இந்தியாவின் முதல் ரயில்வே பட்ஜெட் நவம்பர் 1947ல் அப்போது நிதி அமைச்சராக இருந்த ஜான் மத்தாய் அவர்களால் சமர்ப்பிக்கபட்டது.
ரயில்வே பட்ஜெட் சமர்ப்பிக்கப்படும்போது என்னைப் போன்ற பாமரர்கள்எதிர்பார்ப்பது பயணக் கட்டணம் உயர்த்தப் பட்டிருக்கிறதா என்பதுதான்! அது இல்லையென்றால் ஒரு மகிழ்ச்சிப் பெருமூச்சு விடுவார்கள்.
அந்த மகிழ்ச்சிதான் மம்தா அக்கா (தீதீ) பிப்ரவரி 24ந்தேதி அளித்த பட்ஜெட்டில் பயணக் கட்டணம் எதுவும் உயரவில்லை என்றதும் ஏற்பட்டது. சரக்குக் கட்டணமும் உயராது என்பது வணிகர்களுக்கும் ஹி-ஹி-ஹி! ஏ.சி சேவைக்கான கட்டணத்தில் ரூ.20 குறைவு என்பது நிம்மதியான தூக்கத்தை தரக்கூடிய செய்தி!
தமிழ்நாட்டிற்கு 14 புதிய ரயில் சேவைகள் துவக்கப்படும் என்பது (சில எதிர்க்கட்சிகள் கேட்டுக் கொண்டதும் இதில் அடக்கம்) கூடுதல் சந்தோஷம். உணவு தானியங்கள், கெரசின், உரங்கள் ஆகியவற்றுக்கு ரூ.100 சரக்குக் கட்டணச் சலுகை என்பது ஆஹா போட வைக்கிறது!
கடந்த ஆண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட 120 புதிய ரயில்களில் 117 ரயில்கள் இயக்கப்பட்டு விட்டனவாமே!
இந்த வருடம் புதிய ரயில் பாதைகளுக்கு அதிகமாக ரூ 4411 கோடி ஒதுக்கப்பட்டிருக்கிறது! அந்தமான் – நிகோபார் இடையே புதிய ரயில் பாதையும் உருவாகிறது.
ரயில்வே துறை தனியார் மயமாக்கப்படாது; ரயில்வே ஊழியர்கள் (சுமார் 14 லட்சம்) அனைவருக்கும் அடுத்த பத்தாண்டுகளுக்குள் வீட்டு வசதிகள் அமைத்துக் கொடுக்கப்படும் என்பன போன்றவை ரயில்வே ஊழியர்களுக்கு புன்னகை தரக் கூடிய செய்திகள்.
சென்னை ரயில்வே தொழிற்சாலை நவீன மயமாக்கப்படும். ஆளில்லா ரயில் க்ராஸிங்குகளில் ஏற்படும் விபத்துகளைத் தவிர்க்க 13,000 ஆளில்லா ரயில் க்ராசிங்குகளில் ஆட்கள் நியமிக்கப்படுவார்கள். உடனடியாக 4,000 ஊழியர்கள் பணியமர்த்தப்படுவார்கள் என்பன போன்றவை இனிப்பான செய்திகள்.
மருத்துவமனைகள், பல்கலைக் கழகங்கள், நீதிமன்றம், கிராமப் பஞ்சாயத்துக்கள் போன்றவற்றில் ஈ-டிக்கெட் மையங்கள் அமைக்கப்படும். (மருத்துவமனைகளில் இனி சென்று "டிக்கெட் கிடைக்குமா?" என்று கேட்டால் தவறாக எடுத்துக் கொள்ளக் கூடாது!!)
புற்று நோயால் பாதிக்கப் பட்டுள்ள நோயாளிகளுக்கு மூன்றடுக்கு குளிர் வசதிப் பெட்டியில் இலவசப் பயணம், பெண்களுக்காகவே (லேடீஸ் ஸ்பெஷல்) மேலும் ஆறு மாத்ரு பூமி ரயில்கள், பெண்களுக்காக தனி மகளிர் பாதுகாப்புப் படை போன்றவை பொது மக்களைக் கவரும் வகையிலான மம்தா பானர்ஜீயின் அறிவிப்புகள்.
ரயில்வே தேர்வுகளை பிராந்திய மொழிகளிலேயே எழுதலாமென்பது வேலை வாய்ப்புகளைத் தேடுகின்ற இளைஞர்களுக்கு ஒரு இனிய சேதிதான்!
பாரத் தீர்த் என்ற புதிய ரயில் சேவை பாரதத்தின் பல சுற்றுலா – வழிபாட்டு நகரங்ளையும் இணைக்கின்ற வகையில் இயங்கும்.
இத்தனை சலுகைகளுக்கும் பின்னால் ரயில்வே 2010 – 2011க்கான நிகர லாப எதிர்பார்ப்பு 1348 கோடி!
இந்த ரயில் பட்ஜெட்டில் கவர்ச்சித் திட்டங்கள் அதிகம் என்பது போன்ற விமரிசனங்கள் சரியானதுதான் என்றாலும், மக்களின் வாக்குகளை நம்பி இருக்கின்ற எந்த ஆட்சியிலும் நிகழக் கூடிய தவிர்க்க முடியாத நிர்ப்பந்தங்கள்தாம்!
கொசுறு சேதி : தமிழ்நாட்டின் புதிய ரயில்களை அறிவிக்கையில் ரயில் நிலையங்களின் பெயரைச் சொல்லும்போது மம்தா தடுமாறினார். தமிழ்நாட்டு உறுப்பினர்களிடமிருந்து அவ்வப்போது சப்தம் எழுந்தபோது, ‘வணக்கம் வணக்கம்’ என்று (ஸாரி என்பதற்குப் பதிலாக) சொல்லிக் கொண்டு இருந்தார். எதிர்க்கட்சிகள் சிலர் இடைவிடாது குரல் எழுப்பியபோது, ‘சுப்’ (chup) – அதாவது "சப்தம் போடாதீர்கள்" என்று ஒரு டீச்சர் போல அதட்டும் தொனியில் கூறினார்.