ஆலயத்தின் உள்ளே நுழைய, பிரம்மாண்டமான கல்தூண்கள் நம்மை வரவேற்கின்றன. ஒவ்வொரு தூணிலும் சிற்பிகளின் கைவண்ணம் மிளிர, சிற்பங்கள் உயிருடன் பேசுகின்றன.
பல தூண்களில், நரசிம்மர் ஹிரண்யகசிபுவை அழிக்கும் காட்சி பல விதமாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது. ஆலயச் சுவரிலும் இந்தக் காட்சி, பெரிய அளவில் சித்திரமாகச் செதுக்கப்பட்டுள்ளது. மேலே தொடர்ந்து செல்ல, பல ஆழ்வார்களை நாம் காண்கிறோம்.
அவர்களுடன் ஸ்ரீ கோவிந்த ராஜப்பெருமாள் உற்சவ மூர்த்தியாக அமர்ந்து காட்சி தருகிறார். இடப் பக்க மேடையில் ஸ்ரீ மதனகோபாலசுவாமி உற்சவமூர்த்தியாகப் புன்னகையுடன் அமர்ந்திருக்கிறார்.
இன்னும் தொடர்ந்து செல்ல, மூலவரின் கருவறையில் நரசிம்மமூர்த்தி, வராக நரசிம்மராக மேற்கு திசை பார்த்தபடி இருக்கிறார். இவரிடம் இருக்கும் சிறப்பு என்னவென்றால், இரு அவதாரங்கள் சேர்ந்தபடி இருக்க, உடலமைப்பு மூன்று விதமாக உள்ளது! முதலாவதாக, அவருடைய திருமுகம் வராகம்; இரண்டாவதாக, ஒரு பாகம் மனிதன் போல் கைகள், கால்கள்; மூன்றாவதாக, இடுப்புக்குக் கீழே சிம்மம் போல் வாலும் இருக்க, மூன்றும் சேர்ந்து வராக நரசிம்ம சுவாமியாகச் சேவை சாதிக்கிறார்.
அக்ஷய திருதியை அன்று மன்னன் புரூரவனுக்குத் தரிசனம் தந்தமையால் ஆண்டில், அன்றைய தினம் மட்டுமே சுவாமியின் உண்மையான தரிசனமாம். அது என்ன உண்மையான தரிசனம்?
அன்று மன்னனுக்குக் கனவில் வந்த ஸ்வரூபம் எப்படி இருந்தது?
தன் பக்தன் பிரஹ்லாதன், சின்னக் குழந்தை, மலை உச்சியிலிருந்து வீசி எறியப்படுகிறான். அவன் கீழே விழுவதற்குள் அவனைத் தாங்கிப் பிடிக்க வேண்டும் என்னும் எண்ணம் மேலோங்கக் கருடன் மேல் ஏறி விரைந்து வருகிறார் சுவாமி . ஆனாலும் வேகம் போதவில்லை; கருடனை விட்டு இறங்கி விடுகிறார். பின், மனோவேகம் கொண்டு குன்றை அடைகிறார். அப்படியே பக்தனை அள்ளிக் கொள்கிறார்!
அத்தனை வேகத்தில், அவரது வஸ்திரம் இடுப்பிலிருந்து நழுவ, அதைத் தன் இடக் கரத்தினால் பிடித்துக் கொள்கிறார். அப்படியே கருடனையும் பார்க்கிறார். பாவம்! கருடன் மிகவும் களைப்புடன் மூச்சு விட்டுக் கொண்டிருக்க, அதற்கு அமுதபானம் கொடுக்கிறார். இதுதான் உண்மையான அந்தத் தரிசனம்!
இந்தக் காட்சியை, வருடத்தில் ஒருநாள், அதாவது அட்சய திருதியை அன்றுதான் காணமுடியும். இந்த நாளில், திருப்பதியில் இருக்கும் கூட்டம் போல் இங்கேயும் பக்தர்களின் கூட்டம் அலைமோதுகிறது! இந்த நிகழ்ச்சிக்குப் பின், நரசிம்மருக்குச் சந்தனக்காப்பு சாற்றப்படுகிறது. இதைச் சந்தனோத்சவத் திருவிழா எனப் பெயரிட்டு மிகவும் பக்தி சிரத்தையுடன் பூஜிக்கின்றனர்.
இங்கு வராகமூர்த்தியைப் பூமாதேவி எப்போதும் பாதபூஜை செய்கிறாள் என்பதால் இவரது பாதங்கள் வெளியில் தெரிவதில்லை! ஆகையால் இங்கு பாதத் தரிசனம் கிடையாது.
தாயார் சந்நிதிக்கு நேரே, ஒரு தூணிற்குப் பட்டுப் பீதாம்பரம் அணிவித்து மலரால் அலங்கரிக்கப்பட்டிருக்கிறது. இந்தத் தூணைக் "கப்பஸ்தம்பம்" என அழைக்கின்றனர். இந்தத் தூணில், சக்கரத்துடன் சந்தானகோபாலசுவாமி அருள்புரிகிறார். பக்தர்கள் இந்தத் தூணைக் கட்டி அணைக்கிறார்கள். தங்கள் வேண்டுகோளைக் கூறி அதை நிறைவேற்றப் பிரார்த்திக்கிறார்கள். பலர் மழலைச் செல்வம் வேண்டித் தூணை அணைக்கின்றனர். ஆரோக்கியம், நல்ல உத்தியோகம் எனப் பல வேண்டுதல்கள் இங்கு நிறைவேறி விடுவதாக மக்கள் கூறுகின்றனர். பிரகாரத்தில் ஆஞ்சநேயர், லக்ஷ்மி நாராயணர் சந்நிதிகளும் இருக்கின்றன.
ஆலயத்து வெளி மண்டபத்தில் பிரசாதம் விநியோகிக்கப்படுகிறது. பிரசாதத்தை உண்டு வராக நரசிம்ம சுவாமியின் அருள் பெற்ற ஆத்மத் திருப்தியுடன் மக்கள் மண்டபத்தில் அமர்ந்து விடுகின்றனர்.
அந்தத் திருமாலை விட்டுப்போக மனம்தான் வருமா?