ராமன் தேடிய சீதை – திரை விமரிசனம்

வன்முறை, அதீத கவர்ச்சி, குத்துப்பாட்டு போன்ற ஃபார்முலா அம்சங்கள் இல்லாத ஒரு குடும்பப் பாங்கான கதை. இந்தப் படத்தின் வெகு சிறப்பான அம்சமே பசுபதி மற்றும் நிதின் சத்யாவின் கிளைக்கதை தான். தோல்விகளைக் கண்டு துவண்டு விடாதே என்ற பாசிடிவான செய்தியைத் தருகிறது படம்.

சின்ன வயதில் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட சேரன் தன் கல்யாணத்திற்குப் பெண் பார்க்கும் படலங்களை விவரிக்கும் ஒரு சராசரிக் கதைதான். ஆனாலும் இதை சில சுவையான சம்பவங்களுடன் சேர்த்து ஒரு நல்ல படத்தைக் கொடுக்க முடியும் எனக் காட்டியிருக்கிறார் டைரக்டர் ஜகன்னாத்.

தான் மனநல இல்லத்தில் இருந்த உண்மையை விமலா ராமனிடம் சேரன் திக்கித் திணறிச் சொல்லியவுடன், அவர் சேரனை மணம் செய்ய மறுத்துவிடுகிறார். மனம் வெறுத்த நிலையில்தான் கண் பார்வையற்ற ரேடியோ ஜாக்கியான பசுபதியைச் சந்திக்கிறார். அவரது தன்னம்பிக்கையையும், அவரை மணந்து மகிழ்ச்சியுடன் வாழும் பெண்ணையும் பார்க்கும்போது வாழ்க்கையில் நம்பிக்கை, ஒரு புதுப் பார்வை ஏற்படுகிறது சேரனுக்கு.

சேரன் பெண் பார்க்கும் அடுத்த பெண் காதலனுடன் ஓடிவிட, இன்னும் ஒரு பெண் வேறு ஒருவனை மனதில் நிறுத்தி வைத்திருக்க, பெண் பார்க்கும் படலம் தொடர்ந்து இவருக்குக் கல்யாணமே ஆகப் போவதில்லையோ என்று நம்மைக் கவலைப்பட வைக்கிறது.

திருடனாக வரும் நிதின் சத்யா திருட வந்த வீட்டில் அந்த வீட்டுப் பெண் காயத்ரியிடம் மனதைப் பறிகொடுத்து விடுகிறார். காதலர்களைச் சேர்த்து வைத்துவிட்டுச் சேரனும் பெண் பார்க்கும் படலத்தைத் தொடர்கிறார்.

நாகர்கோவிலில் பெண் பார்க்கச் செல்லும்போது திருமணத்தன்று வெளியேறி காதலனை மணந்துகொண்ட பெண்னைக் கர்ப்பிணியாக வறுமைச் சூழலில் சந்திக்க, ஓடிப் போனவள்தானே என்று பார்க்காமல் ஓடி ஓடி உதவிகள் செய்கிறார்.
சேரனுக்குத் தகுந்த பாத்திரம், குறைவில்லாமல் செய்திருக்கிறார். ஓடிப்போன பெண்ணின் அப்பாவாக மணிவண்ணன், அவரே சேரனுக்குப் பெண் பார்க்க ஏற்பாடு செய்வதும், தன் பெண்ணின் பிரசவத்திற்காக உதவி செய்யும் சேரனிடம் எரிமலையாக வெடிப்பதுமாக மணியான நடிப்பு.

"வணக்கம் தோழர்களே, நான் நெடுமாறன் பேசுகிறேன்" என்று அழுத்தம் திருத்தமாக நல்ல தமிழில் பேசி தன் நடிப்புப் புலமையை வெளிப்படுத்துகிறார் பசுபதி. நம் மனதிலும் இடம் பிடிக்கிறார்.

அவ்வப்போது சில இடங்களில் கதை ஊர்ந்து ‘எப்படா சேரனுக்கு சரியான ஜோடி கிடைக்கும்’ என்று நம்மை ஏங்க (தூங்க?) வைக்கிறது. பாடல்களில் ‘இப்பவே, இப்பவே’ மட்டும் மனசில் நிற்கிறது. காமிரா நாகர்கோவிலின் அழகை அற்புதமாகப் படம் பிடித்திருக்கிறது

ஓஹோ என்று சொல்ல முடியாவிட்டாலும், ஒரு நல்ல குடும்பப் படத்தைப் பார்க்க வேண்டும் என்ற ரசிகர்களின் தேடலைத் தீர்த்து வைக்கிறது ‘ராமன் தேடிய சீதை’.

About The Author

2 Comments

  1. anwar

    I saw this movie and this was another worst movie from cheran. Pls try to learn how to give honest review about a movie.
    If you want you can also use me to write movie-review.
    mail me : rajanwar.s@gmail.com
    Thanks,
    Anwar

  2. Geetha Viswakumar.

    ரொம்ப நல்ல படம். எப்பவும் சேரன் படம் குடும்பத்தில் நடக்கும் நிகழ்ச்சிகலை அனுபவபோஉர்வமக எடுப்பதில் வல்லவர். இந்த படமும் இதுக்கு விதிவிலக்கில்லை.

Comments are closed.