மேளா (1)

தலைமுறைப் பாவம் என்றெல்லாம் ஜோசியர்கள் சொன்னதைக் கேட்டு கோவில் குளம் என்று ஏறியிறங்கினார்கள். என்ன இம்சை என்றால் எல்லா இடத்துக்கும் அவனையும் கூட்டிக்கொண்டு போய்வர வேண்டியிருந்தது. விஞ்ஞானத்துக்கும் ஆன்மிகத்துக்குமான பெரும் ஊசலாட்டமாய் இருந்தது வாழ்க்கை.

நல்லா சிரிக்கச் சிரிக்கப் பேசுகிறவன். காதல் கல்யாணம்தான். அவன் பெண்டாட்டி நல்ல அழகு. சிரிக்கும்போது வாயோடு கண்ணே சிரிக்கும். கிறுகிறுப்பாய் இருக்கும். பஸ்சில் ஓர ஜன்னல் என்று கேட்டு வாங்கிக் கொண்டாள் சௌதாமினி. வேடிக்கை பார்க்க அவளுக்குப் பிடிக்கும். விபத்து. ஊரே ஜனங்களே வேடிக்கை பார்த்தது. அவனுக்குத் தெரியாது. பக்கத்தில் மயங்கிக் கிடந்தான். அவனுக்கும் தலையில் அடி.

கடல் பார்க்க அப்படியே உட்கார்ந்திருந்தான். ஓ..ஓவென்று கடலின் பேச்சு. வார்த்தைகளை விட ஒலிகள், ஒலிக்குறிப்புகள் சிலாக்கியம். சொற்கள் அல்ல, சமிக்ஞைகளின் நேர்மை நல்ல விஷயம்.

சித்தம் போக்கு, சிவம் போக்கு… அவனை வற்புறுத்த முடியாது. ரொம்ப அழுத்தி அவன் கையைப் பிடித்து இழுத்தால் பளார். பல் பூகம்பம் கண்டு விடும். உள்ளுக்குள் பெரும் பிறழ்வுகள். கடல் பொங்கி நெஞ்சில் முட்டிமோதி நுரைத்துக் கொண்டிருக்கிறாப் போல. மூச்சுத் திணறத் திணற ஆவேசப் படுவான். ம்… ஹ்ரும்.. என உருமல்கள்.

சட்டென்று வயித்து வலிக்காரனாட்டம் படுத்துக் கொள்வதும் திரும்ப உடல் நடுங்க எழுந்து கொள்வதுமாய்த் திணறுவான். ரொம்ப முடியாமல் போனால் மருத்துவரை வரவழைத்து ஊசி போட்டுத் தூங்க வைப்பார்கள். அப்பாவுக்கே ஊசி போடப் பழகி விட்டது.

ஒருமுறை ஊசி போட அவனைப் பிடித்துக்கொள்ள சரியான ஆள் கிடைக்காமல், சட்டென எட்டி முகத்தில் அவன் விட்ட அறை மறக்க முடியாதது. அவன்கிட்டத்தில் போனாலே அந்த ஞாபகம் அவருக்கு வந்து விடுகிறது.

மருத்துவர் அறை வாசல். இதில் யார் நோயாளி, யார் கூட வந்தது என்று தனக்குத் தானே யூகித்துக் கொண்டு சுவாரஸ்யமாக எல்லாரும் காத்திருந்தார்கள். ஒருத்தனுக்கு மத்தவன் வேடிக்கை. இந்தப் பைத்தியத்துக்கு அந்தப் பைத்தியம் சிரிப்பு.

சிலாள் உள்ளே போய் ஜம்மென்று உட்கார்ந்து கொண்டு, ”எங்க அய்யாவுக்கு என்னவோ ஆயிட்டது டாக்டர். வெறி பிடிச்சாப்ல கத்தறாரு…” என்று பேப்பர்வெய்ட்டை உருட்டியபடியே ஆரம்பிக்கும்.

