ராமரின் பாதம் பட்ட புண்ய ஸ்தலங்கள்!

"பூமியில் மலைகளும் நதிகளும் எது வரை உள்ளதோ அது வரை மக்களிடையே ராமாயணம் நிலைத்து நிற்கும்"
– ராமாயணத்தில் வால்மீகி முனிவர் 1-2-34

ராமபிரான் காலடியாகவே அயோத்தி முதல் ராம சேது தாண்டி இலங்கை வரை யாத்திரை புரிந்துள்ளார். அவர் காலடித் தடங்கள் பதிந்த இடங்களில் முக்கியமான சிலவற்றை இங்கு பார்ப்போம்.

அயோத்யா

இது ராம ஜென்ம பூமி. ஹிந்துக்களின் புனித பூமி. துளஸிதாஸர், கம்பர், தியாகராஜர், மகாத்மா காந்தி உள்ளிட்டோருக்கு உத்வேகம் அளித்த ராம நாமத்தின் ஊற்றான அதி முக்கிய இடம்.

வடக்கு ரயில்வேயின் வாரணாசி – லக்னோ மார்க்கத்தில் அயோத்யா ரயில் நிலையம் உள்ளது. வாரணாசியிலிருந்து 189 கிலோமீட்டர் தூரத்திலும் லக்னோவிலிருந்து 128 கிலோமீட்டர் தூரத்திலும் உள்ளது.

பக்ஸர்

சித்தாசிரமம், வேத சிரா, வேத கர்ப்பா, க்ருஷ் என்று வேறு பெயர்களாலும் இது பிரசித்தி பெற்றது. விசுவாமித்திரர் ராமருக்கு பலை, அதிபலை ஆகிய முக்கிய மந்திரங்களை உபதேசித்த இடம் இது. கிழக்கு ரயில்வேயின் பாட்னா – மொகல்சராய் ரயில் மார்க்கத்தில் முக்கிய நிலையம் இது.

அகல்யாசிரமம்

கல்லாக இருந்த அகல்யா சாப விமோசனம் பெற்ற இடம் இது. சீதாமடி-தர்பங்கா ரயில் மார்க்கத்தில் கம்தௌல் என்ற ரயில் நிலையத்தில் இறங்கி மேற்கே 15 மைல் தொலைவில் உள்ள அஹியாரி என்ற கிராமத்தை அடைந்து கௌதம குண்ட் என்ற இடத்தை அடையலாம். இங்கிருந்து ஐந்து கிலோமீட்டர் தூரத்தில் அஹல்யா குண்ட் உள்ளது. இதுவே அஹல்யா சாப விமோசனம் பெற்ற இடம்.

ஜனக்பூர்

மிதிலை அரசர் ஜனகரின் ராஜதானி ஜனக்பூர். இது சீதாமடியிலிருந்து ஜனக்பூர் சாலையைக் அடைந்து அங்கிருந்து 36 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ஜனக்பூரை அடையலாம். இங்குள்ள பெரிய மைதானத்திலேயே ராமர் வில்லை முறித்த சம்பவம் நிகழ்ந்தது.

பரத்வாஜ ஆசிரமம்

ஆதிகாலத்தில் அனைவரையும் ஆகர்ஷித்து ஈர்த்த பிரயாகையின் முக்கிய கேந்திரம் பரத்வாஜ ஆசிரமம். பரத்வாஜ மாமுனிவர் தம் சிஷ்யர்களுடன் இருந்த இடம் இது. ப்ரயாகை தீர்த்தராஜம் என்றும் அழைக்கப்படுகிறது. அதாவது தீர்த்தங்களிலெல்லாம் சிரேஷ்டமான தீர்த்தம் என்று பொருள். இந்தப் பகுதி இப்போது அலகாபாத் என்று பிரசித்தி பெற்ற இடமாகத் திகழ்கிறது.

