மூச்சின் சூட்சுமம்

இடது காலைத் தூக்கி ஆடும் சிவனின் கோலத்தை நாம் அனைவரும் பார்த்திருப்போம். ஏன் இடது காலைத் தூக்க வேண்டும் என தோன்றியதுண்டா?

கால் என்றால் காற்று என்றும் ஒரு பொருள் உண்டு. காற்றுக்கும் இடது பக்கத்திற்கும் தொடர்பு உண்டா? உண்டு.

மனிதனுக்கு மூக்கு ஒன்று என்றாலும் அதில் இரண்டு நாசித் துவாரங்கள் உள்ளன. வலது நாசித்துவாரம் வழியாகவும், இடது நாசித் துவாரம் வழியாகவும் மூச்சுக் காற்று சென்று வந்து கொண்டிருக்கும். வலது பக்கம் செல்லும் சுவாசத்திற்கு சூரிய கலை என்றும், இடது பக்கம் செல்லும் சுவாசத்திற்கு சந்திர கலை என்றும் பெயர். கலை என்றால் சுவாசத்தின் பகுதி என்று பொருள். கலை என்பதை நாடி என்றும் கூறலாம்.

சூரியன் என்றாலே உஷ்ணம்; சந்திரன் என்றாலே குளிர்ச்சி. மனித உடலுக்குத் தேவையான உஷ்ணத்தை சூரிய கலையும், தேவையான குளிர்ச்சியை சந்திர கலையும் தருகின்றன.

உள்ளத்தின் அளவில் மனிதன் நல்ல காரியங்களைச் செய்யும்போது, அவன் குளிர்ந்த மனம் உடையவனாகக் கருதப்படுகிறான். கருணை இல்லாதவனை கல்நெஞ்சச்காரன் என்று குறிப்பிடுவர். மனம் குளிர்ந்தால்தான் கருணை பொழியும். மனிதனின் ஜீவாதரமான இதயம் இடப்பக்கம் இருக்கிறது. அந்த இதயத்தில் எப்போதும் கருணை சுரந்து கொண்டிருக்க வேண்டும் என்பதைக் குறிப்பதற்காகவே சிவன் இடது காலை தூக்கி ஆடிக் கொண்டிருக்கிறார். (இடதுகால் – இடப்பக்கம் ஓடும் மூச்சு.)

சிவனையும், நாம் விடும் மூச்சையும் தொடர்புபடுத்துவது எதனால்?

கால் என்றால் காற்று; காற்றின் மற்றொரு பொருள் ‘வாசி’. வாசி என்றால் ‘படித்தல்’. பாடத்தை வாசிப்பது போல் மனிதன் தன் மூச்சு வரும் வழியை வாசிக்க வேண்டும். வாசித்தால் வாழ்வு வளம் பெறுவோம். மனிதனின் ஆயுள் நீடிக்கும்.

"சிவா சிவா" என்று இடைவிடாமல் தொடர்ச்சியாக சொல்லிப் பாருங்கள். "வாசி, வாசி" என்று வரும். "வாசி வாசி" என்று சொல்லுங்கள். "சிவா, சிவா" என்று வரும். வாசி என்றால் சுவாசம். நமக்கும் சிவனுக்கும் உள்ள தொடர்பு பிரிக்க முடியாதது. ஒன்றின் வழி போனால் மற்றொன்று தாமே நம்மைத் தேடி வரும்.

About The Author

6 Comments

  1. bala

    மிகவும் அருமை. மிகவும் பயனுல்லதாக இருகிரது..

  2. sundaram

    அர்த்ததுடன் கூடிய அருமையான விளக்கங்கள்

Comments are closed.