"வீட்டுல கொண்டு விட்டுட்டுப் போறேன் கதிரு… வா." ஒற்றைக் காலை ஊன்றி சைக்கிளில் பேலன்ஸ் செய்து நின்றான்.
"இல்லை. நீ போ. எனக்கு வேற வேலை ஒண்ணு இருக்கு"
"நாளைக்குப் பார்ப்போம். வரட்டுமா?"
செல்வம் சைக்கிளை மிதித்துப்போனபோது உள்ளுக்குள் கலவரப்பட்டிருந்தான்.
காக்கி நிஜார், அரைக்கை கத்தார் சட்டையில் தங்கராசுவைப் பார்ப்பவர்கள் அவர் வயது குறித்து ஆலோசிப்பார்கள். ஐம்பதைத் தாண்டிய இளமை அவரிடம் இருந்தது.
"வா… தம்பி… செல்வத்தைப் பார்த்தியா?
"ம்…தோப்புக்கு… வந்தான்"
‘தோப்பு’ என்று உச்சரித்தபோது குரல் பிசிறியது. தங்கராசுவும் பெருமூச்சு விட்டார்.
"என் கையால வளர்ந்த தோப்பு, சின்னப் புள்ளையில் எங்க அய்யா என்னைக் கொண்டாந்து விட்டாரு. படிப்பு ஏறலை. ஆனா மரத்தைப் பார்த்தா வயசு சொல்லிடுவேன்"
புத்தகப் படிப்பு இல்லைதான். அனுபவம் தந்த ஆரோக்கியப் படிப்பு அவரிடம் இருந்தது.
"திடீர்னு இப்படி செஞ்சுப் பிட்டாங்களே. என்னைக் கூப்பிட்டு, உனக்கு எவ்வளவு வேணும் சொல்லு, தோப்பை விற்கப் போறம்னு பெரியவரு சொன்னதும் ஆடிப் போயிட்டேம்பா.."
கதிரேசனுக்குத் தலை நிமிர்ந்து அவரைப் பார்க்கும் துணிச்சல் இல்லை.
"எப்படி இருந்த ஊரு. பச்சு… பச்சுனு கண்ணும் நெஞ்சும் குளுந்து போவும். இப்ப ஊருல பாதிப் பசுமை அழிஞ்சு போச்சு" இயலாமை குரலில் தொனிக்க கிழவர் விசும்பிய தொனியில் பேசினார்.
"செல்வம் எதுக்கு உன்னைத் தேடறான்?"
"ரைஸ் மில் விலைக்கு வருதாம்"
தங்கராசு பெரியதாய்ச் சிரித்தார். "வயக்காடே இல்லாம போகப் போவது. இவன் ரைஸ் மில்லு வாங்கறானாமா. எதுக்காம்? இடிச்சுப்புட்டு சினிமா தியேட்டர் கட்டவா? இப்பதான் விளை நெலத்தை அழிச்சு பேக்டரி கட்டரானுங்களே. பக்கத்து ஊருல பெரிய கலாட்டா ஆயிருச்சாமே. தெரியுமா?" என்றார்.
"தெரியும். ஆனால் கூக்குரல் வீணாகித்தான் போனது. கெமிகல் பேக்டரி வருவது உறுதியாகி விட்டது. அதே நபர்தான் இந்த இடத்தையும் வாங்குகிறார். வேலைக்கு அமர்த்துகிற பெரிய அதிகாரிகளுக்கு ‘குவார்ட்டர்ஸ்’ கட்டப் போகிறாராம்."
"ஏம்பா… கெடுதல்னு தெரிஞ்சும் துணிஞ்சு செய்றாங்களே… எப்படிப்பா?" கிழவரின் அறியாமைக் குரல் வினோதமாய் ஒலித்தது.
"பணந்தான். கட்டு கட்டா வரப்போகிற லாபம்."
"பெத்த தாயை வேலை பேசிடுவாங்க. சரியான அனம் கெடைச்சுதுன்னு எங்கய்யா சமயத்துல சொல்லுவாரு. நெசந்தான் போலிருக்கு" என்று அலுத்துக் கொண்டார்.
"வரேன்" கதிரேசன் எழுந்தான்.
இங்க வந்து ஆறுதல் தேட முற்பட்டு, மேலும் இதயம் கனத்துப் போனதே மிச்சம்.
குடும்ப நபர்களைப் பேச்சளவில் எண்ணிக்கை இட்டது போக, இன்று அவ்வளவு பேரையும் நேரில் அணிவகுத்தாகி விட்டது. கல்யாணம், துக்கம் இரண்டிலும் மட்டும் இவ்வளவு நபர்களும் ஒன்று சேருவார்கள்.
இன்று கல்யாணம் சந்தோஷமா… இல்லை…
கதிரேசனுக்குத் தன் நினைப்பு ஓடிய வேகம் திகைப்பைத் தந்தது. "இந்த அளவுக்கா பாதிக்கப்பட்டு விட்டேன்?"
"என்னடா… எல்லாரும் வந்தாச்சா?" பெரியவரின் குரல் பாதி அதட்டலும், பாதி உல்லாசமுமாகக் கேட்டது.
கூட்டம் அமைதி காத்தது. தாத்தா எழுப்பி அமர வைக்கப்பட்டிருந்தார். விவரம் அவருக்கும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
"தொண்ணூறுக்குப் பேசி கடைசியா எழுபத்தஞ்சுல தெகைஞ்சது." வியப்பில் விழிகள் விரிய, அவரவர் பங்கு பற்றிக் கணக்கிடத் தொடங்கினர்.