வால்மீகி ஆசிரமம்

ஆதி காவியமான ராமாயணத்தை இயற்றிய வால்மீகி முனிவர் வாழ்ந்த இடம். ப்ரயாகைக்கு தெற்கே 30 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. இன்னும் இரு இடங்களையும் வால்மீகி ஆசிரமமாகக் கூறுகின்றனர். கான்பூர் அருகே பிடூரில் கங்கை கரையிலும் சீதாமடி அருகேயும் அவர் வசித்ததாகக் கூறப்படுகிறது.

சித்ரகூடம்

ராமர் வனவாசத்தில் முக்கிய இடம் இது. அலகாபாத்- ஜபல்பூர் ரயில் மார்க்கத்தில் மாணிக்பூர் ஜங்ஷன் உள்ளது. இங்கிருந்து 36 கிலோமீட்டர் தூரத்தில் சித்ரகூடம் ரயில் நிலையத்தில் இறங்கிச் செல்லலாம்.

அனசூயா ஆசிரமம்

ரிஷிபத்தினி அனசூயா வசித்த இடம். சித்ரகூடத்திலிருந்து தெற்கில் 12 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது.

சுதீக்ஷ்ண ஆசிரமம்

வீரசிங்கபுரத்திலிருந்து 22 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. சரபங்க ஆசிரமத்திலிருந்து 15 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. ஜைத்வாரா ரயில் நிலையத்திலிருந்து 23 கிலோமீட்டர் தூரத்தில் வீரசிங்கபுரம் உள்ளது. சரபங்கர் ஆசிரமமும் இந்தப் பகுதியில்தான் உள்ளது.

அகஸ்தியாசிரமம்

குந்தாபூர் – கோகர்ண மார்க்கத்தில் கங்கோலி உள்ளது. கங்கோலியிலிருந்து பார்த்தால் மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடரைக் காணலாம். இங்கே பல அபூர்வ கோவில்கள் உள்ளன. இங்கேதான் கடல் அருகே அகஸ்திய ஆசிரமம் உள்ளது.

ராம்டேக்

இது ராமகிரி என்றும் அழைக்கப்படுகிறது. டேகரி என்றால் சிறிய மலை என்று பொருள். டேக் என்றால் அபயம் தந்து ஆதரிப்பது என்று பொருள். ராமர், லக்ஷ்மணன், சீதை ஆகிய மூவரும் வனவாசத்தின் போது சிறிது காலம் தங்கி இருந்தனர். ஆதலால் இது புண்ய ஸ்தலமாகக் கருதப்படுகிறது.

மகாராஷ்டிர மாநிலத்தில் நாக்பூர்-சிவனி-ஜபல்பூர் மார்க்கத்தில் தும்சர் என்ற ஒரு சிறிய நகரம் உள்ளது. இதன் அருகில் உள்ள இடமே ராம்டேக். நாக்பூரிலிருந்து 46 கிலோமீட்டர் தூரம் தான்!

பஞ்சவடி

ராமாயணத்தில் கோதாவரியை ராமர் அடைந்தது விஸ்தாரமாக வர்ணிக்கப்பட்டுள்ளது. இங்குள்ள பஞ்சவடி மிக முக்கியமான இடம்.இங்கிருந்து 25 கிலோமீட்டர் தூரத்தில் த்ரயம்பகேஸ்வரத்திலிருந்து கோதாவரி தோன்றுகிறது.

சென்ட்ரல் ரயில்வேயின் மும்பை – புசாவல் தடத்தில் நாசிக் ரோட் ஒரு பெரிய ரயில் நிலையம். இங்கிருந்து 8 கிலோ மீட்டர் தூரத்தில் பஞ்சவடி உள்ளது.

சபரி ஆசிரமம்

சபரி பக்தியுடன் எச்சில் படுத்தித் தந்த கனியை ராமர் மனமுவந்து ஏற்ற சம்பவம் நடந்த இடம் இது.

