உறக்கம் தடைபட்டுக் கண்விழித்துப் பார்த்தான் ரமணன். புன்னகையுடன் பக்கத்திலே வேணி.
”என்ன வேணி, சுகமான நித்திரையிலிருந்தனான், கலைச்சிப் போட்டீர்’ என்று செல்லமாய்க் கோபித்துக் கொண்டான்.
“துப்பாக்கிச் சத்தத்திலையும், பொம்மர்களின் இரைச்சலிலையும், ஷெல் பயத்திலையும் வடிவா உறங்கிக் கன காலமாச்சுதுதானே! இண்டைக்கித்தான் ஹெலிக்கொப்ரர் சத்தங்கூட இல்லை, வரப்பிலை கொஞ்சம் படுக்கலாமெண்டா….”
வேணி சட்டென்று எழுந்து கொண்டாள்.“அப்ப நீங்க படுங்கோ, நான் போறன்.”
“எங்கை போறீராம்?”
“அம்மாவும் அப்பாவும் இந்தியாவுக்குப் போகினம். உங்களுக்குப் பிடிக்கலையெண்டா நான் மட்டும் எதுக்கு இங்கை யாழ்ப்பாணத்திலை நிக்க வேணும்? நானும் போறன். பின்நேரம் தோணி.”
“பகிடி பண்ண வேண்டாம் வேணி. நீர் போய்ட்டீரெண்டா நான் இங்கை உயிரோடிக்கேலுமே? இந்தக் காணிக்காகவும் எண்ட வேணிக்காகவுந்தானே, நான் இன்னும் இன்னும் இலங்கையிலை நிக்கிறன்! இப்படி வாருமன்.”
எட்டி அவளுடைய கையை இவன் பிடிக்க முயல, அவள் விலகினாள்.
“ம்ம், கல்யாணத்துக்கு முந்தி என்னைத் தொடவே மாட்டேனெண்டு சொன்னதெல்லாம் மச்சானுக்கு மறந்து போச்சு போலை!”
“ஓமப்பா, சொன்னனான், ஆனா, இனியும் தாங்கேலாது. அடுத்த கிழமை நல்லூர் முருகன் கோவிலடியிலை எங்களுக்குக் கல்யாணம்.”
“அடுத்த கிழமையே? சமாதானம் வந்த பிறகுதான் கல்யாணம் எண்டு சொன்னனீங்கள்?”
“நீரும் நானும் உயிரோடிருக்கிற காலத்திலை சமாதானம் வராது போலைத் தெரியுது வேணி. கல்யாணம் முடிஞ்சு ரெண்டு பேரும் ஒருக்கா கதிர்காமம் போய் வருவம்.”
“இதென்ன விசர்க் கதை மச்சான்! இங்கை இயக்கத்துப் பொடியன்களைத் தாண்டி வெளிக்கிட்டாலும் அங்கை ஆமிக்காரனைத் தாண்டிப் போகேலுமே?”
“முருகன் மனசு வைச்சானெண்டா ஏலும். மாலையும் கழுத்துமாய்க் கதிர் காமத்திலை போய் நிண்டு, எங்கட நாட்டுக்கு சமாதானமும், நிம்மதியும் குடு ஆண்டவா எண்டு நீரும் நானும் வேண்டினாத்தான் இந்த நாட்டுக்கு விமோசனம் கிடைக்கும் போலைக் கிடக்குது. அங்கை என்ன பாக்குறீர் வேணி?, நான் உம்மிட்ட தான் கதைக்கிறன்.”
“உது என்ன மச்சான், வடக்காலை ஒரு சத்தம்!”
வேணி சுட்டிக் காட்டிய திக்கில் ரமணன் கவனம் செலுத்தினான். பிறகு, தீவிரமடைந்து வேகமாய் அவளுடைய கையைப் பற்றினான்.
‘மச்சான் என்ன இது, கல்யாணத்துக்கு முந்தி….!’ என்று ஆட்சேபித்த வேணியை இழுத்து இறுக்கமாய் அணைத்துப் பிடித்தான்.
“பொம்மர் ஒண்டு வருகுது வேணி, என்னைக் கெட்டியாய்ப் பிடிச்சிக் கொள்ளும்.”
பொம்மர் நெருங்கி வந்தது. ஒருவரோடொருவர் பின்னியபடி ரெண்டு பேரும் வரப்பிலிருந்து வயலுக்குள் உருண்டார்கள்.
தாழப்பறந்து வந்த பொம்மர், சில குண்டுகளை அனாயாசமாய்த் தூவிச் சென்றது. கண் மூடித் திறப்பதற்குள் காணி கருகி உருக்குலைந்து போனது. அதோடு, மென்மையான ஒரு காதலும்!
(ஆனந்த விகடன், தீபாவளி மலர், 2006 )