ராணி மங்கம்மா வழிபட்டது என்றவுடனேயே அது எத்தனை பழமை வாய்ந்த கோயில் என்று நம்மால் ஊகிக்கமுடிகிறது. மதுரையில் உள்ள இந்தப் பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோயிலை நடத்துபவர்கள் சௌராஷ்டிர குலத்தினர். இந்தக் குலத்தினர் பலருக்குத் திருப்பதி பாலாஜியே குலதெய்வமாக இருந்து வருகிறார். மதுரையில் பல சௌராஷ்டிரர்கள் வியாபார நிமித்தமாகக் குடியேறிப் பல தலைமுறைகளாக வசித்து வருகிறார்கள். நன்றாகத் தமிழும் பேசுகிறார்கள்!
இவர்கள் இங்கு குடிவந்தது முதல் மதுரையிலிருந்து ஒவ்வொரு தடவையும் திருப்பதி போய் வந்தனர். ஒருநாள்! திருப்பதி வெங்கடேசப்பெருமாள் சிலரது கனவில் காட்சி அளித்தார். தனக்கு மதுரையிலேயே ஒரு கோயில் கட்டும்படிக் கூறி அருளினார்.
"சுவாமி சிலை எங்கு இருக்கிறது? புதிதாகச் செய்ய வேண்டுமா?" என்று ஒரு பக்தர் கேட்க, பெருமாளே தன் மூர்த்தி இருக்கும் இடத்தைக் குறிப்பிட்டுச் சொன்னாராம். அதன்படிப் பக்தர்கள் அங்கு போய்ப் பார்க்க, அப்படியே ஸ்தம்பித்து நின்றுவிட்டனர்! சங்கு சக்கர கதாபாணியாக அழகான பெருமாள் சிலை அவர்களுக்கு அங்கு கிடைத்தது. சொன்னபடிச் சொன்ன இடத்தில் பிரசன்னமானதால் இந்தப் பெருமாளுக்குப் பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் என்ற திருப்பெயரைச் சூட்டி வணங்கி வருகின்றனர். அலர்மேலு மங்கைத் தாயாரும் இங்கு எழுந்தருளி அருள்புரிகிறார்.
இந்தக் கோயிலில் ஒரு தம்பூரா இருக்கிறது. அதை வைத்திருந்தவர் யார் தெரியுமா? இசை மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜ சுவாமிகள்! ஸ்ரீதியாகராஜர் இந்தக் கோயிலுக்கு வந்து பெருமாளைத் தரிசித்து மனமுருகப் பாடுவாராம். ஒரு தடவை தன் தம்பூராவையே இக்கோயிலுக்கு அவர் காணிக்கையாக அளித்துவிட்டாராம். அதைக் கோயில் அறங்காவலர்கள் மிகவும் பத்திரமாகக் காத்து வருகின்றனர். ராணி மங்கம்மாளும் இந்தக் கோயிலுக்கு முத்துமாலை போன்ற பல ஆபரணங்களையும் மேலும் பல காணிக்கைகளையும் கொடுத்திருக்கிறாராம்.
இங்கு அருள்புரியும் யோக நரசிம்மர் மிகவும் சக்தி உடையவர். ஒரு தடவை திருமலை நாயக்க மன்னர் இந்தக் கோயிலில் நுழைந்தவுடன் ஸ்ரீ கிருஷ்ணரின் ஜோதியைக் கண்டு தன்னை மறந்து நின்றாராம். அப்போது, அர்த்த மண்டபம் கட்டுவதற்கான கற்களைப் பெருமாளே தேர்ந்தெடுத்து அசரீரியாக அவருக்கு உணர்த்தினாராம். அதன்படித் திருமலை நாயக்கரும் இந்தப் பொறுப்பைச் சிரமேற்கொண்டு முழுவதும் கட்டியிருக்கிறார்.
குழந்தை இல்லாதவர்கள் இங்கு இருக்கும் நவநீதக் கிருஷ்ணனுக்கு வெண்ணெய்க் காப்பு அணிவித்து அர்ச்சனை செய்ய, வீட்டில் மழலைச் சத்தம் கேட்கும் என்று மக்கள் நம்புகின்றனர். இங்கு பெருமாளுக்கும் தாயாருக்கும் தனித் தனிச் சன்னிதிகள் அமைந்துள்ளன. இருவரும் கிழக்கு நோக்கி அமர்ந்து அருள்பாலிக்கின்றனர். இக்கோயிலின் கருட மண்டபம், அலங்கார மண்டபம், கண்ணாடி அறை, கருவறை, மகா மண்டபம், யாகசாலை, வாகன அறை, கொடிமரம் எல்லாவற்றிலும் தனிச் சிறப்பைக் காணமுடிகிறது! கோபுர வாயிலில் கருப்பண்ணசாமியும் அருள்கிறார். தவிர, ஸ்ரீலட்சுமி ஹயக்ரீவர் நினைவாற்றல், தொழில், கல்வி மேன்மையடைய அருள்புரிகிறார். இவருக்கு ஏலக்காய் மாலை சாற்றி, தேன், கற்கண்டு, வெற்றிலை பாக்குடன் சமர்ப்பிக்க நல்ல பலன் கிடைக்கும்!
மதுரைக்குப் போனால், தெற்குக் கிருஷ்ணன் கோயில் தெருவில் இருக்கும் இந்த ஸ்ரீபிரசன்ன வெங்கடேசப்பெருமாள் கோயில் போய் அருள் பெற மறவாதீர்கள்!
இந்த ஆலய விலாசம் அனுப்ப வென்டுகிரென்.