செம்மொழி மாநாட்டைச் சிறப்பாக நடத்தி தமிழன்னைக்கு மகுடம் சூட்டி மகிழ்ந்தோம். தமிழ் செம்மொழி என்ற பெருமையை அடைந்ததற்கு மொழியின் தொன்மை மட்டும் காரணமல்ல – தமிழர்களின் பண்பாடு, கலாச்சாரம், அறிவியல் முன்னேற்றம் என்று எல்லாத்துறையிலும் ஐரோப்பிய நாகரிகம் வளருமுன்னரே உலக முன்னோடியாக இருந்ததால்தான்!
ஏறத்தாழ நானூறு ஆண்டுகள் ஆட்சி நடத்திய சோழர்கள் காலத்தை தமிழ்நாட்டின் பொற்காலம் என்று சொல்லலாம். கட்டிடக்கலை, சிற்பக்கலை, நாட்டியக்கலை, ஓவியம் என்று அனைத்துத் துறைகளிலும் உயர்ந்து நின்றதுடன் நிர்வாகத்துறையிலும் இன்றைய ஆட்சியாளர்களுக்குக் கூட ஒரு முன் மாதிரியாகத் திகழ்ந்த நேரம் அது.
‘சோழ வளநாடு சோறுடைத்து ‘என்று போற்றப்பட்ட காலம். பசி, பட்டினி இன்றி அனைத்து மக்களும் செழிப்பாக வாழ்ந்த காலம். மத வழிபாட்டிற்கான சுதந்திரம் அனைத்து மதத்தினருக்கும் இருந்தது. கலைஞர்களும் புலவர்களும் உச்சத்தில் இருந்த நேரம். "ஓங்கு பெருந்செந்நெலூடு கயலுகள், பூங்குவளைப் போதிற் பொறிவண்டு கண்படுப்ப" என்று ஆண்டாள் கண்ட கனவைப் பத்து பன்னிரெண்டாம் நூற்றாண்டுகளில் நனவாக்கித் தந்த காலம் சோழர்கள் காலம். சோழர்களின் வரலாற்றைப் பாமரனும் அறியும்வண்ணம் கற்பனையோடு கலந்து கொடுத்தது கல்கியின் பொன்னியின் செல்வன்.
மாட மாளிகைகள், கூட கோபுரங்கள் கட்டுவதைத் தவிர்த்து சோழ மன்னர்கள் இன்றும் உலகில் உயர்ந்து நிற்கும் கோவில்களை நிர்மானித்தவர்கள். அத்தகைய கோவில்களில் ஒன்றுதான் ஆயிரம் ஆண்டுகள் சென்ற பிறகும் அன்று போல் இன்றும் நம் தமிழ்மொழிபோல் இளமையாக விளங்கும் தஞ்சாவூர் பெரிய கோவில். பெருவுடையார் கோவில், பிரஹதீஸ்வரம் என்றெல்லாம் அழைக்கப்படும் தஞ்சைப் பெரிய கோவில் நம் தமிழர் பண்பாட்டிற்குக் கட்டியம் கூறும் ஒரு அதிசயம்.
இக்கோயிலை ஆய்வு செய்யும் முனைவர் கலைக்கோவன், "இக்கோயிலை முழுமையாய் ஆய்வு செய்ய ஓராயுள் போதாது" என்கிறார். தஞ்சையிலேயே வசிக்கும் பேறினைப் பெற்ற வரலாற்றாய்வாளர், முனைவர் குடவாயில் பாலசுப்ரமணியமோ, "நான் ஒவ்வொரு முறை செல்லும் பொழுதும், அதுவரைக் கண்டிராத ஏதோ ஒன்று என் கண்ணில் படுகிறது" என்கிறார்.
எழுத்துச் சித்தர் பாலகுமாரன் தனது உடையார் புதினத்தின் முன்னுரையில் பெரிய கோவில் சிறப்பு பற்றி குறிப்பிடுகிறார்.
"ஒருமுறையா, இருமுறையா முப்பது வருடங்களுக்கு மேல் எத்தனையோ முறை இந்தக் கோயிலை விதம் விதமாக சுற்றிப்பார்த்திருக்கிறேன். கல்வெட்டுக்களைத் தடவித் தேம்பியிருக்கிறேன். உற்சாகத்தில் குதித்திருக்கிறேன். அவ்வப்போது நண்பர்களை அழைத்து வந்து பார், இதைப்பார், அதைப்பார், அங்கே பார், இங்கே பார் என்று கூவலாய் பேசியிருக்கிறேன். கையிலே ஒரு தடியை வைத்துக் கொண்டு அந்த கோபுர வாசலில் நின்றபடி,
திருமகள்போல பெருநிலச் செல்வியும்
தமக்கே உரிமை பூண்டு மெனக்கொள
காந்தளூர்ச்சாலை கலமறுத்தருளி…
என்று கட்டியம்காரனாகக் கூவ ஆசைப்பட்டிருக்கிறேன். பெருவுடையார் கோயில் உள்ளுக்குள் இருக்கின்ற ஓவியங்களையும், சிற்பங்களையும், நாற்பது ஐம்பது முறைகளுக்கு மேல் பார்த்திருக்கிறேன்."
