பின்னகில்ஸ் பாலைவனம்
அழகான கடற்கரைகளும், நிழல் தரும் ட்வார்ட் மரங்களும், மலர்ச் செடிகளும் கொண்ட நாம்பர்க் தேசியப் பூங்காவின் ஒரு பகுதியில் அமைந்திருப்பது ‘பின்னகில்ஸ் பாலைவனம்’!
மெல்லிய, கூரான கோபுர வடிவத்துக்கு ஆங்கிலத்தில் ‘பின்னகில்’ (pinnacle) எனப் பெயர். இங்கே, சுண்ணாம்புக் கற்களாலான அப்படிப்பட்ட கோபுர வடிவத் தூண்கள் ஆங்காங்கே பாலைவனத்தின் மஞ்சள் நிற மணல் குவியலிலிருந்து ஆயிரக்கணக்கில் எழும்பி நின்று விஞ்ஞான மர்ம நாவலைப் போன்றதொரு வசீகரத்தை அந்த நிலப்பரப்பிற்கு அளிக்கின்றன.
பெர்த்திலிருந்து இந்தப் பூங்காவிற்கு ஒருநாள் பயணம் மட்டுமே. 1658ஆம் ஆண்டு டச்சு வரைபடத்தில் வடதெற்கு ஹம்மாக்சின் (Hummocks) வரைபடங்கள் பற்றிய குறிப்புகள் வெளிவந்தபொழுது நாம்பர்க் பற்றிய தகவலையும் நாம் அறிய முடிந்தது. இதைப் பற்றி 1820ஆம் ஆண்டில் மாலுமி பீட்டர் கிங்கின் தகவல் களஞ்சியத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளது. நாம்பர்க் என்னும் பெயர் ‘வக்ரம்’ என்னும் பொருள் கொண்ட நதியுடைய பெயரின் அடிப்படையில் இந்தப் பூங்காவிற்குச் சூட்டப்பட்டது.
இந்தப் பாலைவனத்தில் சிப்பிகள் உடைந்து மணல் குவியலுடன் கலந்து பின்னகில்சாக உருவெடுத்தன. இவற்றில் மிகவும் பழமையானது மஞ்சள் மணல் துகளும், செம்மணலும் கலந்த ஸ்பியர்வுட் எனப்படும் ஈட்டிமர மணற்குன்றுகள். குளிர், மழைக்காலங்களில் சில வகை அமிலங்களின் சேர்க்கை மணலில் கலந்து, வேனிற்காலத்தில் உலர்ந்து மணலுடன் இறுகி கடினமான சுண்ணாம்புப் பாறைகளாக உருவெடுத்திருக்கின்றன. அதே சமயத்தில், செடி கொடிகள் வளர்ந்து, வேர்கள் மணலுக்குள் இறங்கி இலை, தழைகள் மக்கிய உரத்துடன் மணலும் கலந்து நிலநடுக்கங்களாலும் மாறுதல்கள் அடைந்து இந்தப் பின்னகில்ஸ் உருவாயின.
பழங்குடிகளுக்கு, 6000 ஆண்டுகளுக்கு முன்னரே இந்தப் பாலைவனத்தைப் பற்றித் தெரியுமென்றாலும் தெற்கு நோக்கி வீசிய காற்றினால் பின்னகில்கள் மூடப்பட்டு விட்டன. அதனால், சுமார் அறுநூறு ஆண்டுகளுக்கு முன்புதான் இவை மக்களால் அறியப்பட்டன. அன்றிலிருந்து சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்து வருகின்றன. ஆண்டுதோறும் ஆகஸ்ட் முதல் அக்டோபர் வரை இந்த இயற்கை அதிசயத்தைக் கண்டு களிக்க உகந்த காலகட்டம்.
Click here to view the Tourist spots of West Australia
“