இந்த ஆண்டில் வரவிருக்கும் படங்களுள், எந்தப் படத்திற்கு ரசிகர்களின் எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக உள்ளது என்று கேட்டால், அக்கேள்விக்கு பதில் "ராவணன்"தான். இப்படத்தை தமிழிலும் ஹிந்தியிலும் மணிரத்னம் எடுத்திருக்கிறார்.
ஹீரோ, வில்லன் என்றெல்லாம் கதாபாத்திரங்களைப் பிரிக்காமல் விவரங்களைச் சொல்லவேண்டும் என்றால், "ராவணன்" பாத்திரத்தில் நம் சீயான் விக்ரம், கதாநாயகியாக ஐஸ்வர்யா ராய், நாயகியின் கணவனாக பிருத்திவிராஜ்! "இதில் யார் ஹீரோ, யார் வில்லன்" என்று அச்சுபிச்சுத்தனமான கேள்விகளை எல்லாம் கேட்கக்கூடாது!
ஹிந்தியில் விக்ரம் முதல் முறையாக அடியெடுத்து வைக்கிறார் – நாயகியின் கணவனின் பாத்திரத்தில், அட! ஹிந்தி "ராவணன்" பாத்திரத்தில் அபிஷேக்பச்சன்!!
இரண்டு படங்களின் காட்சிகளையும் மாற்றி மாற்றி எடுத்து, மணிரத்னம் எல்லோரையும் படாதபாடு படுத்தியிருக்கிறார். குறிப்பாக விக்ரமை – ஒரு வேடத்தில் ஹிந்தியில் நடித்துவிட்டு, உடனே நேர்மாறான வேடத்தில் தமிழில் நடித்திருக்கிறார். விக்ரமுக்கு எத்தனை திறமையும், பொறுமையும் இருந்திருந்தால், இரு வேலைகளையும் கச்சிதமாகச் செய்திருப்பார்!!
சரி, இன்னும் சில குறிப்புகளைச் சொல்லுவோம். ‘ஜீன்ஸ்’ படத்திற்குப் பிறகு ஐஸ், தமிழில் பேசப்போவது இந்தப் படத்தில்தான்! அவர் திரையுலகிற்கு அறிமுகமானதே "இருவர்" என்ற தமிழ் படத்தின் மூலம்தான் என்று நினைவிருக்கட்டும்! அந்தப் படத்திற்கும் இயக்குனர் மணிரத்னம்தான் என்றும் நினைவிருக்கட்டும்!
"அக்னி நட்சத்திர"த்திற்குப் பிறகு, இப்படத்தில் கார்த்திக்கும், பிரபுவும் மணிரத்னத்துடன் இணைகிறார்கள். ஜூன் மாதத்தில் படம் வெளிவரும் என்று நம்பப்படுகிறது. இந்திய திரையுலகமே இப்படத்தின் வரவைக் காத்துக்கொண்டிருக்கிறது என்று சொன்னால் மிகையாகாது! நல்ல வேளையாக, "படத்தின் பெயரை மாற்று, தமிழ் இலக்கணப்படி இராவணன்னு வரணும்" என்று இதுவரையில் யாரும் பிரச்சினை செய்யவில்லை. "கலைக்கு இலக்கணம் கிடையாது" என்று சொன்னால் யார் கேட்கிறார்கள், பம்பாயில் சினிமாக்காரர்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் இடையில் பெரும் போராட்டமே நடந்துகொண்டிருக்கின்றது.
சரி, அந்தக் கதையெல்லாம் நமக்கெதுக்கு! விஷயத்திற்கு வருவோம். மணிரத்னம் என்றால் படத்தின் பாடல்களுக்கு தனி முக்கியத்துவம் இருக்குமே! வைரமுத்துவின் வரிகளும், ஏ.ஆர்ரஹ்மானின் இசையும் இருக்குமே! இருக்காதா, என்ன?! சினிமாவில் தனக்கு "ப்ரேக்" கொடுத்த இயக்குனர் என்றால் தனியாக இசையமைப்பார் ரஹ்மான். அதுவும், இப்பொழுது ஆஸ்கர், கிராமி என்றெல்லாம் பெரிதாக வளர்ந்தும்விட்டார்.
