வீட்டுக்குள் நுழையும்போதே சரசா பார்த்துவிட்டாள். வாசற்படியிலேயே தடுத்துக் காதில் கிசுகிசுத்தாள்.
"அம்மாவுக்கு ரொம்ப முடியலீங்க."
சரவணனுக்குப் பகீரென்றது. போன வாரம்தான் ஆஸ்பத்திரியிலிருந்து கூட்டி வந்தான். இரண்டு வாரம் வைத்தியம் முடிந்து மறுபடியுமா..?
"என்ன செய்யுதாம்..?"
"பழைய கம்ப்ளெயிண்ட்தான். மூச்சு திணறுது. கையைக் காலை அசைக்க முடியலே."
உள்ளே நுழைந்தான். குழந்தைகள் பாபுவும் மீனாவும் வேகமாக ஓடி வந்தனர். தயங்கி நின்றனர்.
"எப்ப பார்… நம்ம வீட்டுல பழைய சோறுதாம்ப்பா. சுடுசாதம், காயி எதுவுமே இல்லே" என்றான் பாபு. உள்ளே படுத்திருந்த அம்மாவின் காதில் அது விழுந்தது.
பாவம்.. அம்மாவுக்கான வைத்தியச் செலவு அதன் எல்லையைத் தாண்டிவிட்டது. அதனால் தினசரி வீட்டு நிலைமைகூடப் பாதிக்கப்பட்டு, குழந்தைகள் மனக்குமுறலாய் எதிரொலித்து விட்டது.
அம்மா படுத்திருந்த அறைக்குள் போனான்.
"என்னம்மா.. மறுபடியும் திரும்பிடுச்சா?"
"இல்லைடா.. சும்மா" பேச முடியாமல் திணறினாள்.
"அப்படியே படுத்துக்குங்க. நாளைக்கு டாக்டர்கிட்டே கூட்டுக்கிட்டுப் போறேன்."
"டேய்… கேட்கிறேன்னு தப்பா நினைக்க மாட்டியே.." என்று பீடிகையுடன் ஆரம்பித்தாள் அம்மா.
"என்னம்மா…?"
"வாய்க்கு ருசியா நல்லா சாப்பிடணும்போல இருக்குடா…" கண்களில் ஏக்கம் தெரிந்தது. சரவணன் மனதைப் பிசைந்தது.
"சரிம்மா. உடனே ஏற்பாடு பண்றேன். இன்னிக்கு ராத்திரியே சாப்பிடலாம்."
"என்னங்க…" என்று சரசா இழுத்தாள்.
"பேசாமலிரு.. நான் பார்த்துக்கிறேன்."
நண்பனிடம் கடன் வாங்கி, தேவையான எல்லா சமையல் பொருட்களுடன் அரை மணியில் வந்துவிட்டான். சுடச் சுட சமையலும் தயாராகிவிட்டது.
"வாங்க, எல்லாரும் சாப்பிடலாம்." என்றாள் அம்மா.
"நீ சாப்பிடும்மா முதல்ல.."
"பேசாம இருடா.. பச்சைப்புள்ளைங்களை விட்டுட்டு நான் மட்டுமா.." பாபுவும் மீனாவும் ‘ஹை’ என்று கூச்சலிட்டபடி அமர்ந்தனர்.
"நிறைய்ய போடு அதுங்களுக்கு."
அம்மா சாப்பிடவில்லை. குழந்தைகள் சாப்பிடுவதை திருப்தியோடு பார்த்தாள்.
"என்னம்மா இது.. உனக்காகத்தானே இவ்வளவும் வாங்கிக்கிட்டு வந்தேன்" என்றான் சரவணன் ஆற்றாமையுடன்.
அம்மா சொன்னாள்:
"போடா பைத்தியம்… எனக்குன்னு கேட்டாதான் நீ வாங்கிக்கிட்டு வருவேன்னு எனக்குத் தெரியும். அதனாலதான் அப்படிக் கேட்டேன். நல்ல சாப்பாடு சாப்பிட முடியலைங்கிற ஏக்கம் புள்ளைங்களுக்கு இருக்கிறது எனக்குத் தெரியும். அதுங்களுக்காகத்தான் எனக்கு வாய்க்கு ருசியா சாப்பாடு வேணும்னு கேட்டேன்."
குழந்தைகள் எதுவும் புரியாமல் பார்த்தன.
மொதெர் இச் கொட் ச்டொர்ய் நெல்ல்