“3G” நெட்வொர்க்கில் புகுந்து விளையாடுங்கள், என்கிறார்களே – 3G என்றால் என்னவென்று பார்ப்போம்.
கம்ப்யூட்டரின் வளர்ச்சியை பல்வேறு தலைமுறைகளாகப் பிரித்தது போல, தொலைத் தொடர்பு நெட்வொர்க்குகளையும் அவ்வாறு பிரிக்க முடியும். குறிப்பாக கவனம் செலுத்த வேண்டியது, ஒரே ஒரு தொலைத் தொடர்பு அம்சம் மட்டுமே – வயர்லெஸ் டெலிஃபோன் – பயனாளர் பாஷையில் ‘செல்ஃபோன்’.
உங்கள் செல்ஃபோன் வேலை செய்வது எப்படி? செல்ஃபோன், உங்கள் அருகாமையில் உள்ள “கம்யூனிகேஷன் டவர்” உடன் தொடர்பு கொண்ட பிறகு, அந்த “டவர்” உங்களை உலக நெட்வொர்க்கில் இணைத்து விடுகின்றது. டவரின் உயரத்துக்கேற்ப அது தொடர்பு ஏற்படுத்தக் கூடிய பரப்பளவு அதிகரிக்கும் . சிறு வயதில், டி.வி.யின் ஆண்டெனாவை தந்தை வீட்டின் மொட்டை மாடியில் வைத்து, டி.வி. தெரிகின்றதா என்று பார்க்கச் சொல்வாரே, அது போலத்தான்! அத்தனை டவர்களையும் ஒரு “நெட்வொர்க்” இணைத்து வைக்கின்றது. அப்படி இணைக்கும் நெட்வொர்க்குகளைப் பற்றித்தான் இப்பொழுது பேசிக் கொண்டிருக்கின்றோம்.
GSM மற்றும் CDMA என இரு தொழில்நுட்பங்கள் செல்ஃபோனில் உண்டு. ரிலையன்ஸ், டாட்டா இண்டிகாம் போன்ற நிறுவனங்கள் CDMA வசதியைத் தருகின்றன. இதர நிறுவனங்கள், எடுத்துக்காட்டாக, ஏர்டெல், வொடாஃபோன் போன்றவை GSM உபயோகப்படுத்துகின்றனர். இவை இரண்டுமே 2G நெட்வொர்க்கின் வகைகள்.
ஓ! அப்படியென்றால் 2G என்ற ஒன்றும் உண்டா! ஆம், இத்தனை நாட்களாக நாம் (ஏன், இன்னும் கூடப் பெரும்பாலானவர்கள்) உபயோகிப்பது 2G நெட்வொர்க்குகளைத்தான். அதற்கு முன்னால், 1Gயும் உண்டு. இரண்டாம் உலகப்போரின் சமயம், ரேடியோ ஃபோன்களின் மூலம் பேசிக் கொண்டார்களே, அது 0G நெட்வொர்க் ஆகும். “தொலைதூரம்” என்று சொல்ல முடியாவிட்டாலும், அதுவும் வயர்லெஸ்தானே!
1G நெட்வொர்க்குகளின் மூலம்தான் முதன் முதலில் உலகில் இருக்கும் அனைத்து செல்ஃபோன்களையும் இணைக்க முடிந்தது. இது நடந்தது கிட்டத்தட்ட இருபத்தி ஐந்து வருடங்களுக்கு முன்னால். இந்த நெட்வொர்க்குகள் உபயோகித்தது அனலாக் சிக்னல்களை. (அனலாக் என்றால் – நேரத்துடன் தொடர்ச்சியாக மாறும் சிக்னல்கள்). 1991ல் முதன் முறையாக அனலாகுக்கு டாட்டா சொல்லிவிட்டு, டிஜிடலினுள் செல்ஃபோன் குதித்தது. டிஜிடல் என்றால்? தொடர்ச்சியாக மாறாமல், விட்டு விட்டு மாறும் சிக்னல்கள். இதற்கு மேல் விளக்கம் தேவை என்றால், உங்களுக்குத் தெரிந்த எலக்ட்ரிகல்/எலெக்ட்ரானிக்ஸ் பயிலும் மாணவர்களை (ஏன், ப்ளஸ்-டூ மாணவர்கள் கூடப் போதும்!) கேளுங்கள், அழகாக படம் வரைந்து விளக்கம் தருவார்கள்.