ஏ.ஆர்.ரஹ்மான் மணிரத்னத்திற்கும் நமக்கும் கொடுத்திருக்கும் இசை விருந்தைக் கொஞ்சம் பருகுவோம்…
வீரா
காட்டுப் பகுதியில் தனியே வாழும் ஓர் இனத்தைச் சேர்ந்தவர் – இதுதான் விக்ரமின் கதாபாத்திரம் என்று செய்தி வெளிவந்தாகிவிட்டது. அதை ஊர்ஜிதப்படுத்தும் பகுதியில் இப்பாடல் அமைந்தும் விட்டது! அவர் பெயரும் "வீரா" என்று தெரிந்தாகிவிட்டது! இட்ட பெயர் "வீரா", பட்ட பெயர் "சூரா"வாம்! "ராமனும் நான்-தேன், ராவணனும் நான்-தேன்" என்று அவரே தன்னைப் பற்றி சொல்லிக்கொள்கிறார். விஜய் பிரகாஷுடன் சேர்ந்து முஸ்தஃபா குடோன், கீர்த்தி சகாதியா, ரஹ்மான் கொண்ட குழு இப்பாடலைப் பாடியிருக்கிறது. மிகவும் சிறியதொரு பாடல். ஜாலியாக தலையை ஆட்டிக்கொண்டே, தாளம் போட்டுக் கொண்டே கேட்கலாம்!
உசுரே போகுதே
அதிகம் சப்தமில்லாமல், மெல்லிய இசையோடு, அம்சமாக ஆரம்பிக்கின்றன வாத்தியங்கள். கிட்டத்தட்ட ஒரு முழு நிமிடத்திற்கு எந்த ஆரவாரமும் இல்லை! அதன் பிறகு, கார்த்திக் பாட ஆரம்பிக்கின்றார் – மனதில் தேக்கி வைத்துள்ள ஆசைகளையெல்லாம் அத்தனை அழகாக தன் குரலில் கொண்டு வருகிறார். வைரமுத்துவின் வரிகள் அற்புதம். நாயகியை அடைய நினைப்பது தர்மம் இல்லை, அடையவும் முடியாது என்று தெரிந்தும் பாடுபவர் ஏங்குவது போல அமைந்திருக்கிறது இப்பாடல். குறிப்பாகச் சொல்லப்போனால், ஹிந்தியில் முதலில் எழுதினார்களா, தமிழில் முதலில் எழுதினார்களா என்று தெரியாத அளவிற்கு வார்த்தைகள் இசையோடு பொருந்துகின்றன – இரு பாஷைகளிலும்!
காதலின் ஏக்கத்தையும், "மம்முத கிறுக்கு" படுத்தும் பாடையும் அத்தனை உருக்கத்துடன் சொல்கிறது பாடல். சரணங்களுக்கு நடுவில் கொஞ்சம் வயலின், ஆங்காங்கே கார்ட்ஸ், கொஞ்சம் பெர்குஷன், கொஞ்சம் டிஸ்டார்ஷன் – மற்றபடி பாட்டை முழுவதுமாக கார்த்திக் ஆளுகிறார். முஹமது இர்ஃபானும் ஆங்காங்கே கோரஸ் பாடியிருக்கிறார். இப்படி ஒரு பாடலை ரஹ்மானிடமிருந்து கேட்டு எத்தனை நாளாகிவிட்டது! கிளாஸ்! ரஹ்மான் வாழ்க!
கோடு போட்டா
டெக்னோவையும், மேற்கத்திய இசையையும் ஒரு தட்டில் வைத்து, அதனுடன் நம் கிராமிய மெட்டுகளை சேர்த்தால் என்ன வரும்? இப்பாடல் வரலாம்! கொஞ்சம் சோஷியலிஸம் பேசுகிறார் வைரமுத்து. மக்களின் வீரத்தைப் பற்றியும், "மற்றவர்கள் இங்கே தலையிடக் கூடாது" என்ற அவர்களின் கருத்தைப் பற்றியும் சொல்கிறது இப்பாடல். கொஞ்சம் ஜனரஞ்சகமாக இசையமைத்திருக்கிறார் ரஹ்மான். பென்னி தயால் குரல் கொடுத்திருக்கிறார். பாடல் என்னமோ வாத்தியங்களால் மட்டுமே தனித்து நிற்கிறது. கொஞ்சம் அடக்கி வாசித்திருப்பதால், பாடலை முழுவதுமாக ரசிக்க முடிகின்றது!
காட்டுச் சிறுக்கி
ஒரு பெண்ணின் ஹம்மிங்கோடு ஆரம்பித்து, கீஸ் சேர்ந்துகொள்ள, அனுராதா ஸ்ரீராமின் உச்சஸ்தாயியில் சக்கை போடு போட்டவாறே வருகிறாள் காட்டுச் சிறுக்கி! உடனே, ஷங்கர் மஹாதேவனும் சேர்ந்துகொள்ள, கால்கள் தாளம் போட ஆரம்பிக்கின்றன. ரஹ்மானுக்கு ஒரு "ஓ" போட வேண்டியதுதான்! இந்தப் பாட்டில் எல்லோரையும் வெல்கிறார் ரஹ்மான் – ஜனரஞ்சகமான மெட்டு, தாளம் போடவைக்கும் மென்மை, வாத்தியங்களின் திறமையான பிரயோகிப்பு. இதனுடன் ஷங்கர் மஹாதேவனின் குரல் சொல்லும் பாவங்களையும், அவர் செய்யும் குறும்புகளையும் சேர்த்துக்கொள்ளுங்கள்! அனுராதா ஸ்ரீராம் கொஞ்சமே பாடினாலும், அத்தனை அற்புதமாக பாடியிருக்கிறார். சிலருக்கு அவர் குரல் கீச்-சென்று தெரியாலாம், ஆனால் பாடலோடு அற்புதமாக பொருந்துகிறது.
