"பதிமூன்றாம் நம்பர் வீடு" என்று எண்பதுகளில் ஒரு பேய் படம் வந்தது நினைவிருக்கிறதா? அதை நினைவூட்டும் விதத்தில், மாதவனின் அடுத்த திரைப்படம் "யாவரும் நலம்" வருகிறது. விக்ரம் கே.குமார் இந்த திரைப்படத்தை தமிழிலும் ஹிந்தியிலும் ஒரே சமயத்தில் இயக்க, பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்கிறார். ஹிந்தியில் படத்தின் பெயர் 13B. நீது சந்த்ரா, இரு மொழிகளிலும் கதாநாயகியாக நடிக்கின்றார். ஹிந்தியில் முத்திரை பதித்து விட்ட ஷங்கர்-எஹ்ஸான்-லாய் குழுவினர், மீண்டும் தமிழில் இசையமைக்க வருகின்றனர்; இப்படத்திற்கு ஒன்பது பாடல்களையும் தந்துள்ளனர். உண்மையைச் சொல்லப் போனால், ஐந்து பாடல்கள் தான்; மற்றவை எல்லாம் ரீமிக்ஸ் வகையறா. கவிஞர் தாமரை எல்லாவற்றையும் எழுதியுள்ளார்.
யாவரும் நலம்
நினைவில் நிற்கும் அழகான, மிகச் சிறிய பாடல். டைட்டிலின் போது வரவேண்டும் என்று நினைக்கத் தோன்றுகிறது. திகில் படத்திற்கு இப்படி ஒரு டைட்டில் பாடலா! நல்ல கிடாரிங், ஆர்கன் இசையும் கூட! ஷங்கர் மஹாதேவனின் குரலும் கனகச்சிதம்.
சின்னக் குயில் கூவும்
இந்தப் பாடல் இயற்கையைப் போற்றுகின்றது; ஒவ்வொரு காலையும் புதிதாய் பிறக்கின்றோம் என்று சொல்லிக் கொண்டே ஆரம்பிக்கிறது. சீக்கிரம் குழுவினரும் சேர்ந்து கொள்கின்றனர். நல்ல மெலடி. பாடகர் கார்த்திக்கின் குரல் பாடலுக்கு நன்றாக பொருந்துகிறது. ஒரே சரணத்துடன் பாடல் முடிந்துவிடுகிறது.
காற்றிலே வாசமே
ஷங்கர் மஹாதேவன், சின்னக்குயில் சித்ரா இணைந்து பாடும் காதல் டூயட். ஹப்பா! எத்தனை இனிமை சித்ராவின் குரலில்! காரணம் இல்லாமலா சின்னக்குயில் என்று சொல்கின்றார்கள்!! நல்ல பல்லவி – "நந்தா என் நிலா" விற்குப் பிறகு இத்தனை நீள பல்லவி! இந்த பாட்டிலும் ஒரு சரணம்தான். இருந்தும் மனதில் நிற்கின்றது. உடன் வரும் வாத்தியங்களும் பாடலுக்கு பக்க பலம் சேர்க்கின்றன. அற்புதமான மெலடி.
என்ன நடை என்ன உடை
ரொம்பவும் வித்தியாசமான பாடல். கவர்ச்சிகரமான பாடலாக இருந்தாலும் எங்கும் முகம் சுழிக்க வைக்கவில்லை. ஜேஸி கிஃப்ட், அனுராதா ஸ்ரீராம் இருவரும் ஒரு கலக்கு கலக்கியிருக்கின்றனர். லாய் மெண்டோன்ஸா என்பவரும் உடன் பாடியுள்ளார். இந்த பாட்டிலும் ஒரே பல்லவிதான்.