அது சரி, இந்த 2Gயால் என்ன லாபம்? கண்கூடாகத் தெரியவில்லையா – அதன் பிறகுதான் பாமரனும் செல்ஃபோன் உபயோகிக்க ஆரம்பித்தான். ஸ்டோரேஜ் என்று சொல்லப்படும் “செய்திகளைச் சேர்த்து வைத்தல்” மிகவும் சுலபமானது. (ஒரே அலைவரிசையில் இன்னும் நிறைய கால்களை அனுமதிக்க முடியும்!)
கிட்டத்தட்ட பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகு இப்பொழுது 3G வந்திருக்கின்றது! புதிதாக என்ன சாதித்திருக்கின்றார்கள்? 2Gயில் என்ன குறை கண்டார்கள்?!
முன்பெல்லாம் செல்ஃபோன்களைப் பேசுவதற்கு மட்டுமே பயன்படுத்திக் கொண்டிருந்தோம். GSM போன்ற 2G நெட்வொர்க்குகளுக்கு இது சர்வ சாதாரணம். அவைகளின் முக்கிய வேலையும் அதுதான். அவ்வப்பொழுது, இணையதள வசதியைப் பயன்படுத்தலாம். ஆனால், உங்கள் கம்ப்யூட்டரின் வேகத்துக்கும், அதன் வேகத்துக்கும் ஏணி வைத்தாலும் எட்டாது. (“இல்லையே, என் ஃபோன் வேகமா இருக்கே” என்று நீங்கள் சொன்னால், பதில் இதுதான் “சின்னச் சின்ன இணையப் பக்கங்களை நீங்கள் பார்ப்பதால்தான். ஒரு நூறு எம்.பி ஃபைலை தரவிறக்க முயற்சி செய்யுங்கள், உங்கள் ஃபோன் என்ன சொல்கிறதென்று பார்ப்போம்!)
அது மட்டும் இல்லை, இணைய வசதிகளை 2G தருவதற்கு, நீங்கள் ஒரே இடத்தில் இருக்க வேண்டும். காரில் பறந்து கொண்டே இணையத்தின் மூலம் சினிமா பார்க்க முடியாது. ஏன், ஒரு பக்கத்தைத் தரவிறக்குவதே கடினம்தான். ரயில்களில் செல்லும்பொழுது செல்ஃபோன் வேலை செய்யாமல் படுத்துமல்லவா, அதைப் பற்றித்தான் சொல்லிக் கொண்டிருக்கின்றேன்!
போதாத குறைக்கு, இப்பொழுது காலம் மாறிவிட்டது, செல்ஃபோன் பேசுவதற்கு மட்டும் பயன்படும் பொருள் அல்ல. நமக்கு செல்ஃபோனிலேயே எல்லாம் வேண்டும். என் மொத்தப் பாடல் தொகுப்பு, பத்துப் பதினைந்து திரைப்படங்கள், ஈ-மெயில், இணையம், எல்லாமும் செல்ஃபோனிலேயே வேண்டும். 2Gயால் இது முடியாது – அதனால்தான் வந்தது 3G.
3G அனைத்துக்கும் பதில் வைத்திருக்கின்றது. சரி, என் போன்ற பொறியாளர்களுக்காக சில கணக்குகள் – 2G தரும் வேகம் கிட்டத்தட்ட பத்து கிலோபைட், ஒரு வினாடிக்கு. அந்த வேகம் ஒரே இடத்தில் இருந்தால் மட்டுமே. நாம் நகர்ந்து கொண்டே இருந்தோமானால் இதுவும் வராது. 3G எவ்வளவு தருகின்றது? கிட்டத்தட்ட இரண்டாயிரம் கிலோபைட்ஸ், ஒரு நொடிக்கு – ஒரே இடத்தில் இருந்தால்! அதி வேகத்தில் பறந்துகொண்டே 3G நெட்வொர்க்கை நோண்டினால், கிட்டத்தட்ட நொடிக்கு முன்னூறு கிலோபைட்ஸ்!!
