக்கிறார்கள் – பொய், கல்கி, பிரேமி, கல்லுக்குள் ஈரம், தாவணிக் கனவுகள் என்று ஒரு சிறிய பட்டியல் இருக்கிறது. சிறு வேடங்கள் எல்லாம் இருக்கட்டும்! இம்முறை பெரும் வித்தியாசம் – இருவருமே கதாநாயகர்களாக அவதரிக்கிறார்களாம்! இத்தனைப் பெரிய விஷயத்தை சாதிக்கக் கூடியவர்கள் தமிழ் சினிமாவில் சொற்பம் என்று நினைக்கவே தோன்றுகிறது. ஆனால், இயக்குனர் ஷங்கர் நினைத்தால் சாதிக்க முடியாதது உண்டா! தனது எஸ்-பிக்சர்ஸின் மூலம் அவர் தயாரிக்கும் படம்தான் "ரெட்டச்சுழி" – எத்தனை அழகான தமிழ்ப்பெயர்!!
இப்படத்தை இயக்குபவர் தாமிரா. பாடல்களுக்கு இசை கார்த்திக் ராஜா. இன்னும் ஒரு முக்கிய செய்தி இருக்கிறது. சென்னையில் இப்படத்தின் இசைத்தட்டு வெளியீட்டு விழா நடந்தது. முக்கிய விருந்தாளி யார் தெரியுமா? ஷங்கர் இயக்கும் எந்திரன் படத்தில் நம் சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாக நடிப்பவர். இன்னுமா தெரியவில்லை – அட, நம்ம ”ஃபிஃப்டி கே.ஜி. தாஜ்மஹால்"தாங்க! என்ன, ஜீன்ஸ் படத்திலிருந்ததை விட இன்னும் கொஞ்சம் எடை கூடியிருப்பார்! பாலசந்தரையும், பாரதிராஜாவையும் அரங்கில் கண்டு நெகிழ்ந்து போய்விட்டாராம் ஐஸ்!
பம் பம் பம்பர காத்து
ஹார்மனி சிறந்து விளங்கும் ஸ்ட்ரிங்ஸ், கார்ட்ஸ், வயலின், புல்லாங்குழல் ஒன்றிடக் கலந்து செவிக்கு இதம் தருகின்றன. இயற்கையின் அழகை – காற்று, மழை, பூக்கள் – நாயகி வர்ணிக்கிறார் போல. பழனிபாரதியின் அழகிய வரிகளை ரீடாவும் வயலின் பத்மாவும் பாடியிருக்கின்றார்கள். பெர்குஷனை மிகவும் நேர்த்தியாகப் பயன்படுத்தியிருக்கிறார் கார்த்திக். வழக்கமான பாடல்களில் நாம் கேட்டிராத கருவிகள், பீட்ஸ். ஏனோ தெரியவில்லை, பாடல் வரிகளை உற்றுக் கவனிக்காவிட்டால், நமக்கு ஆங்காங்கே புரியவில்லை. ஒரு சில இடங்களில், பாடகர் ஏதோ கிணற்றுக்குள்ளிருந்து பாடுவது போலிருக்கின்றது! பாடலின் ஹைலைட், தொடர்ந்து வரும் ஹார்மனிதான். ராஜா குடும்பத்திலிருந்து மட்டுமே கேட்கக் கூடிய ஹார்மனி!
பட்டாளம் பாருடா
சிறுவர்களை முன்னிறுத்தி பாட்டமைப்பது நூறு படங்களுக்கு ஒரு முறைதான். இந்தப் பாடல் அந்த அரிய வகை. மொத்தப் பாடலையும் சிறுவர் கூட்டமே பாடியிருக்கின்றது. அர்மான் மலிக், ஃபோஸியா, சர்வான் மற்றும் குழுவினர் ராமசாமியின் வரிகளை அத்தனை அழகாகப் பாடியிருக்கிறார்கள். பாடல் முழுவதும் கிராமிய மணம். கேட்கும் பொழுதே உதட்டில் புன்சிரிப்பு வந்துவிடும். அதிலும் கார்த்திக் ராஜா புகுந்து விளையாடியுள்ளார். ஆங்காங்கே மேற்கத்திய தொல்லிசை முறையில் வயலின்கள், வித்தியாசமான பெர்குஷன் முறைகள், ட்ரம்பெட்டுகள் என்று சக்கை போடு போடுகின்றார். அங்கிருந்து தாவி நம் கிராமிய இசை முறைக்கு வருகிறார். சர்வ சகஜமாக புகுந்து விளையாடுகிறார் கார்த்திக் ராஜா. ஒரு சாதாரண பாடலை எங்கோ உயரத்தில் தூக்கி நிறுத்துகின்றார் மனிதர். சபாஷ்!
