புரூம் (Broome)
மேற்கு ஆஸ்திரேலியாவில் காண வேண்டிய மற்றொன்று, இந்தியப் பெருங்கடலின் நீல நிறக் கடல் நீருக்கும் வெண்ணிற மணற்குவியலுக்குமிடையே, கிம்பர்லிக் காடுகளின் நடுவே, செந்நிறப் பசும் புல்வெளிகளுக்கிடையில் அமைந்துள்ள பாலைவனச்சோலையான "புரூம்".
மேற்கு ஆஸ்திரேலியாவின் ரகசிய நுழைவாயிலாகத் திகழும் இந்தியப் பெருங்கடலில் அமைந்திருக்கிறது வண்ண வண்ண நிறங்களுடன் கூடிய வனப் பகுதியான "புரூம்". கரடு முரடான சிகப்பு மணற்குன்றுகளும், கேபிள் கடற்கரையில் காணப்படும் வெண்ணிற மணற் பகுதிக்கும் இடையே பாலைவனச்சோலையான புரூம் கண்களையும், உள்ளத்தையும் கொள்ளை கொள்வதில் வியப்பில்லை.
1880ஆம் ஆண்டில், புரூம் மாபெரும் முத்துக் குளித்துறையாகத் திகழ்ந்தது. ஐரோப்பியர்கள், மலேயர்கள், சீனர்கள், ஜப்பானியர்கள், ஆஸ்திரேலியப் பழங்குடிகள் போன்ற பல நாட்டினரும் இதனால் பயனடைந்தனர். இங்கு எடுக்கப்படும் முத்துக்கள் "தென்கடல் முத்துக்கள்" (South Sea Pearls) எனும் பெயரால் உலகத்திலேயே தரமான முத்துக்களாக அறியப்படுவதால் ஆஸ்திரேலியாவுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள், பயணத்தின் தொடக்கத்திலோ முடிவிலோ இங்கு வரத் தவறுவதில்லை.
கல்பாரி தேசியப் பூங்கா
மர்ச்சிசான் நதியின் முகத்துவாரத்தில் 1,83,004 ஹெக்டேர் நிலப்பரப்பில் அமைந்துள்ள "கல்பாரி தேசியப் பூங்கா"வில் சுற்றுலாப் பயணிகள் இயற்கையின் பல்வேறு அற்புதங்களைப் பார்க்கலாம். கடற்கரையில் 80 கிலோமீட்டர் நீளத்தில் அமைந்துள்ள ஆழமான நதிகளும், சின்னஞ்சிறு குன்றுகளும், அவற்றைச் சுற்றிப் பூத்துக் குலுங்கும் மலர்ச் செடிகளும் அந்தப் பகுதியின் பண்பாட்டு வரலாற்றைப் பறைசாற்றுகின்றன. இம்மாறுபாடுகள் பல லட்சக்கணக்கான ஆண்டுகளில் ஏற்பட்டவையாகும். இவற்றுள் வண்ணப் படிமங்கள் சில, 400 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தியவை.
இங்குள்ள தும்பலகூடா மணற்கற் (Tumblagooda sandstone) குவியல்கள் பூகம்பங்களால் உருவானவை. கடல் மட்டத்துக்கு 100 மீட்டருக்கு மேல் எழும்பியுள்ள வண்ணச் சுண்ணாம்புக் கல் குன்றுகளும் பார்க்க வேண்டியவை. இவற்றுள் நாய்க்குடைப் பாறை (Mushroom Rock), வானவில் பள்ளத்தாக்கு (Rainbow Valley), பானை நடைபாதை (Pot Alley), பருந்து இடுக்கு (Eagle Gorge) ஆகியவை குறிப்பிடத்தக்கவை.
ஜூலை மாத இறுதியில் பூக்கத் தொடங்கும் வண்ண வண்ணக் காட்டு மலர்கள் வேனில் காலத் தொடக்கம் வரை அழகு மலர்க் கண்காட்சியாகக் கண்சிமிட்டி அழைக்கின்றன. பொன்னிறத்திலும், ஆரஞ்சு நிறத்திலும் பூக்கும் பாங்க்சியாஸ் மலர்கள் (vivid gold and orange banksias), வெள்ளை, மஞ்சள், சிவப்பு வண்ணங்களில் மலரும் கிரேவில்லியாஸ் மலர்கள் (grevilleas in white, yellow and red), பச்சை, சிவப்பு நிறக் கங்காரு பாதப் பூக்கள் (green and red kangaroo paws), பல்வேறு வண்ணங்களில் மிளிரும் சிறகுப் பூக்கள் (featherflowers in many coloured shades), புகைப்புதர்ப் பூக்கள் (smokebush), நட்சத்திரப் பூக்கள் (starflowers) போன்றவையும் மற்றும் பல பூக்களும் இதில் அடங்கும். இங்கு மலரும் கல்பாரிப் பூனைப்பாதப் பூக்கள் (Kalbarri catspaw), கல்பாரிச் சிலந்தி ஆர்க்கிட் பூக்கள் (Kalbarri spider orchid), மர்ச்சிசான் சுத்தி ஆர்க்கிட் பூக்கள் (Murchison hammer orchid) ஆகிய கொத்து மலர் வகைகள் உலகிலேயே இங்கு மட்டுமே காணக்கூடியவையாகும்.
இவை மட்டுமின்றி, மேலைச் சாம்பல் கங்காரு (western grey kangaroos), ஈமு கோழிகள் போன்ற பல வகை விலங்குகளும், பறவைகளும் இங்கு வாழ்கின்றன. வேறு சில அபூர்வப் பறவைகளும் இங்கு சில சமயங்களில் காட்சியளிக்கின்றன. சுற்றுலாப் பயணிகள் தவறவிடக் கூடாத பகுதி!