இனி ட்ரெய்னில் போய்க்கொண்டே, செல்ஃபோனைக் கையில் வைத்த படி உலகைக் கை வசப்படுத்த முடியும். “லேட் ஆகி விட்டது” என்று அவசரக் கடிதம் எழுதலாம். செல்ஃபோன் பில் மட்டும் அல்லாது, எல்லா பில்களையும் உள்ளங்கையிலேயே கட்டி விடலாம். பேங் அக்கவுண்ட்களைப் பராமரிக்கலாம். ஊர் சுற்றிக்கொண்டு இருக்கும்பொழுது தொலைந்து போனால், கூகில் மேப்ஸ் உதவியுடன் எங்கிருக்கின்றோம் என அறிந்து கொள்ளலாம். இவ்வளவு ஏன், சினிமா பார்க்கலாம், பாட்டு கேட்கலாம், கதை படிக்கலாம், அரட்டை அடிக்கலாம் (வீடியோ உடன் கூடிய அரட்டை) – எல்லாம் உள்ளங்கையிலேயே!
ஒரே வரியில் சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால், இதற்கு முன் இருந்த செல்ஃபோன் நெட்வொர்க்களையும், ப்ராட்பேண்ட் தர இணையதள நெட்வொர்க்குகளையும் 3G ஒன்றாக இணைத்துவிட்டது.
நீங்கள் நினைக்கலாம் – நான் இந்தக் கட்டுரையை 3G நெட்வொர்க் ஃபோனில்தான் தட்டச்சு செய்கின்றேன் என – இல்லை! முக்கியமான காரணம், இன்னும் 3G நெட்வொர்க் ஃபோன்கள் சற்று விலை அதிகமாகவே விற்கின்றன. சரவணா ஸ்டோர்ஸில் ஆயிரம் ரூபாய்க்கெல்லாம் கிடைக்காது. இதில் நிறைய லைசென்ஸ் தகராறெல்லாம் வேறு உள்ளது. எல்லாப் பிரச்சினைகளையும் மீறி ஒரு வழியாக நம் நாட்டில் 3G ஃபோன்கள் வந்துவிட்டன. வரவேற்போம்! கிட்டத்தட்ட ஏழு எட்டு வருடங்கள் போராடி இது எல்லா நாடுகளிலும் கிடைக்கும்படி செய்திருக்கின்றார்கள். முன்பு சொல்லியிருந்தது போல, ஒவ்வொரு நாட்டிற்கும் தனியாக லைஸென்ஸ் பெற வேண்டும்.
சரி, ஏழெட்டு ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்தது இப்பொழுது பிரபலமாகி விட்டது. 4G நெட்வொர்க்குகளைப் பற்றிய ஆராய்ச்சி தீவிரமாக நடக்க ஆரம்பித்து விட்டது. ஒரே வரியில் அதைப் பற்றிச் சொல்கிறேன்! ஒவ்வொரு கம்ப்யூட்டருக்கும் ஒரு ஐ.பி. முகவரி இருப்பதை நாம் அறிவோம்! அது போல, ஒவ்வொரு செல்ஃபோனுக்கும் ஒரு ஐ.பி. முகவரி இருந்தால் எப்படி இருக்கும்!! சிந்தனை செய்தால், எனக்கு தலை எல்லாம் சுற்றுகிறது! இன்னும் நான்கைந்து வருடங்களில் 4G பற்றிய விரிவான கட்டுரையை நீங்கள் எதிர்பார்க்கலாம்!
Nice article describing the technical details in simple language– that too in Thamizh.
thanks bro nice info
Article is very Nice……….Thank You
Mஅக்னிfஇcஎன்ட் இன்fஒர்மடின்…..தன்௯ புட்ட்ய்
செல் பேசிக்கும் குழந்தைக்கும் சிலேடை;-
மெல்லச் சிணுங்கும் மெதுவாய் விரல்பதியும்
தொல்லை சில நேரம் தந்திடும் – பல்மறைவாம்
மார்பாடும் பேச்சு மனம்பதியும் கைப்பேசி
சீரார் குழந்தையாம் செப்பு !
-அரிமா இளங்கண்ணன்
சிறு குறிப்பு;பல்=புளூ டூத்; பல் வளராத குழந்தை;மார்பாடும்=கழுத்தில் தொங்கவிடுதல்;கொஞ்சுபவர்கள் மார்பில் குழந்தை சாய்ந்துகொள்ளும்; மனம்பதியும்= நினைவுப்பகுதியில் சேமித்தல்;குழந்தையின் பேச்சு மனதில் நிற்கும்;
Welcome to 3G mobiles and I am waiting for 4G mobiles
This the article is very nice and i get the idea for 3G mobile technology
அடெஙப்பா