"சமமா பிரிச்சிருக்கு. புள்ளை, பொண்ணு எந்த பேதமும் வேணாம்னு சொல்லிட்டாரு" மருமகன்கள் முகங்களிலும் மலர்ச்சி தெரிந்தது.
"தாத்தா பங்குன்னு பிரிச்சதை அவரு தனக்காவ வச்சுக்கலை"
என்ன செய்யப் போகிறார்…?
"பாதியைக் கதிரேசனுக்கு… மூத்த பேரனாச்சே… மீதியை மட்டும் பேரப் புள்ளைங்க எல்லாருக்கும் பிரிக்கச் சொல்லிட்டாரு…"
கதிரேசனைப் பொறாமையாய்ப் பார்த்தார்கள்.
"இன்னும் பத்திரம் பதியலை. உங்க எல்லாரையும் கலந்து பேசிட்டு முடிவு சொல்லணும். ஆட்சேபனை எதுவும் இருந்தா சொல்லிடலாம். நம்ப குடும்பத்துல யாருக்கும் சங்கடம் இருக்கக் கூடாதுன்னுதான்…"
ஜனநாயக ரீதியில் முடிவை எடுக்க உத்தேசம் என்று தெரியப்படுத்தி பெரியவர் மெளனமானார்.
கூட்டத்தில் கிசுகிசுப்புக் குரல்கள். சில நிமிடங்களுக்குப் பின் லேசான அமைதி.
"எங்களுக்குச் சம்மதம்…"
அப்போது கதிரேசன் எழுந்தான். "என்னை மன்னிக்கணும். உங்களோட ஒத்து வராம வேறு கருத்தைச் சொல்றதுக்கு."
கூட்டம் அவனை விசித்திரமாகப் பார்த்தது. கதிரேசன் எழுந்து நின்றவன் நகர்ந்து போனான். பெரிய ஹாலில் மற்றவர்கள் ஒருபுறம். இவன் மட்டும் தனியே. எதிரே.
"என்னைப் படிக்க வச்சீங்க. வளர்ந்து பெரிய ஆளாக்கினீங்க. இதுக்கெல்லாம் நன்றி செய்ய என்னால முடியாது. இதேபோல நம்ம மூலைத்தோப்பு கொடுத்த பலனுக்குப் பதில் நன்றி செய்யவும் நம்மால முடியாது. பெரியவங்க என் கருத்தை ஏத்துப்பீங்கன்னு நம்பறேன்"
என்ன சொல்ல வருகிறான்…?
"சுற்றுப்புறச் சூழல் பாதிக்கப்பட்டு வருதுன்னு நிறையக் கேள்விப்படறோம். படிக்கிறோம். துன்பம் அனுபவக்கிறவங்க படற கஷ்டம் டிவியில் காட்டறாங்க. பேசறாங்க. ஆனா நம்மைப் பொறுத்தவரை எந்தப் பாதிப்பும் இல்லை. நம்ம சுயலாபம்தான் பெரிசாப் போச்சு…"
"நீ சின்னவன். வாயை மூடு." மூத்த மருமகன் குரல் கொடுத்தார் சற்றுக் கோபமாகவே.
கதிரேசனின் தந்தை கையசைத்தார். "பொறுங்க… அவன் என்னதான் சொல்ல வரான்னு பார்க்கலாம்.
மருமகன் ஈகோ பாதித்த உணர்வில் அமர்ந்தார்.
"நம்ம ஊருல மூலைத்தோப்பால வந்த இயற்கை சந்தோஷம் இன்னைக்கு அழிக்கப்பட்டாச்சு. என்னால பெரிய அளவுல அதை ஈடுகட்ட முடியாது. மத்தவங்க வழிக்கு நான் குறுக்கே வரலை. ஆனா என்னோட வேண்டுகோள் இதுதான். எனக்கு பங்காத் தரப்போகிற தொகை. அப்புறம் இதோ இவங்க தொகை… அப்புறம் இதோ இவங்க பங்கு… இதை மொத்தமா கணக்குப் போட்டு அதற்கு ஈடான நிலத்தை மூலைத் தோப்புல கிரயம் பண்ணித் தர்றோம்… எங்க பேர்லயே விட்டு வச்சிடணும். தயவுசெஞ்சு ஏன் கோரிக்கையை ஏற்பீங்கன்னு நம்புறேன்…" என்றவன் கையசைத்தான்.
வரிசையாய் ஒவ்வொரு குடும்பத்துக் குழந்தைகளும் எழுந்து கதிரேசனின் அருகில் வந்து நின்றனர்.
ஒவ்வொருவருவரின் முகத்திலும் உறுதி, தெளிவு, நிதானம். பெரியவர்கள் ஆடித்தான் போனார்கள்.
இது தனிக்குரல். எதிர்ப்பு இல்லை. சூழலின் மகத்துவம் உணர்ந்த இளைய சமுதாயத்தின் ஒட்டு மொத்தக் கெஞ்சுதல்.
பெரியவர் எழுந்து வந்து கதிரேசனின் தோளைத் தட்டினார். "சரிப்பா"
தங்கராசுவின் கண்களில் மின்னியது சந்தோஷம். அவரைச் சுற்றி இளமையின் அணிவகுப்பு.
சீர்திருத்தப்பட்ட நிலத்தின் நட்டு வைக்க இளங்கன்றுகள்.
"கொண்டா… என்னோட கடைசி மூச்சுக்குள்ளே புது மூலைத்தோப்பைப் பார்த்திருவேன்ல…" கை நீட்டி வாங்கினார்.
எதிர்காலம் நம்பிக்கையாய் நடப்பட்டது.
(நன்றி : அமுதசுரபி)