மேற்கு ஆஸ்திரேலியாவின் சுற்றுலாத் தலங்கள் (7)

பவள விரிகுடா

நாம் இந்தத் தொடரின் இரண்டாம் வாரத்தில் பார்த்த, இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள நிங்கலூ ரீஃப்பில் காணப்படும் பவள விரிகுடா ஆஸ்திரேலியாவின் பவளப் பாறைகளில் முதன்மையானது. மேற்கு ஆஸ்திரேலியாவின் 120 கிலோமீட்டர் தென் பகுதியில் பகுதியில் இது அமைந்துள்ளது.

இங்கு கடற்கரையின் நீர்மட்டத்தின் மீதே பவளங்களும், மீன்களும் மிதந்து வரும் அற்புதக் காட்சியைப் படகில் சென்று கண்டு களிக்கலாம். இங்கு மிதமான தட்பவெப்பம் நிலவுவதாலும், இங்கு ஒரு தங்கும் விடுதியும் 20 வீடுகளும் இருப்பதனாலும் உலகின் எல்லாப் பகுதிகளிலிருந்தும் பயணிகள் வந்து தங்கி, இந்த எளிமையான வாழ்வை ரசிக்கிறார்கள். இங்கு மீனவர்கள் ஆழ்கடல் நீச்சலுக்குண்டான கவச உடைகளுடன் ஸ்நோர்கெலிங் (Snorkeling), ஸ்கூபா (Scuba), ஸ்னூபா (Snuba) ஆகிய நவீன முறைகளில் நேரடியாக மீன் பிடிக்கின்றனர். இதனால் பிரம்மாண்டமான திமிங்கலங்களும், 14 மீட்டருக்கு மேல் நீளமுள்ள பெரிய மீன்களும் இங்கு கிடைக்கின்றன. இங்கு ஜூன் முதல் அக்டோபர் வரை பெரிய சுறா மீன்களும் வருவதுண்டு. பெரிய ஆமைகளையும் காணலாம்.

டார்வின்
ஆஸ்திரேலியாவின் வெகு நாகரிக நகரம்

ஆஸ்திரேலியாவின் மிகவும் நவீனமான நகரம் டார்வின். இது, மிதமான தட்பவெப்பத்துடன் கூடிய அழகான துறைமுக நகரமாகத் திகழ்கிறது. மக்களின் உல்லாச வாழ்க்கைக்குத் தேவையான இரவு விடுதிகள், திரை அரங்குகள், சூதாட்ட விடுதிகள், பிரம்மாண்டமான வணிக வளாகங்கள், பல்வேறு பண்பாடுகளைச் சேர்ந்த மக்களுக்கான பல்பண்பாட்டு அங்காடிகள் (multicultural markets) என எல்லாமும் கொண்ட முதன்மையான சுற்றுலாத்தலமாக டார்வின் அமைந்துள்ளது. நூறாண்டுகளுக்கும் மேலாக ஆஸ்திரேலியாவின் வடக்கு நுழைவாயிலாக இருந்த டார்வின் இன்று ஆசியாவின் நுழைவாயிலாக ஆகிவிட்டது. "பீகிள்" மேலதிகாரியாக இருந்த ஜான் ஸ்டோக்ஸ் (John Lort Stokes) என்பவர் 1839ஆம் ஆண்டு, செப்டம்பர் 9ஆம் தேதி தன் பழைய நண்பரின் நினைவாக இத்துறைமுகத்துக்கு இந்தப் பெயரைச் சூட்டினார்.

Darvin

டிரேசி புயலால் சிதைப்பட்ட பால்மெர்ஸ்டன் நகர வளாகம்


இந்த அழகிய நகரத்தை 1974ஆம் ஆண்டு, டிசம்பர் 25ஆம் தேதி "ட்ரேசி" புயல் தாக்கியதில் 71 பேர் இறந்தனர். கணக்கற்றோர் பலத்த காயமடைந்தனர். நகரின் 70% பகுதி இதனால் பெரும் சேதமடைந்தது. இதனால் நகரிலிருந்த 43,000 பேரில் 30,000 பேர் வான் வழிப் பயணம் மூலம் தாம் வசித்த பிரதேசத்தை விட்டுச் செல்ல நேர்ந்தது. இதுதான் ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய வான்வழி வெளியேற்றம் எனச் சொல்லப்படுகிறது. அதன் பிறகு, "டார்வின் மறுசீரமைப்புக் குழு" அமைக்கப்பட்டு, தரைமட்டமான அந்த நகரம் மீண்டும் புத்துயிர் பெற்ற பீனிக்ஸ் பறவையாக உயிர்த்தெழுந்தது. அகலமான பாதைகள், பிரம்மாண்டமான கட்டடங்கள், நவீன பூங்காக்களுடன் வந்தோரை வாழ வைக்கும் அழகுத் துறைமுக நகரமாகத் திகழ்கிறது.

படம்: நன்றி – Wikipedia.

About The Author