நான் என்று சொல்
தமிழ் சினிமா பாடல்களில் இது வரை நாம் கேட்டிராத பாடகர் கூட்டணி – ஹரிஹரன், ஹரிசரண், மற்றும் ஸ்ரீராம் பார்த்தசாரதி. கவிஞர் சந்திராவின் சோகம் தழுவிய வரிகளை மூவரும் மாற்றி மாற்றிக் கலக்குகிறார்கள். எதற்கிந்த சோகம்? படம் பார்க்க வேண்டும். காதல் சோகத்தை மட்டுமே கேட்டுப் பழகிவிட்ட காதுகளுக்குக் குளிர்ச்சி தரும் பாடல். கார்த்திக் ராஜாவின் இசையைப் பற்றி கட்டாயம் சொல்லியாக வேண்டும்! ஒரு சிலரால் மட்டுமே, தன் மெட்டை மட்டும் நம்பி, பாடலுக்குப் பின்னே வெறும் கார்ட்ஸ் மட்டும் தந்து, வரிகளுக்கு இடையிடையில் மட்டும் வாத்தியங்களைப் பிரயோகிக்க முடியும்! இந்த ரகம் இப்பொழுதெல்லாம் குறைந்து கொண்டே வருகிறது. "ஒவ்வொரு வார்த்தைக்கும் பின்னே பெரிதாக, காதை அடைக்கும் எலெக்ட்ரிக் கிடார் ஒன்று கேட்க வேண்டும், இல்லையென்றால் அது பாட்டில்லை" என்ற நிலை வந்தாகிவிட்டது. இந்நிலையிலும், தம் வழி மறவாது, அற்புதமான மெட்டுகளைத் தரக் கூடியவர் கார்த்திக் ராஜா என்று இப்பாடலின் மூலம் நிரூபிக்கின்றார். அவர் மெட்டும், அதில் வரும் கார்ட்ஸ் மாற்றங்களும், அந்த பீட்ஸும் – அப்பப்பா!!
பூச்சாண்டி கண்ணழகி
கண் வைத்து விட்டேன் போல – குத்துப்பாடல் முறைக்குத் திரும்புகிறார் கார்த்திக் ராஜா. ஏன் ஐயா?! ஆனால், இப்பாடலிலும் பின்னணியில் விதவிதமான இசைக்கருவிகளை கையாண்டிருக்கிறார். ஓர் ஆணும் பெண்ணும் ஒருவரை ஒருவர் கிண்டல் செய்து கொள்கிறார்கள் – காதல் பாடல்தான் போல! அண்ணாமலையின் வரிகளை பெல்லி ராஜும் ரீடாவும் பாடியிருக்கின்றார்கள். குறிப்பாக சொல்வதற்கு வேறொன்றும் இப்பாட்டில் இல்லை.
பற பற கிளி
அப்பாடா! மீண்டும் மெலடிக்குத் திரும்புகிறார் கார்த்திக். பாடலின் ஆரம்பத்தில் வரும் கிடாரும் கார்ட்ஸும் பாடல் முடியும்வரை பேஸில் உடன் வருகின்றன. பழனிபாரதியிடமிருந்து இன்னுமொரு டூயட். தீபா மரியம் பாட ஆரம்பிக்க, அவருடன் ராஹுல் நம்பியார் பின்னர் சேர்ந்து கொள்கிறார். மனதை மகிழ்விக்கும் மெட்டு. ஆங்காங்கே மேற்கத்திய வயலின் முறையை உபயோகித்திருக்கின்றார். குறிப்பாக, இரண்டாம் சரணத்திற்கு நடுவில் வரும் வயலின் நெருடல்கள் அற்புதம். மீண்டும் மெட்டை மட்டும் நம்பும் நல்லதோர் முயற்சி. கூடுதலாக ஹார்மனியையும் தந்தது இசையமைப்பாளரின் திறமையைக் காட்டுகின்றது.
பூச்சாண்டி கண்ணழகி
அதே பாடல், அதே வரிகள் – ஒரேயொரு சிறிய வித்தியாசத்துடன் – இம்முறை பாடியிருப்பவர்கள் ஹரிஹரனும், ஷ்ரேயா கோஷலும். சிறிய வித்தியாசம்தான் என்று யோசித்தால், என்ன ஆச்சரியம் – இம்முறை பாடல் கொஞ்சம் பரவாயில்லை என்று தோன்றுகிறது. இருக்காதா என்ன! திறமையும், அனுபவமும் மிகுந்த பாடகர்கள் எப்பாடலுக்கும் இன்னும் கொஞ்சம் அதிகமாகவே உயிர் ஊட்டுவார்கள், அல்லவா? இன்னும் ஓரிரண்டு முறை கேட்டால், எழுந்து ஆடவும் வைக்கும் இப்பாடல்.
நான் என்று சொல்
முன்பு கேட்ட பாடல் இசைத்தட்டில் மீண்டும் இடம்பெறுகிறது. இம்முறை ஹரிஹரனே முழுப் பாடலையும் பாடியிருக்கின்றார். முன்பு வந்த பாடல் ஒரு வித அழகென்றால், இது வேறு விதமான அழகு. ஹரிஹரனின் விசிறிகள் இப்பாடலை இன்னும் விரும்பிக் கேட்பார்கள்.
ஆக மொத்தம், ஐந்து பாடல்கள். அவற்றில் இரண்டு ரிபீட். கார்த்திக் ராஜாவின் மிகச் சிறந்த இசைத்தட்டு என்று சொல்லமுடியாது. ஒரு சில இடங்களில் தன் திறமைகளைக் காட்டுகின்றார், ஒரு சில இடங்கள் அவருள் இருக்கும் ஜீனியஸைக் காட்டுகின்றன. ஆங்காங்கே சில இடங்கள் அந்த ஜீனியஸ் தூங்கி விட்டதையும் காட்டுகின்றன. இருந்தும் மெட்டையும், மெலடியையும் மட்டும் நம்பி இசையமைப்பவர்கள் இன்னும் தமிழ் சினிமா உலகில் இருக்கிறார்கள் என்பதற்கு கார்த்திக் ராஜா சான்று.
“