ராஜராஜ சோழன் – சோழ வரலாற்றின் சாதனை நாயகன்!
தமிழின் பொருள் காண முடியாத சொற்களில் ‘சோழ’ என்பதும் ஒன்றாகும். ‘நீர் சூழ்நாடு’ என்பது நாளடைவில் ‘சூழநாடு’ என்று மருவி, பிறகு ‘சோழநாடு’ என மாறியிருக்கலாமோ என்பது ஆராயத்தக்கது. சேரர், பாண்டியர் என்ற பெயர்களைப் போன்று சோழர் என்பதும் பண்டைக் காலந்தொட்டே ஆட்சி செய்து வரும் குடும்பம் அல்லது குலத்தின் பெயராகும் என்று பரிமேலழகரால் கருதப்பட்டது. – ஒரு வரலாற்றுக் குறிப்பு.
ராஜராஜ சோழன் என்றாலே கம்பீரமாக நெடிதுயர்ந்து நின்று தமிழர்தம் பெருமையைத் தரணிக்குப் பறைசாற்றும் தஞ்சைப் பெரிய கோவில்தான் நம் நினைவிற்கு வரும். பெரிய கோவிலின் பெருமைகளை அலசுமுன்னே அதைப் படைத்த ராஜராஜனைப் பற்றிச் சிறிது அறிதல் அவசியம்.
அருள்மொழிவர்மன் என்ற இயற்பெயர் கொண்ட ராஜராஜ சோழன் சுமார் 64 பட்டங்களோடும், பெயர்களோடும், குறிப்பாக பெருவுடையார், சிவபாத சேகரன் என்றெல்லாம் அழைக்கப்பட்டார். இவர் 985ஆம் ஆண்டிலிருந்து 1014ஆம் ஆண்டு வரை ஆட்சியிலிருந்ததாகக் கருதப்படுகிறது. ராஜராஜன் தன் ஆட்சிக்காலத்தில் புரிந்த சாதனைகள் அவரது பன்முகத் திறனுக்கு எடுத்துக்காட்டுகள்.
அவரது ஆட்சியிலிருந்து சில பக்கங்களைக் காணலாம்.
வெளிநாட்டு உறவு
ராஜராஜ சோழன் வெளிநாட்டு உறவுகளை பலப்படுத்த வேண்டும் என்பதில் மிகவும் அக்கறை உள்ளவர். தன் நாடு, தன் மக்கள் என்ற குறுகிய நோக்கம் இல்லாமல் அனைவரிடமும் நட்பு பாராட்டும் விரிந்த பார்வை உடையவர். குறிப்பாக மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்தின் ஒரு பகுதி, இந்தோனேசியாவின் ஒரு பகுதி அரசர்களோடு நெருங்கிய தொடர்பு வைத்திருந்தார். தொன்றுதொட்டே அந்தக் கீழை நாடுகளுடன் தமிழ்நாட்டுக்கு வணிகத் தொடர்பு இருந்தது. வணிகர்கள் அந்த நாடுகளுக்குப் பூம்புகாரிலிருந்து சென்று பின்னர் அங்கிருந்து சீனாவிற்குச் செல்வர். இதனால் தமிழ்நாட்டிற்கும் சீன நாட்டிற்கும் அன்றைய காலத்தில் நெருக்கமான உறவு இருந்தது.
அப்போது சீனாவில் அரசனாக இருந்த ஸ்ரீ மார விஜயோத்துங்க வர்மன் தன் தந்தையின் பெயரால் தமிழ்நாட்டில் ஒரு பௌத்த விஹாரம் (புத்த கோயில்) கட்ட விழைந்து ராஜராஜனிடம் அனுமதி கேட்டான். ராஜராஜன் சம்மதித்து நாகப்பட்டினத்தில் அமைக்க அனுமதி அளித்ததோடு அந்த பௌத்தப் பள்ளிக்கு ஏராளமான தங்கத்தையும் கொடுத்தார். நாகப்பட்டினத்துக்கு அருகில் ‘ஆனைமங்கலம்’ என்ற ஊரையே கொடுத்ததோடு, அங்கு வரும் வருவாயையும் பௌத்தப் பள்ளிகளுக்கே அளித்தார். ராஜராஜன் பெயரிலும் ‘ராஜராஜப் பெரும்பள்ளி’ என்று ஒன்று அமைக்கப்பட்டது.
