பிள்ளைப் பருவ முதல்
பேரின்ப வெள்ளத்தில்
உள்ளத்தை ஆழ்த்தி வரும்
ஒருதிருப் பெயர் ராதை.
மகுடி இசை பாம்புகளை
மயக்குவதைப் போல் அகத்துள்
புகுந்தின்ப வேதனையின்
போதை; புல்லரிப்பேன்.
நினைவு தெரிந்த முதல்
நெஞ்சத்தில் தித்திக்கும்
சுனைப் பெருக்கு; அமுதத்தின்
சுரபி; மனக் குயிற்பாட்டு.
சீதைஎன்ற பெயர் நெஞ்சில்
சித்தரிக்கும் பக்தி உரு;
கோதை என்ற பெயர் ஒலியில்
கோவிந்தன் குழலோசை;
ராதைமன யாழில் அனு
ராகங்கள் மீட்டி இன்ப
வேதனையின் புளகிதத்தில்
விம்மு கின்ற திருநாமம்.
ராதையென்ற பெயர் கேட்டால்
ராத்திரியில் தூக்கமில்லை;
போதையுற்றுப் பகலெல்லாம்
பொல்லாத சொப்பனங்கள்.
ராகத்தின் இசைக் கோலம்
ராதை நெஞ்சில் தீட்டுகிறாள்.
மோகத்தை மூட்டி உயிர்
மூச்சுகளைத் தகிக்கின்றாள்.
சோகத்தின் எரி யமிலச்
சோதனைகள் கூட்டுகிறாள்;
தேகத்தை நிலவு சுடத்
தென்றல் பட்டுக் கொப்பளிக்க
நோகும் பொழுதிலவள்
நுண்மா நுழை புலத்தால்
அகம் குளிருமொரு
அஞ்சனமும் தடவு கிறாள்.
முட்டி அகச் சுவரில்
முன்னைப் பல பிறவிகளாய்
தொட்டுத் தொடர்ந்து வரும்
தொனி ஒன்றின் எதிரொலியோ?
ஓச்சுகின்ற மனச் செங்கோல்
ஒரு பெயர்க்கே உரித்தாமோ?
பேச்சுக்குப் பொருள் இல்லாப்
பேரின்பப் பரவசத்தில்
இடமுண்டோ பெயர்களுக்கே?
இன்னபல கேள்விகட்கு
விடையறியேன் அரியணையில்
வீற்ற திருப் பெயர் ராதை.