"ராவணன்" என்று பெயர் வைத்துவிட்டு, "விரக தாபத்தை"ப் பற்றிப் பாடவில்லை என்றால் அப்புறம் என்ன. "உசுரே போகுதே" பாடலைத் தொடர்ந்து இதிலும் அதே கருத்துதான்! ஆனால் என்ன, இப்பாடலில் ஆங்காங்கே வரிகள் கொஞ்சம் விரசமாக உள்ளன. ஆனால், நம் தமிழ் சினிமாவின் பாணிபடி அதையும் கலைக் கண்ணால் பார்க்க வேண்டியதுதான்! பூந்தோட்டக் காவல்காரனின் பாடலில் சொல்லாததையா இனிமேல் சொல்ல முடியும்!!
கள்வரே
ஷ்ரேயா கோஷலின் இனிமையான குரல் இல்லாமல் ஏ.ஆர்.ரஹ்மானின் இசைத்தட்டில் ஒரு பாடல் எப்படி இருக்க முடியும்!! நாயகி பாடும் மிக மிக மென்மையான காதல் பாடல். தன் காதலனை நினைத்து உருகி உருகிப் பாடுகிறார். ரொம்பவும் மென்மையான மெட்டும். "உம்மை எண்ணி ஊமைக் கண்கள் தூங்காது" , "உடை களைவீரோ, உடல் அணிவீரோ" என்று அற்புதமாக அகம் பேசுகின்றார் வைரமுத்து.
கொஞ்சம் கீஸ், தபலா, புல்லாங்குழல் என்று மொத்த பாடலையும் முடித்துவிட்டார் ரஹ்மான். ரசிக்கக் கூடிய மெலடி!
கெடாக்கறி
ட்ரம்பெட் வாத்தியத்தின் சப்தத்தோடு, காட்டில் வாழும் மக்களை நினைவூட்டும் வகையில் ஆரம்பிக்கின்றது இப்பாடல். பென்னி தயால், பாக்யராஜ், ரேஹானா, தன்வி ஷா கொண்ட பெரும் குழு இப்பாடலைப் பாடியிருக்கிறது. பாடலின் வரிகள் ரோஜாவின் "ருக்குமணி" பாடலை நினைவூட்டுகின்றன. ஆனால் மெட்டு மிகவும் வித்தியாசமாக உள்ளது – ஏதோ காட்டுவாசிகள் பாடும் பாடலைப் போலவே!
இசையில் எந்தக் குறையையும் வைக்கவில்லை – நிறைய கிராமிய வாத்தியங்களைப் பயன்படுத்தி ஒரு புது மாதிரியான சூழலை ஏற்படுத்துகிறார் ரஹ்மான். வெள்ளித்திரையில் காட்சிகளுடன் பார்த்தால், பாடலின் அர்த்தம் இன்னும் கொஞ்சம் புரிந்து, இன்னும் கொஞ்சம் ரசிக்க முடியும் என்று எண்ணத் தோன்றுகிறது.
அற்புதமான பாடல்களைத் தந்து, படத்தைக் காணத் துடிக்கும் நம் ஆவலை இன்னும் தூண்டிவிட்டிருக்கிறார் ரஹ்மான் மனிதருக்கு நம் பாராட்டுகளையும், அதனுடன் நம் நன்றிகளையும் கண்டிப்பாகத் தெரிவிக்க வேண்டும்.
வான் புகழ் அடைந்துவிட்ட நிலையிலும், நல்ல இசையை மக்களுக்குத் தர வேண்டும் என்று இன்னும் போராடி வருகிறார். அது மட்டுமில்லாமல், அனைவருக்கும் நல்ல இசையையும் கற்றுத் தர வேண்டும் என்ற எண்ணத்தில், ஒரு இசைப் பள்ளியையும் சென்னையில் துவங்கி உள்ளார்! உலகம் புகழும் ரஹ்மான், நம்மூரைச் சேர்ந்தவர் என்று சொல்வதில் நாம் கண்டிப்பாக கர்வம் கொள்ள வேண்டும். இசை உலகை ஆளட்டும்!!
“
Best songs of the year. Great compose for Usure Pogudhe.
i am feel luckly because i got that ur address for every purpose thanks to you… R. Reegan
ரகமானின் இசை மழையில் நனைந்தே விட்டேன்.