கட்டப்பட்ட பௌத்த விகாரத்தில் ஏராளமான வெளிநாட்டு பௌத்த பிக்குகள் (துறவிகள்) வந்து தங்குவர். திவ்ய தேச யாத்திரை செல்வதுபோல மலேசியா – பர்மா – வங்காளம் – கலிங்கம் (ஒரிஸ்ஸா) – ஆந்திரம் வழியாகத் தமிழ்நாட்டில் நாகப்பட்டினம் சென்று தங்கி, பின்னர் அங்கிருந்து ஈழத்திலுள்ள பௌத்த விகாரங்களுக்குச் செல்வார்கள். இதற்கான சான்றுகள் இருக்கின்றன. பௌத்தப் பள்ளிகளில் செம்பினாலான ஏராளமான பௌத்த விக்கிரகங்கள் இருந்தன. நூறாண்டுகளுக்கு முன் நாகப்பட்டினத்தில் சீனப் பகோடா என்றழைக்கப்பட்ட ஓரிடத்தைக் கிறித்தவப் பாதிரிமார்கள் இடித்தார்கள். அந்த இடத்தில் செம்பாலான பௌத்த விக்கிரகங்கள் 300க்கு மேல் கண்டெடுக்கப்பட்டன. அவற்றின் பீடத்தில் தமிழ்ப் பெயர்கள் காணப்பட்டன. யார் சிலைகளைக் கொடுத்தார்கள் என்ற விவரமும் பதியப்பட்டிருந்தது. அதில் ‘ராஜராஜப் பெரும்பள்ளி’ என்கிற பெயரும் காணப்படுகிறது. கண்டெடுக்கப்பட்ட விக்கிரகங்களில் பாதியைச் சென்னை அருங்காட்சியகத்திற்கும் மற்றவற்றை வெளிநாடுகளுக்கும் கொடுத்தனர் ஆங்கிலேயர்கள். சில புத்த ஸ்தூபங்களும் கண்டெடுக்கப்பட்டன. ஸ்தூபங்களுக்கு அடியில் (கர்ப்பம்) புத்தரது கால் பட்ட மண்ணையோ அல்லது அவரது நினைவாக ஏதாவது ஒன்றையோ ஒரு பாத்திரத்தில் வைத்து மேலே ஸ்தூபங்களைக் கட்டுவர். அங்கிருந்தவர்கள் பலர் இந்து மதத்திலிருந்து பௌத்த மதத்திற்கு மாறியவர்கள் என்பதால் பௌத்தச் சிலைகளோடு இந்துக் கடவுளர் சிலைகள் பலவற்றையும் காண முடிகிறது.
எம்மதமும் சம்மதம்
ராஜராஜன் தீவிரமான சிவபக்தர். ‘சிவபாதசேகரன்’ என்ற பெயர் பெற்றவர். இருந்தாலும், எல்லா மதங்களையும் தன் மதம் போலவே பாவிக்கும் பரந்த மனப்பான்மை உடையவராகவே அவர் திகழ்ந்தார். பௌத்தர்கள் தங்கியிருந்த பல கிராமங்களில் அவர்களுக்கெனக் கோவில் அமைத்தார். அதைத் தனது ராஜ தர்மமாகக் கருதினார். வைணவர்கள், சமண மதத்தைச் சேர்ந்தவர்கள் என்று யாராயிருந்தாலும் அவர்களுக்கெனக் கோவில் அமைத்துக் கொடுத்து, வழிபாடு செய்ய முழு சுதந்திரமும் தந்திருந்தார். தன் மதத்தை மக்களிடம் ஒருபோதும் அவர் திணித்ததில்லை.
திருமுறை கண்ட சோழன்
அப்பர், சுந்தரர், ஞான சம்பந்தர் ஆகியோர் 9000 தேவாரப் பாடல்கள் பாடியுள்ளனர். ஆனால், அவற்றுள் பலவும் காலத்தால் அழிந்து சில பாடல்கள் மட்டுமே சோழ மன்னன் ராஜராஜன் கைகளுக்குக் கிடைத்தன. அந்தப் பாடல்களின் சிறப்பைக் கண்டு, யார் பாடியவை என்று கேட்டறிந்து மற்ற பாடல்களையும் கண்டெடுக்கும் முயற்சியில் அவர் இறங்கினார்.
ராஜராஜ சோழன், நம்பியாண்டார் நம்பி என்ற சிவத் தொண்டருடன் ஓலைச்சுவடிகளை மீட்கச் செல்லும் வழியில் திருநாரையூர் பிள்ளையார் ஒரு சிறுவன் வடிவில் வந்து மன்னனுக்கு, சிதம்பரம் சென்று தேவாரங்களை மீட்குமாறு வழி காண்பித்ததாகவும் ஒரு செய்தி நிலவுகிறது.
அசரீரி வாக்காய்ச் சிறுவன் உருவில் பிள்ளையார் சொன்ன தென்மேற்குத் திசையிலிருந்த அறையினை ராஜராஜன், நம்பியாண்டார் நம்பியுடன் சென்று திறக்க முற்பட, அங்கிருந்த தீட்சிதர்கள், "அப்பர், சுந்தரர், ஞான சம்பந்தர் மூவரும் சேர்ந்து வந்தால்தான் அறையின் திறவுகோலைத் தர முடியும்" என்று சொன்னார்கள்.
உடனே மன்னன் அம்மூவருக்கும் திருவிழா எடுத்து, அவர்களைப் போன்ற உற்சவ மூர்த்திகளைப் பல்லக்கில் வருவித்து பூட்டைத் திறக்க ஆணையிட்டான். தேவாரப் பாடல்களின் ஏட்டுச் சுவடிகள் கரையான் புற்றுகளுக்கிடையே இருந்தன. இன்று காணப்பெறும் தேவாரப் பாடல்களை அந்தப் புற்றிலிருந்து மீட்டவர் ராஜராஜ சோழன்!