எல்லாத்தையும் பொறுமையாய்க் கேட்டுக்கொண்டு ”ஈஸ்வரோ ரட்சது…” என்று விபூதி தரும் சாமிகள். ”சுத்தமான பசும் பாலால ஆத்ல சிவலிங்கத்துக்கு அபிஷேகம் பண்ணுங்கோ” என்று புன்னகைத்தபடியே சாமிகள் ஒரு ஆப்பிளை எடுத்து அவனிடம் கொடுத்தார். விகல்பமில்லாமல் வாங்கி அங்கேயே கடித்துச் சாப்பிட ஆரம்பித்தான். இன்னொண்ணு கொடுத்தாலும் அவனுக்கு மறுப்பு இல்லை.

நிம்ஹன்ஸ் முதல் இந்தியாவின் மனநல மருத்துவமனைகளில் அனைவருக்கும் அவனைத் தெரியும். வேப்பிலை அடிக்கிறது, மை போட்டுப் பார்க்கிறது, மலையாள மாந்திரிகம், குத்தாலக் குளியல்… இப்படி நாட்டில் இத்தனை தினுசுகள் இருக்கின்றன என்பதே மலைப்பாய் இருக்கிறது. அத்தனைக்கும் இங்கே நல்ல மகசூல். இன்னும் ஆண்மைக்குறைவு, மூலம், பௌத்திரம்… என்றெல்லாம் பிளாட்பார லேகியங்களே படுபோடு போடுகின்றன.

அமாவாசை பௌர்ணமி என்றால் கடல் பொங்கும் தினங்களில் மனம் பொங்கப் பொங்க நடமாடினான். கண்ணெல்லாம் பளபளவென்று உணர்ச்சி மினுங்கித் தளும்பும். பயமாய் இருக்கும் பார்க்கவே. சோறு கொண்டுவந்து வைத்தால் ஒற்ற எத்து ஸ்வைங்கென்று வானத்துக்குப் பறக்கும் தட்டு. சில சமயம் அவனே கொண்டா கொண்டா என்று சாப்பிடுவான். உடம்பு முறுகி அத்தனை வலு சேர்ந்திருந்தது. தென்னைமட்டை மாதிரி கிண்ணித்துப் பளபளக்கும் மார்பு. வேலை என்று கிடையாது. பேச்சே கிடையாது. பட்டுப்புடவைகளை பீரோவில் வைத்துப் பூட்டினாற் போல அவன் உள்ளே கிடந்தன வார்த்தைகள். கிணற்றுக்குள் விழுந்த வாளியை முள்ளுக் கரண்டி வைத்து எடுக்கிறாப்போல அவனை யாராலாவது மீட்க முடியுமா?

அவனையிட்டு அழுகையெல்லாம் போச்சு. அவன் தூங்கினால்கூட எழுந்து என்ன கலாட்டா பண்ணுவான் தெரியாது. வாசல் பார்க்க திறந்த ஜன்னலுடன் அவன் அறை. விளக்கில்லாமல் படுத்துக் கிடப்பான். போய் விளக்கைப் போட்டால் பயந்து அலறுவான். ஜன்னல் வழியே ஒரு தடவை பூனை ஒண்ணு புகுந்தது. ஊ… என வெளியே ஓடிவந்தான். சில சமயம் உள்ளே போய்ப் பார்க்க, அறை மூலையில் உட்சுருண்டு கூழைப் பாம்பாய்க் கிடப்பான்.

கோழைப் பாம்பு.

ஒண்ணு பயந்து வெலவெலத்திருப்பான். இல்லாவிட்டால் அசுர ஆவேசம். உலகில் அனைத்தையும் த்வம்சம் பண்ணுகிற வெறி. எப்படி இத்தனை கெட்ட வார்த்தைகள் அவனுக்குத் தெரிந்தது என்றே ஆச்சர்யமாய் இருந்தது. அந்நேரங்களில் அவனை அறைக்குள் வைத்துப் பூட்டி விடுவார்கள். அந்த ஜன்னல் கம்பிகளை அப்படியே பிடித்து ஆட்டு ஆட்டென்று ஆத்திரம் தீர பிடுங்க முயன்று கொண்டிருப்பான். அறைக்குள் கண்ணாடி ஒண்ணை உடைக்கப் போக கையில் ரத்தம் பார்த்து பயந்து ஊளையிட்டு அலறி மயங்கி விழுந்தான்.

(தொடரும்)

About The Author