சாரப்பள்ளத்திலிருந்து சாரம் கட்டி இத்தனை உயரத்திற்கு கல் சுற்றியிருக்கிறார்கள் என்பது சிறிதும் நம்ப இயலாதாக உள்ளது. தஞ்சையில் வாழும் இராஜேந்திரர் என்ற பொறியல் வல்லுனரின் கூற்றுப்படி இது ஸ்பைரல் சாரமாக, வளைந்து வளைந்து போகும் பாதையாகத்தான் இருந்திருக்க வேண்டுமென்பது ஒரு யூகம். அந்த மண் கொண்டுபோய் கொட்டப்பட்ட இடமும், ஒரு சிறு குன்றென அது நிற்கும் விதமும் இன்னமும் இருக்கின்றன."
எந்த வியக்தியும் தனி மனிதனால் நடந்து விடுவதில்லை. ஒரு புல்கூட கூட்டு முயற்சியால் தான் முளைக்கிறது, மலர்கிறது. இப்புதினத்தை சோழ மக்களின் நாகரிகத்தை அவர்கள் வாழ்வாங்கு வாழ்ந்ததை பெருவுடையார் கோயில் கட்டிடக்கலைச் சிறப்பை கணித மேன்மையை, செல்வச் செழிப்பை வெளிக்கொணர்ந்த என் அரசர் சோழமாமன்னர் சக்கரவர்த்தி உடையார் ஸ்ரீ இராஜராஜன் அவர்கள் பாதங்களில் வைத்துப் பணிகிறேன்.
தஞ்சைப் பெரிய கோவில் பராமரிப்பை மத்தியத் தொல்லியல்துறை சிறப்புறச் செய்து வருகிறது. பல்தொல்லியல் ஆய்வாளர்கள் மறைந்து கிடக்கும் நம் தமிழ்நாட்டுக் கலைகளை வெளிக் கொணர்வதில் முழு ஈடுபாட்டுடனும் உற்சாகத்துடனும் ஈடுபட்டிருப்பதைக் காணமுடிந்தது.
தஞ்சைப் பெரிய கோவில் பற்றிய முழு விவரங்களையும் தன் விரல் நுனியில் வைத்திருப்பவர் குடவாயில் பாலசுப்ரமணியம் அவர்கள். நாயக்கர் காலத்தில் மறைந்திருந்த ஓவியங்களை வெளிக்கொண்டுவந்து அவைகளை மக்கள் கண்டு மகிழ் வேண்டும் என்பதற்காக அந்த ஓவியங்களில் தங்கள் காமிராவின் மூலம் செப்பிடு வித்தைகள் செய்து அவற்றை மூல ஓவியங்களின் அழகு கெடாமல் தஞ்சை காலரியில் பார்வைக்கு வைத்திருக்கிறார்கள். ராஜராஜனது சிற்பம் ஒன்று அஹமதாபாத் அருங்காட்சியகத்தில் இருப்பதைக் கண்டு அதனை தமிழ்நாட்டிற்குக் கொண்டுவர முழு முயற்சி எடுத்திருக்கிறார்கள்.
செம்மொழி மாநாடு சிறப்புற நடந்தேறியதைப்போல் ராஜராஜேஸ்வரத்தின் ஆயிரம் ஆண்டு நிறைவு விழாவையும் நடத்த அரசு முழு மூச்சுடன் செயல்பட்டு வருகிறது. ராஜராஜன் காலத்து நாட்டிய மகளிருக்குக் அஞ்சலி செலுத்துவதுபோல பத்மா சுப்பிரமணியத்தின் முயற்சியில் ஆயிரம் நாட்டிய மங்கையர் நந்தி மண்டபத்திற்கு முன்னால் நடனமாட, ஆயிரம் பேர் தேவாரம் ஓத, கண்கொள்ளாக் காட்சியாக நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றன.
இது நாம் ராஜராஜனுக்குச் செலுத்தும் பொருத்தமான அஞ்சலியாக இருப்பதோடு நம் தமிழர்களின் பழம் பெருமையை உலகுக்குப் படம் பிடித்துக்காட்டும் ஒரு பெரிய நிகழ்வாகவும் இருக்கும்.
தொடர்ந்து வரும் கட்டுரைகளில் ராஜராஜனின் புகழையும் கோவில் பெருமைகளையும் காணலாம்.
“