மங்கி மியா டால்பின்ஸ் (Monkey MiaDolphins)
திமிங்கல இனத்தைச் சேர்ந்த டால்பின், அரிய வகை மீனினங்களில் ஒன்று. இவை மனிதர்களிடம் நட்புறவு பாராட்டி அவர்கள் கைகளிலிருந்து உணவைப் பெற்று உண்ணும் அழகிய காட்சியை ஆஸ்திரேலியக் கடற்கரையில் காணலாம். இது, உலகின் மிகச் சில கடற்கரைகளில் மாத்திரமே காணக்கிடைக்கும் அபூர்வமான காட்சியாகும்.
கடந்த முப்பது வருடங்களாகக் காலை ஏழு மணி முதல் நண்பகல் வரை மூன்று தலைமுறைகளைச் சேர்ந்த புட்டிமூக்கு (bottle-nosed Dolphins) டால்பின்கள் தம் செதில்களை அசைத்தவாறு சிறு கூட்டமாக வந்து காண வந்திருப்போருடன் விளையாடுகின்றன. இவ்வகை டால்பின்களுக்கு இடையே நடந்து சென்று உணவைக் கொடுப்பவர்களுக்குச் சில கட்டுப்பாடுகள் உண்டு. கண்காணிப்பார்களின் மேற்பார்வையில் புதிதாகப் பிடிக்கப்பட்ட மீன்களுக்கு மட்டுமே, அதுவும் அவற்றின் பசிக்கு மூன்றில் ஒரு பகுதிக்கு மாத்திரமே உணவு கொடுக்க வேண்டும் எனக் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்கிறார்கள். காரணம், டால்பின்கள் மனிதர்கள் கொடுக்கும் உணவிற்கு அடிமையாகக் கூடாது என்பதற்காக.
கடற்கரையின் ஒரு பகுதி டால்பின்களுடன் பார்வையாளர்கள் நீந்துவதற்கும் அவற்றுடன் குடும்பத்தோடு விளையாடிக் களிப்பதற்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. மங்கி மியா பகுதி, மிக முக்கியமாகக் டால்பினைப் பற்றிய ஆராய்ச்சிக்கென்றே ஒதுக்கப்பட்டுள்ள பகுதியாகும். ஏனென்றால், அங்கு அமைந்துள்ள தெளிந்த, ஆழமற்ற நீரோட்டம் டால்பின்களை அவற்றின் இயற்கைச்சூழலிலேயே ஆராய்ந்து அறியப் பெரிதும் உதவுகிறது. ஆகையினால் டால்பின்களைப் பற்றிய ஆராய்ச்சி மையங்களிலேயே மங்கி மியா மிக முக்கிய மையமாகத் திகழ்கிறது.
“