நிங்கலூரீஃப்
மேற்கு ஆஸ்திரேலியாவின் நிலப்பரப்பை ஒட்டி 4000 சதுர மைல் பரப்பளவில் அமைந்துள்ள நிங்கலூரீஃப் தான் ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய பவளத்திட்டு! மிகப்பெரிய பவளப்பாறைகளுடன் கூடிய இந்தப் பகுதி முதல்தர சுற்றுலாத்தலமாகத் திகழ்வதில் வியப்பில்லை.
நிங்கலூரீஃப்பின் 260 கிலோமீட்டர் நீளமுள்ள கடற்கரையில் பிரம்மாண்டமான திமிங்கிலங்கள், ஓங்கில்கள் (dolphins), கடற்பசுக்கள் (dugongs), மந்தாக்கள்(manta rays), பெரியகாட்மீன்கள் (huge cod), சுறாக்கள்(sharks) போன்ற பற்பல கடல் உயிரினங்களைக்கண்டு மகிழலாம். இக்கடற்கரையில் வண்ணவண்ணமான Reef Clownfish bathing in anemone tentacles, கவர்ந்திழுக்கும் அழகுடைய சிங்கமீன்கள், ஆபத்தான விலாங்குமீன்கள் போன்ற நூற்றுக்கணக்கான மீன் வகைகளையும் காணலாம்.
இவை மட்டுமா? 12 மீட்டர் நீளமும் 11 டன் எடையுமுள்ள ராக்ஷசத் திமிங்கலங்களையும், பௌர்ணமி நாட்களில் பவளப்பாறைகளிலிருந்து பிரகாசமான ரோஸ் நிறத்தில் வெளிவரும் முட்டைகளையும், அவை நீர்பரப்பில் ஓர் அற்புதமான நடனத்தைப் போல் மிதப்பதையும் பார்வையாளர்கள் நீரின் அடிப்பகுதியில் கண்டு மகிழலாம்.
அற்புதமான வண்ணக்கலவையுடனும், அழகான வடிவங்களுடனும் காட்சியளிக்கும் நிங்கலூவின் பவளப்பாறை மீன்களையும், முட்டைக்கோசுப்பவளப்பாறை (cabbage corals), மூளைப்பவளப்பாறை (brain corals), கத்தரிப்பூப்பவளப்பாறை (lavender corals), மென்மையான, வண்ணமயமான கிளைப்பவளப்பாறை (delicate colourful branching corals) என ஏராளமான வண்ணங்களிலும் வடிவங்களிலுமான 180 வகையான பவளப்பாறைகளையும் மார்ச் பதினைந்து முதல் மே பதினைந்து வரை காணும் சுற்றுலாப் பயணிகளுக்கு அது வாணாள் கனவான ஓர் அற்புதக்காட்சியாக, அலமுவின் அதிசய உலகத்தைக் கண்முன் கொண்டு வருவதாக விளங்கும் என்பதில் அணுவளவும் ஐயமில்லை!
பங்கில்பங்கில்ஸ் (பூர்னலூலு தேசியப்பூங்கா)
மேற்கு ஆஸ்திரேலியாவின் பூர்னலூலு தேசியப்பூங்காவில் முக்கியமான பூகோள அமைப்பாகத் திகழும் பங்கில்பங்கில்ஸ் மலைத்தொடர் ஆல்கா, சிலிகாவின் இடையில் அமைந்து உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் இயற்கை அழகை அள்ளித்தருகிறது!
பழங்குடிமக்களுக்கு மட்டுமே தெரிந்திருந்த இப்பகுதி, 1980ஆம் ஆண்டு சில ஐரோப்பியர்களுக்குத் தெரிந்து, பின்னர் 1987ஆம் ஆண்டின் நடுவே இதன் தனித்தன்மை உணரப்பட்டு தேசியப்பூங்காவாக அறிவிக்கப்பட்டது.
தெற்கிலிருந்து பார்த்தால் விசிறிப் பனைமரங்களுக்கிடையில் நீரூற்றுகளும், சுனைகளுமாய் இயற்கை எழில் கொஞ்சும் பகுதிக்கிடையில் ஆரஞ்சு – கருப்புப்பட்டைகளுடன் கூடிய தேன்கூடு போன்ற படிமங்களைக் காணலாம். விமானத்திலிருந்து பார்த்தால், கடல் மட்டத்திற்கு 578 மீட்டருக்கு மேல் 200 முதல் 300 மீட்டருக்குப் பரந்து விரிந்துமரங்களும், பசும்புல்வெளிகளும் சூழ்ந்து செங்குத்தான சிறு குன்றுகளுடன் இந்தப் பகுதி காட்சியளிக்கிறது! ஏப்ரல் முதல் நவம்பர் வரை இதைக் கண்டு களிக்கச் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி உண்டு.
இதைக் காணவரும் ஒவ்வொரு பயணியின் உள்ளத்திலும் எழும் வினா, இப்படி மங்கள் எவ்வாறு உருவாயின என்பதுதான். இதற்கு விடை மணற்பாறைகள் (sandstones)! ஓடைகளாலும், நதிகளாலும், அருவிகளாலும் அடித்து வரப்பட்டு ஓரிடத்தில் சேரும் மணல்துகள்கள், பிறகு காலமாற்றங்களாலும், நிலநடுக்கங்களாலும், தட்பவெப்ப மாறுபாடுகளாலும் ஏறக்குறைய 20 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் உருமாறி இந்த வடிவத்தை அடைந்துள்ளன. மேலும், 250 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு சக்தி வாய்ந்த மின்னல் பாய்ந்து 10 கிலோமீட்டர் சுற்றளவில் இந்தப் படிமங்கள் உருவாகக் காரணமாக அமைந்தது எனவும் கூறப்படுகிறது.
இங்கு 130 வகைப்பறவை இனங்களைக் காணலாம். இயற்கை அன்னையின் பேரெழில் மிளிரும் அற்புதமான பகுதி இது! இங்கு வரும் பயணிகளுக்கு உணவும் உறைவிடமும் கிடைக்கத்தக்க வசதிகளை அரசு செய்து தர முன் வந்தால் மிகவும் பயனளிக்கும்!
“