ராம ரஹஸ்ய உபநிஷத்!

(நன்றி : ஆதிபிரான்)

கலிசந்தரணோபநிஷத்

ஸ்ரீ ராமர் ஆஞ்சனேயருக்கு நூற்றெட்டு உபநிஷதங்களை உபதேசித்ததாக முக்திகோபநிஷத்து கூறுகிறது. ஞானத் தேட்டத்தில் ஈடுபடுவோருக்கு இவை அனைத்துமே கிடைத்தற்கரிய பொக்கிஷங்கள்!

நூற்றெட்டு உபநிடதங்களில் கலிசந்தரணோபநிஷத் நாரதர் பிரம்மாவிடம் தனது சந்தேகத்தைக் கேட்டு தெளிவு பெற்றதைக் கூறுகிறது. பிரம்மாவிடம் துவாபர யுக முடிவில் நாரதர், "உலகைச் சுற்றிக் கொண்டே எப்படி கலி தோஷத்தைக் கடக்கலாம்?" என வினவினார்.

பிரம்மா "ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே" என்ற பதினாறு நாமங்களால் கலி கல்மஷம் நாசமாகும் என்று பதில் அளிக்கிறார்.

"பகவானே! இந்த ஜபத்திற்கு என்ன விதி?" நாரதர் கேட்க, பிரம்மா, "இதற்கு விதி ஒன்றுமில்லை. சுத்தமோ அசுத்தமோ எப்போதும் ஜபிக்கலாம்" என்று கூறி மேலும் பல பலன்களை விரித்துரைக்கிறார்.

ஸீதோபநிஷத்

தேவர்கள் பிரம்மாவிடம் ஸீதையைப் பற்றிக் கேட்டுத் தெளிவு பெற்றதை ஸீதோபநிஷத் கூறுகிறது.

தேவர்கள் பிரம்மாவிடம், "ஸீதா என்பது யார்? அவளுடைய ரூபம் என்ன?" என்று கேட்டார்கள்.

பிரம்மா கூறியது:- "மூலப்ரக்ருதி வடிவினள் ஆதலால் அந்த ஸீதா ப்ரக்ருது எனக் கூறப்படுகிறாள். அவ்யக்த ரூபிணியான மஹா மாயை வெளிப்படையாகத் தோன்றுகிறாள். ஸ்ரீராம ஸாந்நித்ய வசத்தால் அவள் உலகிற்கு ஆனந்தமளிப்பவள். உடல் படைத்தவர்களுக்கு எல்லாம் உற்பத்தி ஸ்திதி ஸம்ஹாரம் ஆகியவற்றைச் செய்பவள். மூலப்ரக்ருதி எனப்பட்டவளே பகவதீ ஸீதா என அறிய வேண்டும். அனைத்திற்கும் ஆதாரமான காரிய காரணமயமான மஹாலக்ஷ்மீ."

இந்த உபநிடதம் மேலும் ஸீதையின் ரஹஸ்யம் அனைத்தையும் கூறுகிறது. ஸீதையே இச்சா சக்தி, க்ரியா சக்தி, சாக்ஷாச்சக்தி. இச்சா சக்தி மீண்டும் மூன்று விதம். ஸ்ரீ-பூமி-நிளாஎன்ற வடிவினள். மங்கள வடிவினள்பிரபாவ வடிவினள். ஸோம சூர்ய அக்னி ப்ரகாச வடிவினள். இவ்வாறு மேலும் விளக்கமாக ஸீதையின் உண்மை ஸ்வரூபத்தை விளக்குகிறது. இந்த உபநிடதத்தை முழுமையாக அனைவரும் படிக்க வேண்டும்; படித்தால் ஸீதை பற்றிய அனைத்து ரகசியங்களும் விளங்கும்.

ஸ்ரீ ராமபூர்வதாபியுபநிஷத் மற்றும் ஸ்ரீ ராமோத்தரதாபின்யுபநிஷத்

அற்புதமான இந்த உபநிடதம் ராமரின் உண்மையான மகிமையையும் அனைத்து ரகசியங்களையும் தெள்ளத் தெளிவாக உரைக்கிறது.

தர்ம மார்க்கம் சரித்ரேண
ஜ்ஞான மார்க்கஞ்ச நாமத:

என்று ஆரம்பிக்கும் இந்த உபநிடதம் நடத்தையால் தர்ம மார்க்கத்தையும், நாமத்தால் ஞான மார்க்கத்தையும் காட்டிக் கொண்டு தன்னை தியானிப்பவர்களுக்கும் பூஜிப்பவர்களுக்கும் வைராக்யத்தையும் ஐசுவரியத்தையும் அளித்துக்கொண்டு பூமியில் ராமன் என்னும் தத்துவம் விளங்குகிறது என்று விளக்குகிறது.

எப்படி ஒரு ஆலின் விதையில் ப்ராக்ருதமான ஆலமரம் உறைகிறதோ அப்படித்தான் ராம எனும் பீஜத்தில் இந்த சராசரப் பிரபஞ்சம் உறைகிறது.

இப்படிக் கூறும் உபநிடதம் 47 மந்திரங்களைக் கூறுகிறது. இதைக் கூறுபவர்களுக்கு ஸர்வ மங்களமும் உண்டாகும் என்பதோடு அவர்கள் சாகா நிலையை அடைவர் எனவும் உறுதி அளிக்கிறது.

About The Author