யார் மண்?

அய்யனார் புண்ணியத்தில்
அட்வான்ஸ் தொகைக்கு
பங்கமில்லாமல்
வயக்காட்டில் முளைத்திருந்த
அடுக்குமாடிக் கட்டிடத்தின்
தரைத்தளம் எனதாகியிருந்தது.

புதுமனைப் புகுவிழாவில்
பால் காய்ச்சி பொங்கலிட்டு
ஒரு படி நெல்லோடு
உப்பு மஞ்சள் வைத்து
அய்யனாரை அழைத்ததில்
படி நெல்லின் மீது
அமர்ந்திருக்கிறது
வெட்டுக்கிளியொன்று
மண்ணிற்குச் சொந்தமெனும்
தோரணையில்.

மண்ணை சதாத் தின்று
மண்ணின் இறுக்கம் போக்கும்
ஆயிரமாயிரத்தாண்டு
பழக்கத்தை திருத்தியமைத்தன
மண் புழுக்கள்.
கிளிகள் ஜோசியம் சொல்லவும்
குரங்குகள் வித்தை புரியவும்
பாம்புகள் நடனம் புரியவும்
நரிகள் தாயத்து விற்கவும்
கற்றுக் கொண்டது போல
மண்ணை இறுக்கக்
கற்றுக்கொண்டன – அதன்
பேரக் குழந்தைகள்
பிழைக்கக் கூடும்!

About The Author