இசைத் தொண்டு
கண்டுபிடிக்கப்பட்ட பாடல்களை எப்படிப் பாடுவது, என்ன ராகத்தில் (பண்) பாட முடியும் என்று தெரியாமல் தவித்தபோது, மூவர் பாடிய அந்தப் பாடல்களை யாழில் மீட்டியவரும், அப்பர், ஞானசம்பந்தர் ஆகியோரின் சம காலத்தவரும், சம்பந்தரோடு நெடுங்காலம் கூடவே இருந்து பழகியவருமான திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார் என்ற பாணர் குலத்தவரின் வம்சத்தைச் சேர்ந்த பெண் அந்த ராகங்களில் பண்னிசைப்பதாகத் தெரிய வந்தது. அந்தப் பெண்ணிடம், மேற்படி பாடல்களுக்கான பண்களைக் கேட்டறிந்தான் ராஜராஜ சோழன். பண்டை இசைக்கலையை மீட்டெடுத்து அவன் செய்த இத்தொண்டு மகத்தானது.
தேவாரப் பாடல்களைப் பாட 50 ஓதுவார்களை அமர்த்தினார் ராஜராஜன். அவர்களின் பெயர்கள் தேவாரம் பாடிய மூவரின் பெயர்களாக, திருநாவுக்கரையர், ஞானசம்பந்தன், நம்பி ஆரூரன் என்றே அமைந்தது. அவர்கள் அனைவரும் தீட்சை பெற்றார்கள். தீட்சை பெற்ற பிறகு ஞான சிவன், அகோர சிவன், தர்ம சிவன் என்ற பெயர்களில் அழைக்கப்பட்டார்கள். அந்த ஐம்பது பெயர்களும் கல்வெட்டுக்களில் காணப்படுகின்றன. அவர்களுக்கு ஆயுள் முழுவதும் உணவுக்குப் பஞ்சமில்லாமல் இருக்க ஏற்பாடு செய்தார் ராஜராஜன். ஒவ்வொருவருக்கும் எவ்வளவு பங்கு நெல் கொடுப்பது என்ற செய்தியைக் கூடக் கல்வெட்டுக்களில் காணலாம்.
நடனம்
நாட்டியக் கலைக்கு ராஜராஜன் செய்த தொண்டை நாம் அறிவோம். நானூறு நடனப் பெண்மணிகள் பெரிய கோவிலில் பணி புரிந்தனர். தகுதி அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அவர்களுக்கு உணவு, உடை, இருக்க இடம் என அனைத்தையும் ஏற்பாடு செய்தார் ராஜராஜன். அந்த நானூறு நாட்டிய நங்கைகளின் பெயர்களும், தங்கும் இடம், தெருப் பெயர்கள், வீட்டு எண் போன்ற நுணுக்கமான விவரங்களும் கல்வெட்டுக்களில் பதிக்கப்பட்டுள்ளன.
மேலாண்மை
மக்கள் நலனையே பெரிதாகக் கருதினார் மாமன்னன் ராஜராஜன். குடி உயரக் கோனுயரும் என்பதை உணர்ந்தவர் அவர். எங்கு சென்றாலும் அவருக்கு வெற்றிமுகம்தான். ஒவ்வோர் ஊரிலும் நிர்வாகம் நன்கு நடக்க வழி செய்திருந்தார். அதிகாரத்தை ஓரிடத்தில் குவிக்காமல் பரவலாக்கியவர் ராஜராஜன். எல்லா ஊர்களையும் செழுமையாக மாற்றி அமைத்தார். ஊர் நிர்வகிப்பவர்களுக்குச் சிறப்பு அதிகாரம் கொடுத்தார். ஊருக்கு வேண்டிய பொருட்களை ஈட்டி அதனைப் பாதுகாப்பவர்களுக்குப் பண்டாரம் என்று பெயர். வெளிப்படையான ஆட்சி, மக்கள் நலனுக்கே முதல் உரிமை, தான் மன்னன் என்ற அகந்தையின்றி அனைவருக்கும் அவரவர் பதவிக்குத் தகுந்த உரிமை குறித்துப் பாராட்டிய மாண்பு, மக்களே அவர்தம் ஊர்த் தலைமை அதிகாரியைத் தேர்ந்தெடுக்கும் முறை என்று ராஜராஜனுடைய ஆட்சியின் மேலாண்மைச் சிறப்புப் பற்றிய அனைத்துச் செய்திகளையும் கல்வெட்டுக்களின் மூலம் அறிகிறோம்.
ராஜராஜனின் ஆட்சிக் காலத்தைச் சோழர்களின் பொற்காலம் என்று உறுதியாகக் கூறலாம்.
–வரும்…
தகவல்கள் உதவி: பொன்னியின் செல்வன் வரலாற்றுப் பேரவை, வரலாற்று ஆசிரியர்கள் நீலகண்ட சாஸ்திரியார், நாகசாமி, சத்தியமூர்த்தி, கலைக்கோவன், குடவாயில் பாலசுப்ரமணியன், வரலாறு.காம், ரீச் பவுண்டேஷன்.
“