மிக நீண்ட இடைவேளைக்குப் பின், வஸந்த் – யுவன் ஷங்கர் ராஜாவின் கூட்டணியில் வெளிவந்திருக்கும் ஆல்பம். அனைத்துப் பாடல்களையும் எழுதியிருக்கிறார் நா.முத்துகுமார்.
தற்போது வந்துள்ள யுவனின் படங்கள் கலவையான விமர்சனங்களையே பெற்றுள்ளன. இது அதை மாற்றும் என எதிர்பார்க்கலாம். ஏற்கெனவே ஹிட் கொடுத்த கூட்டணி என்பதால் எதிர்பார்ப்பு அதிகம். சரி, இனி பாடல்களைப் பற்றிப் பார்க்கலாம்.
ஆஹா காதல்!
காதல் பற்றி நாயகியின் ஆச்சரிய விவரிப்புகள்தான் பாடல். நந்தினி ஸ்ரீகர் பாடியுள்ளார். மேற்கத்திய – கர்நாடக இசைக் கலவையாக இதைக் குழைத்திருக்கிறார் யுவன். அதுவும் வார்த்தைகளை உச்சரிக்கும் விதம் ஆஹா! மெல்லிய டிரம்ஸ் இசை அழகாக ஒலிக்கிறது.
அவ்வப்போது வரும் கீபோர்டும் கவனம் பெறுகிறது.
"என்னுடன் நீயா, உன்னுடன் நானா?
நானே நீயா, நீயே நானா?
இது என்ன ஆனந்தமோ!" என வார்த்தைக் கபடி ஆடி இருக்கிறார் கவிஞர்.
காதல் எந்தன் காதல்
இதுவும் நாயகியின் பாடல்தான். ஆனால், இது காதலின் தவிப்பைச் சொல்கிறது. நேஹா பேசின் பாடியுள்ளார். சற்றே பாப் பாடல் போல் தெரிகிறது. பாடல் முழுதும் கிறங்கடிக்கும் குரலில் பாடியிருக்கிறார். இதில் வாத்தியங்களும் பெரும் பங்கு வகிக்கின்றன.
"ஒரு கணம் பார்த்ததும் ஈர்த்தவன்,
மறுகணம் ஏங்கிட வைத்தவன்
காதல் செய்யும் இம்சை போல வேறு ஏதும் இல்லையே!
ஆசை ஏணி, பாம்பு உள்ளே
பரமபதம்தான் வாழ்க்கையே!" தவிப்பின் கவித்துவம்.
மழை மழை மழை
அருமையான ஒரு டூயட். கார்த்திக் "மழை மழை" எனப் பாடலை ஆரம்பிக்கும்போதே மனதில் சாரல் அடிக்க ஆரம்பிக்கிறது. காதல் தருணங்களை மழையுடன் உவமைப்படுத்தியும், பின்பு கேள்வி – பதில் போலவும் ஒலிக்கிறது பாடல். ஸ்வேதா, நாயகியின் குரலாகியிருக்கிறார்.
"நான் உன்னைப் பார்த்த நாளிலே
ஜன்னல் தாண்டிப் பெய்தது மழை!
நீ என்னைப் பார்த்த நாளிலே
மின்னல் மின்னி வந்தது மழை" – நனைக்கும் வரிகள்.
படபடக்குது மனமே
கீ போர்டு இசையின் வருடலுடன், கவிதை வாசிப்புப் போல் ஆரம்பித்துப் பின், ஸ்ருதி சேர்ந்து பாடலாக ஒலிக்கிறது. விட்டுப் போன காதலியையும், காதலையும் அடையாளப்படுத்தும் பாடல். இடையில் வரும் ஆங்கில ராப், பிளேஸின் குரலில் தவழ்கிறது. காதலின் வலியும் தெரிகிறது பாடலில். உணர்ந்து பாடியிருக்கிறார் கிருஷ். ஆங்கில வரிகளும் அருமை!
"உன் அருகினில் நான் இருந்ததும் அடடா!
என் அருகினில் நீ இருந்ததும் அடடா!
இங்கு உடல் மட்டும் பிரிகின்றது
உந்தன் மனம் என்னுள் வாழ்கின்றது" – வலி சொல்லும் வரிகள்.
உனக்காகவே உயிர் வாழ்கிறேன்
ஒரு காதல் பாடல். யுவனின் குரலில்! கேட்கவா வேண்டும்! பிரமாதப்படுத்தியிருக்கிறார். மெஸ்மரிசக் குரலும் வரிகளும் பாடலுக்குப் பெரும் பலம்! மற்ற பாடல்களை விட இசைச் சேர்ப்பில் இது வித்தியாசப்படுகிறது. மொத்தமாக, காதல் ஏக்கம் சொல்கிறது.
கேட்கும்பொழுது அனைவருக்கும் அவர்களது முதல் காதல் ஞாபகத்தை வரவழைக்கும்.
"மலை ஓரத்தில் ஒரு மரத்தடி
அங்கு சின்னதாய் ஓர் வீடடி
சுற்றி எங்கிலும் தனிமை
உன் ஈரக் கூந்தல் என் மீது மோத வேண்டுமே!" – ஏக்க வரிகள்.
ஸ்டாப் த பாட்டு
என்ன நினைத்து இந்தப் பாடலை எழுதினார்களோ?? எனக்கு இது, ஆல்பத்தில் உள்ள மற்ற பாடல்களை வர்ணித்து எழுதியது போலவே தெரிகிறது! நிச்சயம், கேட்டவுடன் உங்களுக்கும் இந்த நினைப்பு வரும். ரமேஷ் விநாயகத்தின் குரல் பாடலுக்குக் கச்சிதப் பொருத்தம். இசையில் கிராமியக் கருவிகளும் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.
"யார் அவன், ராகத்தில் சோகத்தை மீட்டிச் சொன்னான்?
யார் அவன், என் மனம் நினைப்பதைப் பாட்டில் சொன்னான்?
சந்தேகம் இல்லாமல்
என் வாழ்வை யாரோதான் எட்டித்தான் பார்க்கின்ற மாயம் இது" – புதுமைக் கற்பனை.
யுவன் – வசந்த் கூட்டணிக்கு மற்றுமொரு மிகப்பெரும் நிச்சய வெற்றி!
ஆல்பத்தின் ஒவ்வொரு பாடலைப் பற்றியும் தனியாக ஒரு கட்டுரையே எழுதலாம். இந்த ஆண்டின் சிறந்த ரொமாண்டிக் ஆல்பம் என இதைச் சொல்லலாம். அவ்வளவு காதல் நிரம்பி வழிகிறது!
மூன்று பேர், மூன்று காதல் – காதலைப் பிடிக்காதவர்களுக்கும் பிடிக்கும்.”