யாவரும் நலம் (ரீமிக்ஸ்)
முன்பு கேட்ட பாடலில் இன்னும் கொஞ்சம் சத்தமான பீட்ஸை சேர்த்துக் கொள்ளுங்கள். ஆங்காங்கே குல்ராஜ் சிங் ரீமிக்ஸிற்காக உபயோகப்படுத்தப் பட்டிருக்கின்றார். ஒரே ஒரு மாற்றம் – இந்த பாடல் சீக்கிரம் முடியவில்லை, கிட்டத்தட்ட நான்கு நிமிடங்களுக்குச் செல்கின்றது.
சின்னக்குயில் கூவும் (ரீமிக்ஸ்)
இம்முறை ரீமிக்ஸில் உதவியது டி.ஜே.ஷேன். ஆங்காங்கே மட்டும்தான் பீட்ஸின் ஆதிக்கம். ரீமிக்ஸும் கேட்க நன்றாகவே உள்ளது.
காற்றிலே வாசமே (ரீமிக்ஸ்)
இன்னும் ஒரு ரீமிக்ஸ். வழக்கம் போல் கொஞ்சம் பீட்ஸ் – கொஞ்சம் குல்ராஜ் சிங்கின் எதிரொலிக்கும் குரல். அவ்வப்பொழுது சித்ராவின் குரல் பீட்ஸில் ஒளிந்துகொண்டு விடுவதுபோலத் தெரிகிறது. மற்றபடி பெரிய மாற்றம் இல்லை. பாடல் முடியும் பொழுதில் என்னவெல்லாமோ எக்ஸ்ட்ராவாக சேர்த்திருக்கின்றார்கள். பரவாயில்லை, இந்த ரீமிக்ஸும் நன்றாகத்தான் உள்ளது.
என்ன நடை என்ன உடை (ரீமிக்ஸ்)
இந்த பாட்டில் ரீமிக்ஸ் செய்ய என்ன உள்ளது? ஏற்கனவே ரீமிக்ஸ் போலத்தானே உள்ளது! என்ன செய்ய முடியும் – இன்னும் எக்கச்சக்கமான வாத்தியங்களை சேர்த்திருக்கின்றனர். டி.ஜே.ஷேன் ரீமிக்ஸில் உதவியுள்ளார். நடுவில் ஆங்கிலத்தில் பேச்செல்லாம் கேட்கின்றது. அத்தனைக்கும் நடுவில் அனுராதாவின் குரல் குழைந்தோடுவது அழகாகவே உள்ளது. பரவாயில்லை, இதுவும் தேறும்.
யாவரும் நலம் (தீம் ம்யூஸிக்)
இதற்கு முன்பு வந்த பாடல்களைக் கேட்டால் இது திகில் திரைப்படம் என்று நம்ப முடியவில்லை. ஆனால், வரிகளே இல்லாத இந்த ஒரே தீம் ம்யூசிக் அந்த உணர்வைத் தருகின்றது. புல்லாங்குழல், வயலின், கீபோர்டுடன் ஆகியவற்றை இணைத்து பயமுறுத்த முயற்சி செய்திருக்கிறார்கள். கூடவே சில குரல்களும் கேட்கின்றன. டபி, பரிக் என்பவர்கள் இந்த பாட்டின் இசையில் உதவியிருக்கின்றார்கள்.
வெகு நாட்களுக்குப் பிறகு தமிழ் இசை உலகிற்கு வந்த ஷங்கர் – எஹ்ஸான் – லாய் குழுவினரை வரவேற்போம். வடக்கே நல்ல பாடல்களை தந்தது போல நமக்கும் சுவை நிறைந்த கானங்களை அள்ளித் தரட்டும். ஒரே ஒரு விஷயம் மட்டும்தான் கொஞ்சம் கசக்கின்றது – இசைத்தட்டை நிரப்புவதற்காக ஒவ்வொரு பாடலையும் ரீமிக்ஸ் செய்ய வேண்டுமா! இருந்தும், பாடல்கள் எல்லாம் நன்றாகவே உள்ளதால் – "இப்படத்தின் இசையைக் கேட்டவர்கள் யாவரும் நலம்"
“