விஜயநகர சாம்ராஜ்யத்தில் பிரசித்தி பெற்ற புராதன நகரம் ஹம்பி ஆகும். இது 36 கிலோமீட்டர் விஸ்தீர்ணத்தில் பரவிய பெரிய நகரம். நகர மத்தியில் விரூபாட்சர் கோவில் உள்ளது. இங்கே துங்கபத்ரா நதி கோலாகலத்துடன் துள்ளி வருகிறது. இதை சக்ர தீர்த்தம் என்கின்றனர். இதன் அருகே உள்ள மலையில் ஸ்ரீ ராமர் ஆலயம் இருக்கிறது. இந்த மலை மதங்க பர்வதம் என்று அழைக்கப்படுகிறது. இங்கேதான் மதங்க மாமுனிவர் வசித்து வந்தார். இவர் ஆசிரமத்திற்கு அருகேதான் சபரி வசித்து வந்ததாக வரலாறு தெரிவிக்கிறது.

கிஷ்கிந்தா

கர்நாடகத்திலிருந்து ஹூப்ளி – கதக் – பெல்லாரி மார்க்கத்தில் ஹான்ஸ்பேட் முக்கிய ரயில் நிலையம் ஆகும். பெல்லாரியிலிருந்து 65 கிலோமீட்டர் தூரத்தில் இது உள்ளது. ஹூப்ளியிலிருந்து 145 கிலோமீட்டர் தூரத்திலும் கதக்கிலிருந்து 85 கிலோமீட்டர் தூரத்திலும் உள்ளது. இங்கிருந்து 14 கிலோமீட்டர் தூரத்தில் ஹம்பி உள்ளது.

ஹான்ஸ்பேட் விஜயநகர சாம்ராஜ்யத்தின் பழைய ராஜதானி ஆகும். இதை ஒட்டிய பகுதியே கிஷ்கிந்தா ராஜ்யம் ஆகும். இதை ஆண்டவரே சுக்ரீவ மஹாராஜா. இந்தப் பகுதியில் உள்ள சிவ-விருபாட்சர் கோவில் மிகவும் பிரசித்தமானது.

ருஸ்யமுகம்

கிஷ்கிந்தா ராஜ்யத்தில் துங்கபத்ரா நதிக்கரையில் அனாகுந்தி என்ற கிராமம் உள்ளது. இதற்கு 3 கிலோமீட்டர் தூரத்தில் பம்பா சரோவர் உள்ளது. இதைச் சார்ந்த பகுதியே ருஸ்யமுக பர்வதம் ஆகும்.

ராமேஸ்வரம்

ராமேஸ்வரத்திற்கு மதுரையிலிருந்தும் சென்னையிலிருந்தும் செல்லலாம். ராமேஸ்வரத்திலிருந்து தனுஷ்கோடி 18 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது.

ராமசேது

அமெரிக்க விண்வெளி ஆய்வு நிலையமான நாஸா ஜெமினி -11 என்ற விண்கலத்தை விண்ணில் ஏவியது. இந்த விண்கலம் 1966ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 14ம் தேதி ராமேஸ்வரம் -ஸ்ரீலங்கா இடையே அமைந்துள்ள. பாலத்தின் புகைப்படத்தை எடுத்து வெளியிட்டது. ஒப்பற்ற தனித்தன்மையுடைய வளைவுடன் கூடிய மனிதனால் அமைக்கப்பட்ட பாலம் என்று நாஸாவே புகழ்ந்த பாலம்தான் ராம சேது. (நாஸா எடுத்த இந்தப் படத்தை 1993ம் ஆண்டு டில்லி பிரகதி மைதானில் நடந்த தேசிய விஞ்ஞான மையத்தின் கண்காட்சியில் பிரதானமாக வைத்திருந்தது குறிப்பிடத்தகுந்தது.)
இதன் மீது நடந்தே ராமர் தன் சைனியத்துடன் இலங்கை சென்றார்.

இலங்கை

குபேரன் வாழ்ந்த எல்லையற்ற செல்வத்துடன் இருந்த நாடு. அவனிடமிருந்து ராவணன் இதை அடைந்து இங்கு வாழ்ந்து வந்தான். பத்துத் தலைகளுடன் கூடிய இவனை வீழ்த்தி சீதா தேவியை அசோகவனத்திலிருந்து ராமர் மீட்டு விபீஷணனை அரசனாக நியமித்து அயோத்தி மீண்டார்.

