மூலைத்தோப்பு (1)

துண்டு துண்டாய் மனசுக்குள் வெப்ப வரிகள் ஓடின. கதிரேசன் இப்போது அமர்ந்திருந்தது மூலைத்தோப்பில். அதாவது ‘மூலைத் தோப்பு’ என்று அழைக்கப்பட்ட இடத்தில்.

கிட்டத்தட்ட ஜந்நூறுக்கும் மேற்பட்ட வளர்ந்த மரங்கள், இன்று வெட்டிச் சாய்க்கப்பட்டு இடமே குருஷேத்திரமாய்க் காட்சி தந்தது.

மரத்துக்கு ஆவி உண்டா? உண்டு என்றுதான் தோன்றியது கதிரேசனுக்கு. இதோ கண்ணெதிரே எண்ணற்ற ஆவிகள். மனிதரின் ஆவிகள் போல வெண்ணிறமாய் இல்லாமல் பசுமையான ஆவிகள். தீனமாய்க் குரலெழுப்பிக்கொண்டு குவிக்கப்பட்டிருந்த மரத்துண்டுகளைச் சுற்றிப் பிலாக்கணம் வைத்தன. வயதான இளைய ஆவிகளை மனசு உணர்ந்தபோது கதிரேசனுக்கு யாரோ நெருங்கிய உறவினர்களே கூண்டோடு கைலாசம் போன மாதிரி துக்கம் பீறிட்டது.

"கதிரு" செல்வமணியின் குரல் கேட்டது.

சைக்கிளை மெயின் ரோட்டிலேயே நிறுத்திவிட்டு நடந்து வந்தான்.

"உன்னைத் தேடிக்கிட்டு வீட்டுக்குப் போனேன். நீ வெளியே போயிருக்கிறதாச் சொன்னாங்க. வழியில் நம்ம தங்கராசுவைப் பார்த்தேன். அவர்தான் நீ இங்கே இருக்கிறதாச் சொன்னாரு."

நட்பின் குரல் செவிக்கு எட்டாமல் புலன்கள் யாவும் ஒரே மயக்கத்தில் இருந்தன.

"பரவாயில்லை. இப்பவாச்சும் மனசு வந்து தோப்பை வித்தாரே. பக்கத்து இடமெல்லாம் பிளாட் போட்டு வித்தாச்சு. இது மட்டும் நடுவுல திருஷ்டியா நின்னுச்சு. யப்பா. . . எவ்வளோ பெரிய தோப்பு! எழுபதுக்குக் குறைய மாட்டேன்னு சொல்லிக்கிட்டு இருந்தாரே. என்ன விலைக்குப் போச்சாம்…?"

வெற்றிடம் தந்த பிரமிப்பில் செல்வம் பேசிக்கொண்டு போனான். எதையும் பணத்தால் அளவிடும் மனிதர். இதே தோப்பு போன மாதம்கூட சுற்றிலும் கிளிகளும் குருவிகளுமாய்ப் பச்சைப் பசேலேன்று கவிதை கொஞ்சுகிற அழகில் இருந்தது. அப்படி ஒன்றும் நஷ்டம் ஏற்பட்டதில்லை. பராமரித்த செலவுக்கு மேலாக இத்தனை வருஷமாய்ப் பலன் தந்த தோப்புதான்.

பணமாய்க் கொட்டிய தோப்பு அவ்வப்போது மனத்துக்குக் கொடுத்த குதூகலம், பணத்தால் அளவிட இயலுமா?

‘இன்னைக்குத் தோப்புலதான் சாப்பாடு’

நுனி இலைகளும் அடுக்கு டிபன் கேரியர்களும் வந்து விடும். அன்றைய தினம் முழுவதும் தோப்புக்குள் ஓடுவதும் ஆடுவதும்.

பெரியவர்கள் கம்பளம் விரித்து அமர்ந்திருக்க, சிறுவர்களின் இரைச்சல் புதிய சுதந்திரத்தில்.

ஓடு… ஓடு… எல்லையற்ற தோப்புக்குள் எங்கே வேண்டுமானாலும் ஓடு. ஒளிந்து கொள்.

"ரெடி ஜூட்டா."

"எங்கே, கண்டுபிடி பார்க்கலாம்"

ஜோதி எங்கே, மீனா எங்கே, வேலு எங்கே? என்று அலைந்தது போக, இன்று இந்த மரம் எங்கே, அந்த மரம் எங்கே என்று பதற வைத்து விட்டதே…!

"என்னடா?"

மரத்தில் பெயர் செதுக்கியவனை, தாத்தாவின் குரல் அதட்டியது.

"எம்பெரு தாத்தா. இது எம்மரம்"

"இது என்னோடது"

"இது எனக்கு"

"வச்சுக்குங்கடா… பயலுவளா"

நட்டதோடு சரி. நீரூற்றினால் சொந்தம் கொண்டாடி விட முடியுமா? உள்ளிருந்து பட்டுப் போகாமல், எந்த சக்தி காத்து வந்தது?

முட்டாள் மனிதர்கள். இன்றைக்குத் தேவை எனில் சொந்தம் கொண்டாடுவதும், அதைவிட வேறு பலன் எனில் வெட்டி எறிவதும்… சுயநலப் பிசாசுகள்.

"டேய்… என்னடா?"

செல்வமணி கதிரேசனைப் பற்றி உலுக்கினான்.

"ப்ச்"

"எல்லாரும் எப்ப வராங்க?

"நாளைக்கு"

தகவல்கள். ச்சே. பேசவே அலுத்தது. ‘என்னை விட்டு விடு’ என்று கெஞ்சத் தோன்றியது. விடமாட்டான். லட்சங்கள். பிரமிக்க வைக்கும் தொகை. இன்றைய செய்தியே கதிரேசனின் குடும்பத்துக்குக் கிட்டிய அதிஷ்டம்.

"தாத்தா எப்படி இருக்காரு?"

"இருக்காரு"

"வெளியே நடமாட்டமே இல்லையே"

கதிரேசன் எழுந்து விட்டான். இனியும் இங்கிருக்க முடியாது. செல்வம் விடமாட்டான்.

"போகலாமா?"

கதிரேசன் தலையசைத்தான். செல்வத்தின் குரலில் படபடப்பு.

"நான் கேட்டது நினைவுல இருக்கா.. கதிரு?"

கதிரேசனின் பங்கில் ஒரு தொகையைக் கடனாகக் கேட்டிருந்தான். விலைக்கு வருகிற அரிசி மில்லை வாங்க உத்தேசம். கதிரேசன் வெறும் தலையசைத்தது செல்வத்திற்குப் படபடப்பை அதிகமாக்கியது.

"உன்னைத்தான் நம்பியிருக்கேன்… கதிரு"

திரும்பிப் பார்த்துப் புன்னகை புரிந்தான். "ஞாபகம் இருக்கு… செல்வம்"

"அவனைக் கிரயம் பண்ண விடாமே தடுத்து வச்சிருக்கேன்…"

"நாளைக்கு அவங்க வந்த பிறகுதான் முடிவாகப் போகுது செல்வம்"

"விற்கிறதா முடிவுதானே? பின்னே ஏன் மரத்தை வெட்டினாங்க…?"

உடனுக்குடன் முடிவெடுக்கத் தூண்டும் பதற்றம்.

மெயின் ரோட்டிற்கு வந்து விட்டார்கள்.

(மீதி அடுத்த இதழில்)

About The Author