ரிஷபன் கவிதைகள் -4

எங்கள் தெருவில் ஒரு
தபால் பெட்டி இருந்தது.
அதற்குள் கைவிட்டு
எடுக்க முடியாமல்
அவதிப்பட்டவர்களில்
நானும் ஒருவன்.
‘டொம்’மென்று சத்தம்
கேட்டாலொழிய
இடம் விட்டு
நகர மாட்டோம்.
போட்டபின் அரைமனதாய்த்
திரும்பித் திரும்பி
பார்த்துக் கொண்டே
நடப்பதில் ஒரு சுகம்.
போய்ச் சேர்ந்த தபால்கள்
எதிர்வினையாற்றும்போது
அதில் அத்தனை
மகத்துவம் இல்லை.
பதில் தெரியாமல் போகிற
தபால்கள்தான்
ஆயுள் முழுவதும்
மனதுக்குள் நெருடிக்
கொண்டிருக்கும்.
ஒரு முறை கூட
தபால் பெட்டி திறக்கப்படுவதைக்
கண்டதில்லை.
ஆனாலும் உள்ளூர
ஒரு நம்பிக்கை.
தபாலை உள்ளே போட்டதும்
அதனுடன் நம் மனசும்தான்
பயணிக்கிறது.. மானசீகமாய்.
வாங்குபவர் அறிவாரா
கடிதங்கள் சுமந்து வருவது
வெறும் வார்த்தைகள் மட்டுமல்ல என்று!

About The Author

1 Comment

Comments are closed.