ராமாயணம் தென் கிழக்கு ஆசியாவிலும், திபெத்திலும், மலேசியாவிலும், ஸ்ரீலங்காவிலும், பிலிப்பைன்ஸிலும், அரேபியா, பல்கேரியா நாடுகளிலும் பரவி உள்ளது. பர்மிய, கம்போடிய, சீன, செக், எகிப்திய, ரஷிய, ஆங்கில மொழிகள் உள்ளிட்ட ஏராளமான மொழிகளிலும் ராமாயணம் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.

ராமரின் வரலாற்றை மனித குலம் உள்ளவரை மறைக்கவோ மாற்றவோ மறுக்கவோ முடியாதபடி அவர் பாதம் பட்ட புண்ய ஸ்தலங்கள் இந்தியா முழுவதும் வரலாற்றுச் சின்னங்களாக பரவி உள்ளன. அவற்றில் முக்கியமான சிலவற்றையே மேலே பார்த்தோம். மர்யாதா புருஷோத்தமான ராமன் தன் ஜீவியத்தால் வாழ்க்கை முறையைக் காண்பித்தான். இது கர்மயோகம். தன் நாமத்தால் உலகைக் காப்பாற்றுகிறான். இது பக்தி யோகம். தனது அகண்டாகார பொருளால் மெய்ப்பொருளை விளக்குகிறான். இது ஞான யோகம்.

ராம நாமம் வெல்க!

(நன்றி : ஞான ஆலயம்)

About The Author

5 Comments

  1. Dr. S. Subramanian

    It is a good compilation of the historic/mythological/geographic locations visited by Rama. I am wondering why Rama took a western detour towards the gOdAvari river (near NAsik) in search of SItA. From DandakAranyam the route to KishkindA would be a straight southern route. I have also read someplace that panjcavaDi is near BadrAcalam on the Godavari river closer to Bay of Bengal. If so that would put it closer to Kishkinda geographically speaking. Any further thoughts, Mr. Nagarajan?

  2. S.S.Mani

    தென் தமிழகத்திலுள்ள களக்காடு என்ற இடம் தான் சீதையை ராவணன் கடத்திச்சென்ற இடம் என்று கேள்விப்பட்டதுண்டு. எனவே சோடகாரணீயம் என்றும் இவ்விடத்திற்கு ஓரு பெயருண்டு. மேலும் இங்கிருக்கும் சத்தியவாகீசுவரர் என்ற ஈசனின் பெயரும் இராமன் வைத்தது என சொல்லப்படுகிறது. (சத்தியவாக்கு ஈன்றவர்). இங்கு உள்ள நதியின் பெயர் கௌதம நதி. அகல்யை சாபவிமோசனம் பெற்றதும் இங்கேயே என்றும் கூறப்படுகிறது. தமிழகத்தில் ராமன் கால் பதித்த இடங்கள் குறித்த மேலும் ஆராய்ச்சி செய்ய்வேண்டிய் க்ட்டாயம் நமக்கு உள்ளது.

  3. R. Ramadurai

    மிகச்சிறந்த அருமையான தொகுப்பாக உள்ளது. மேலும் சில படங்கள் சேர்த்திருந்தால் மிகவும் சிறப்பானதாக இருக்கும். முயற்சி பெரிதும் பாராட்டத் தக்கது. தொடர்ந்து பல தகவல்கள் தர தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

    இராமதுரை,
    இயக்குனர்,
    இந்திய தர நிர்ணய கழகம்,
    திருச்சிராப்பள்ளி,
    தமிழ்னாடு – 620 014

  4. Dr. S. Subramanian

    >>I am wondering why Rama took a western detour towards the gOdAvari river (near NAsik) in search of SItA.

  5. கரிகாலன்

    அருமையான தகவல்கள். மேலும் விவரங்களை எதிர் நோக்குகின்றேன்.

Comments are closed.