முழு மூளைச் செயல்பாடுடன் திகழ வழிகள்!
ஆறாவது வழி : தைரியத்துடன் செயலாற்ற!
சோம்பேறித்தனத்தை உதறித் தள்ளவும், தன்மீது உள்ள அவநம்பிக்கையை நீக்கிக் கொள்ளவும், தைரியத்தையும் நம்பிக்கையையும் உருவாக்குவதே இந்தப் பயிற்சியின் நோக்கம்!
சில வேலைகளை உங்களால் முடிக்க முடிவதே இல்லை. சுற்றிச் சுற்றி புறப்பட்ட இடத்திற்கே வருவதுபோல இருக்கும். வானத்திலிருந்து கடவுளின் உதவி வந்தால் தான் வேலை முடியும் என்பது போன்ற சூழ்நிலை இருக்கும். ஆனால் நேரமோ போய்க் கொண்டே இருக்கும். என்ன செய்வது என்றே புரியாத நிலை இருக்கும். இப்படிப்பட்ட சூழ்நிலையில் உடனடி தைரியமும், செயலாற்றும் மனப்பான்மையும் வேண்டும். படைப்பாற்றலுடன் ஒரு பெரிய தாவல் தேவை. அதை எப்படிப் பெறுவது? அதற்கான பயிற்சியே இது!
கை கால்களை உதறிக் கொண்டே உரக்க ஒரு கர்ஜனை செய்து சோம்பலை முறியுங்கள். என்னால் செய்ய முடியும் என்ற நம்பிக்கை வாசகத்தைத் திரும்பத் திரும்ப கூறி அதன் மூலம் ஆற்றலைப் பெறுங்கள். கோபம் வர வேண்டியது எங்கே தெரியுமா? உங்கள் கையாலாகாத்தனத்தின் மீதும், சோம்பலின் மீதும் தான்! கோபத்துடன் முஷ்டியை மடக்கி சோம்பலின் மீது ஒரு குத்து குத்தி அதை அகற்றுங்கள்.
இதனால் உங்கள் மனம் உங்களின் அவநம்பிக்கையிலிருந்து உடனடியாக விடுபடுகிறது. சில சமயம் உங்கள் கழுத்தளவு உள்ள அதைரியம், அவநம்பிக்கை இவற்றிலிருந்து மீள அவற்றை உதறிக் குப்பைத் தொட்டியில் போட்டு உடனடியாக காரியத்தை வெற்றிக்காகத் தொடங்க வேண்டியது அவசியமாக இருக்கும். இப்படிச் செய்தால் அதைப் பெறுவது சுலபம்.
ஏழாவது வழி : கேமரா பார்வை
ஒரு கவிஞனின் பார்வையுடன் கற்பனையைத் தூண்டுவதே இந்தப் பயிற்சியின் நோக்கம்!
புகழ் பெற்ற ஆங்கிலக் கவிஞனான ஷெல்லி தனது ஆற்றலைக் கூர்மைப்படுத்த அற்புதமான ஒரு உத்தியைப் பயன்படுத்தினார். அதன் மூலம் அற்புதமான கற்பனை படைப்பைத் தன் கவிதைகளில் ஏற்றினார். இந்த உத்தியை அவரது கேமரா பார்வை என்று அழைக்கலாம். கேமராவில் உள்ள சிறிய துவாரம் வழியே எப்படி ஒரு காட்சி படமாக பிடிக்கப்படுகிறதோ, பின்னர் எப்படி அது ஒரு பெரிய திரையில் படமாக வெளியிடப்படுகிறதோ.. அதே போல செய்ய முடிவதற்கான உத்தி இது!
தான் பார்த்த அனைத்தையும் தன் கேமரா பார்வையாலேயே அவர் படம் பிடித்தார். பின்னர் தன் கவிதை ஆற்றலின் மூலம் தன் சித்திரங்களுக்கு அவர் உயிர் கொடுத்தார். அது காலத்தால் அழியாமல் இன்றும் உயிருடன் இருக்கிறது!
இதற்கான வழி:-
1. முதலில் உங்களுக்குப் பிடித்த ஒரு காட்சியைத் தேர்ந்தெடுங்கள்.
2. அதை இப்போதுள்ள இந்த கணத்தில் முழு ஆற்றலுடனும் கவனக் குவிப்புடனும் பாருங்கள்.
3. அந்தக் காட்சியில் உள்ள வர்ணங்கள், பின்னணிக் காட்சிகள், ஷேடுகள், அளவுகள், பேட்டர்ன் ஆகிய அனைத்தையும் குறிப்பாகக் கவனியுங்கள்.
4. கண்களை மூடிக் கொள்ளுங்கள். நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் காட்சி அல்லது பொருளை மனக்கண்ணில் அப்படியே திருப்பிக் கொண்டு வாருங்கள். அதை உங்கள் மனம் என்னும் பெரிய திரையில் புரொஜக்டரின் மூலம் போட்டுப் பார்ப்பதுபோலப் பாருங்கள்.
5. கண்களைத் திறந்து நீங்கள் மனத்திரையில் பார்த்ததையும், ஒரிஜினலையும் ஒப்பிட்டுப் பாருங்கள். விட்டு விட்ட சின்னச் சின்ன விஷயங்களையும் கவனமாகப் பார்த்துக் கொள்ளுங்கள்.
6. இதைத் திருப்பித் திருப்பிப் பார்த்து எந்த ஒரிஜினல் காட்சி அல்லது பொருளைப் பார்த்தீர்களோ.. அது அப்படியே மனத்திரையில் வந்து விட்டதா என்று உறுதி செய்யுங்கள்.
பிறகென்ன? கண்ட காட்சியை உங்கள் தேவைக்கேற்ப கவிதையாக உருவாக்கலாம். சினிமா செட்டாக அமைக்கலாம். கதையின் பின்னணியாக அமைக்கலாம்.
இந்தப் பயிற்சி தொடரப்பட்டால் இயல்பாகவே உங்கள் பார்வை என்னும் கேமராவில் அனைத்தும் படம் பிடிக்கப்பட்டு மூளையில் சேமித்து வைத்துக் கொள்ளக் கூடிய ஆற்றல் வந்துவிடும்!
(தொடரும்)